Monday, February 09, 2009

தமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது

பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு - மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் - அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் - அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் - கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் - என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் "இவை" எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் - துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து - உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் -
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா - தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா - எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் - விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் 'பேரறிவு' எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!

14 comments:

 1. //பருமையுன் நுண்மையுற் பத்தி, வினாசம்,//
  பருமையும், நுண்மை உற்பத்தி, வினாசம், ???
  அனத்தும் எதிர்மறைகளாக வருகின்றன.

  ReplyDelete
 2. //பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்//

  சைத்தன்யம்-ன்னா என்ன ஜீவா?

  //பருமையுன் நுண்மையுற் பத்தி, வினாசம்,
  குருகல், நீட்சியும்//

  அணிமா, மகிமா, கரிமா, லகிமா-வா இது?

  //உருவம்,
  குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
  உணர்க பிரம்மம்//

  அத்வைத சாரம் ரெண்டே வரியில் வந்துவிட்டது!

  ReplyDelete
 3. மிக நன்றாக இருக்கிறது. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. //அதனால் அவ்வறிவிற்குப் 'பேரறிவு'
  என்று பெயர்//

  அந்தப் பேரறிவிற்கும் இறைவனுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.
  அதாவது அவனை அறிதலே அவனாகும்.
  அதாவது அவனை அறிவாங்கு அறிந்து கொண்ட நிலை என்று ஒன்றில்லை. அது அவனில் கலந்த நிலை ஆதலால்.
  அதனால் தான் வள்ளுவப் பெருந்தகை
  'பேரறிவாளன் துணை' என்று
  சொன்னார் போலும்.

  ReplyDelete
 5. வாங்க திவா சார்,
  //பருமையும், நுண்மை உற்பத்தி, வினாசம்,//
  இதுவும் சரியாத்தான் இருக்கு,
  அப்படியே மாற்றிடறேன்!

  ReplyDelete
 6. வாங்க கே.ஆர்.எஸ்,
  சைத்தன்யம் : பேரறிவு : சித் - எல்லாம் அவனாலே, என்னால் ஏதுமில்லை எனும் அறியும் அறிவு.
  இதை 'சுத்த சைத்தன்யம்' என்றும் சொல்வர்.
  இந்த சுத்த சைத்தன்யம், பிம்பமாக அவரவர் புத்தியில் தெரியும்போது, அகங்காரத்தினால், நானே எல்லாவற்றுக்கும் காரணம் என மனம் நினைக்கிறது...

  ReplyDelete
 7. //அணிமா, மகிமா, கரிமா, லகிமா//
  இதெல்லாம் யாருங்க, நடிகை பெயர் போல் அல்லவா இருக்கு!
  :-)

  ReplyDelete
 8. //அத்வைத சாரம் ரெண்டே வரியில் வந்துவிட்டது!//
  இரண்டல்ல!

  ReplyDelete
 9. வாங்க வாசவன்,
  தாங்களும், தொடர்ந்து வரவும்!

  ReplyDelete
 10. வாங்க ஜீவி ஐயா,
  "பேரறிவாளன்" என அழகா முடிச்சிருக்கீங்க!

  ReplyDelete
 11. // அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, //


  உண்மையே. இருப்பினும் இன்னொன்றும் உண்மையாகத் தெரிகிறது.
  அதே சமயம் அறியாமையின் அளவு அறிவு அதிகரிக்க அதிகரிக்க, அதிகரிக்கிறது
  என்பதும் உண்மையே.

  ஒரு பொருளைப்ப்பற்றி சிறிதளவு அறிந்துகொள்கையில் அதில் இன்னமும் நாம் அறியவேண்டியது ஏராளமாக இருக்கிறது என்ற உணர்வு, அதை அடுத்து ஒரு
  உந்துதலும் ஏற்படுகிறது. அப்பொருளை இன்னமும் நுணுக்கமாக, ஆழமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

  1. அறிவு அறியாமையை மேலும் எடுத்துச்சொல்கிற‌து. (The more one knows, the more one becomes aware of one's own ignorance. In other words, ignorance( which is actually be understood as non-awareness ) also rises in direct proportion to the knowledge acquired.)
  2. அதாவ‌து நாம் பெற்ற‌ அறிவின் எல்லைக‌ளை உண‌ர்த்தி அவ்வெல்லைக‌ளை
  அக‌ல‌ப்ப‌டுத்த‌த் தூண்டுகிற‌து.

  ஆக‌, " தெரியாப் பொருள் " என்று என்ப‌து ந‌ம்மை விட்டு அக‌ன்று கொண்டே செல்கிற‌து. அப்பொருளை முற்றிலும் அறிவதில் உள்ள கடினமும் புலப்படுகிறது.
  ஒரு சில‌ர் ம‌ட்டுமே இன்னிலையில் மேன்மேலும் தூண்ட‌ப்ப‌ட்டு தெரியாப்பொருளை
  முழுவ‌துமாக‌த் தெரின்துகொள்ள‌ திட‌சித்த‌த்துட‌ன் முற்ப‌டுகின்ற‌ன‌ர். பெரும்பாலோர்
  த‌ம‌க்குத் தெரின்துவிட்ட‌தென‌ நினைத்து தெரியாத‌வ‌ற்றைத் தெரின்துவிட்ட‌து போல்
  சொல்லி த‌ம்மையும் குழ‌ப்பி ம‌ற்ற‌வ‌ரையும் குழ‌ப்பு கின்ற‌ன‌ர்.

  உண்மையில் தெரி ந்த‌வ‌ர் மெள‌னியாகிவிடுகின்ற‌ன‌ர்.

  சுப்பு ர‌த்தின‌ம்.

  ReplyDelete
 12. வாருங்கள் சுப்புரத்தினம் ஐயா,
  நீங்கள் சொல்லுவது சரிதான்!

  ReplyDelete
 13. ஆத்ம போதம் ஒரு ஒப்பற்ற ஆன்மிக நூல். அதைப் பலரும் பயன்படும் வண்ணம் மிக அழகாகத் தமிழில் வெளியிட்டு வருகிறீர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 14. வருகைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி கணேசன் ஐயா!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails