Sunday, March 15, 2009

தமிழில் ஆத்ம போதம் : பகுதி இருபது

பா 62:
ஒளிர்ந்துலக மெல்லானத னுள்வெளிவி யாபித்
தொளிர்ந்திடு மப்பிரம மோர்வா - யொளிரு
நெருப்பினிற் காய்ந்தங்கி நேரொளிரு மந்த
விரும்புண்டை யைப்போல வே.

பதம் பிரித்து:
ஒளிர்ந்து உலகமெல்லான் அதனுள் வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் ஒளிரும்
நெருப்பினிற் காய்ந்தங்கினேர் ஒளிரும் மந்த
இரும்புண்டையைப் போலவே.

பொருள்:
ஒளிர்ந்து உலகின் உள்ளே, வெளியே, என எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுமான
பிரம்மம் ஒளிருவது -
மந்தமான ஒரு இரும்பு உருண்டையை, நெருப்பில் காட்டி, பழுக்கக் காய்ச்சிட,
அதன் உள்ளும்,புறமும், எல்லாமும் நெருப்பாகவே ஒளிருவதைப் போலவே ஆகும்.

பா 63:
பிரமம முலகிற் பிறிதாகு மந்தப்
பிரமத் தணுவில் பிறிதாய் - பிரமத்தற்
கன்னிய மேது மவிர்ந்தா லதுமித்தை
யுன்னுக கானநீ ரொத்து.

பதம் பிரித்து:
பிரமம் உலகிற் பிறிதாகும் அந்தப்
பிரமத்தின் அணுவில் பிறிதாய் - பிரம்மத்தற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் - அது மித்தையென
உன்னுக கான(ல்) நீர் ஒத்து.

அருஞ்சொற்பதம்:
அவிர்தல் : ஒளிர்தல்
மித்தை : தோற்றமயக்கம்
உன்னல் : நினைத்தல்

பொருள்:
பிரம்மம், உலகத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
அப்படிப் பிரித்து, 'இன்னொன்றாய்'ப் பார்க்கையில்,
பிரம்மத்தினைத் தவிர இன்னொன்று ஒளிர்ந்தால், அது, பொய்யான, காட்சிப் பிழையாகத் தான் இருக்க வேண்டும்,
பாலைவனத்து கானல் நீர்போல.

விளக்கம்:
அத்வைத வேதாந்தத்தின் முடிபாக இப்பாவினைக் காணலாம்.
ஞானம் பெற்றவன், எல்லாவிடத்திலும், பிரம்மத்தினையே பார்க்கிறான்.
மற்றவர்களுக்கு, வெவ்வேறாகத் தெரிபவை எல்லாம், அவன் பார்வையில் 'ஒன்றே'யாம். அதுவே உண்மையாம்.
அறியாமையினால், வெவ்வேறாகத் தெரிந்தவையும் 'ஒன்றென'த் தெரியுமாம்,
அவ்வறியாமை அகன்றதும்.
அங்கே மெய்ஞானம் மட்டுமே, பிரம்மம் எனத் தெளிவித்து ஒளிர்ந்திடச் செய்யும்.
வறண்ட பாலையில் தொலைவில் தெரியும் நீர்ச்சுனை, உண்மையில் தோற்ற மயக்கம் என்பதுபோல,
இவ்வுலகமே பிரம்மம் எனத் தெரிவதும் காட்சிப்பிழையேயாம்.
இவ்வுண்மையை அறிந்தவர்க்கு, தன்னை அறிதலே தலையாய குறிக்கோளாய் இருக்கும்.
தான் யாரெனும் வினவலை விடுத்து, உலகம் யாதெனச் சென்றாற்பின், அது கானல்நீர் வேட்டை போலத்தான் ஆகும்.

"இரண்டாகத் தெரிவதை இருப்பதாகக் கொண்டாலும், அது மறைந்து போகத் தான். ஏனெனில், இரண்டெனத் தெரிவதெல்லாம் காட்சிப் பிழையே. அத்வைதம் மட்டுமே, உன்னதமான உண்மை."
- கௌடபாதரின் மாண்டூக்ய உபநிடதக் காரிகை I, 17

8 comments:

  1. //அறியாமையினால்//
    //காட்சிப் பிழையே//
    //அவ்வறியாமை //

    மாயா வாதம் என்ற ஒன்று கருத்து இங்கு பொருந்தும்?.

    மாயையினால் எல்லாம் இரண்டாகத் தெரிகிறது,மாயை அகன்றால் ஒன்றாகிவிடும்.

    பாம்பு கயிறாகத் தெரிவது மாதிரி. மாயாவினால்(அறியாமை/காட்சிப் பிழை) கயிறு பாம்பு மாதிரி பாம்பு மாதிரி( தெரிகிறது.

    இப்படிச் சொல்லலாமா? கருத்துக்
    கூறுங்கள்.

    அடுத்து அஹம் பிரம்மாஸ்மி என்பது
    “நான் கடவுள்” என்று போஸ்டர்களில்
    உள்ளது. அதற்கு நான் கிழ் வருமாறு
    என்னுடைய “நான் கடவுள்” விமர்சனத்தில்எழுதியிருந்தேன்.
    இப்படிச் சொல்லலாமா? கரெக்டா?கருத்துக் கூறுங்கள்.:-


    /அஹம் பிரம்மாஸ்மி என்பதை “நான் கடவுள்” என்று சொல்வது பாமரத்தனம். கடவுள் நிலையை கடந்து “நானே பிரம்மம்” என்னும் நிலை. இந்த நிலை எதுவும் இல்லாத நிலை.இது ”அதை” உணர்ந்த நிலை.//

    கடவுள் என்பது prekg.பிரம்மத்தை அறிவது என்பது கடைசி.

    நன்றி.

    ReplyDelete
  2. அப்பாடா! வந்தாச்சா? இம்புட்டு நாள் எங்கே போயிருந்தீங்க ஜீவா? :)

    ஆத்ம போதம், உந்தீ பற-ன்னு ரெண்டும் சூப்பராக் கலக்கட்டும்! :)

    ReplyDelete
  3. வாங்க கே.இரவிசங்கர்,
    இங்கு அறியாமை என நான் குறிப்பிடுவதுதான் மாயையா என கேட்க விழைகிறீர்கள் என நினைக்கிறேன்!
    மாயை? - மாயை என்பது பரமனின் சக்தி. பிரம்மம் இயங்குவதற்கே அதுதான் காரணமாம்.
    அதனால்தான், நாம் ஜீவனானோம். ஜீவனாய் இருக்கிறோம். இந்த மாயை நம்மில் விளைவிப்பவை - அவித்தை ஆகும். அவற்றால் விளைவன 'உபாதி' ஆகும். இவற்றைப் பற்றி ரமணர் ஆத்ம போதச் செய்யுட்களில் சொல்வதை கடந்த பகுதிகளில் பார்க்கவும். அவற்றுக்கான சுட்டிகள் இங்கே:
    அவித்தை
    உபாதி

    ReplyDelete
  4. //“நான் கடவுள்” விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.
    இப்படிச் சொல்லலாமா? கரெக்டா?கருத்துக் கூறுங்கள்.:-//
    நான் அப்படத்தைப் பார்க்கவில்லை. ஆகையால், அதைப்பற்றியான கருத்து சொல்ல இயலவில்லை.
    ஆனால், பொதுவாக ஒருவன் 'நான் கடவுள்' எனச் சொல்லலாமா என்று கேட்டால், அது அகந்தைக்கு வித்திடுவதாக இருப்பின், அது 'கூடாது' என்றே இருக்க வேண்டும். நான் பரமனாக இருந்தேன். ஆனால் அதில் நான் என்கிற எண்ணம் எப்போது, தோன்றிற்றோ, அப்போதே அப்பர நிலையை இழந்தேன். மீண்டும் பரமனை அடைய அந்த 'நான்'ஐ தான் இழக்க வேண்டும் என்கிற தெளிவு தான் வேண்டும்.
    /கடவுள் என்பது prekg.பிரம்மத்தை அறிவது என்பது கடைசி.//
    நீங்கள் சொல்லுவதுபோல, இவை 'கடவுள்' என்பது ஒரு நிலை. பிரம்மம் என்பது இறுதி நிலை. கடவுள் என்பது இல்லாமல் இருப்பவர்கள் எந்த வகுப்பு என்கிற கேள்வி எழும்!
    அதை ஆராயப்போனால், மற்றவர் யார் எந்த வகுப்பு எனச் சொல்ல நான் யார் என்ற கேள்வியே மிஞ்சும். ஆகவே, கடவுளையும், பிரம்மத்தினையும் வேறுபடுத்துவதும், அவ்வளவு அவசியமானதல்ல என நினக்கிறேன். கடவுளே பிரம்மமாக இயத்தலும்(transcend) சாத்தியம்.

    வருகைக்கும், வினவல்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  5. வாங்க கே.ஆர்.எஸ்,
    எங்கே போனேன்?
    அங்கிங்கெனாதபடி?!:-)
    வேலை அலுவல்களும், வீட்டு அலுவல்களும்

    இப்போதெல்லாம் நிறைய. எழுதக் கிடைக்கும் நேரமோ மிகக் குறைய, என செய்வது!
    //ஆத்ம போதம், உந்தீ பற-ன்//
    இரமணரின் இரண்டு அருளாசிகளும், பதிவுகளில் வலம் வருவது ஆனந்தம்!

    ReplyDelete
  6. அறியாமை வேறு, மாயை வேறு.

    அறியாவதற்கும் அறியமுற்பட்டவருக்கும், ஏன் , அறிந்தவருக்கும் கூட‌
    ஒன்று மற்றதாக, இரண்டாக , பலவாகப்புலப்படும் தோற்றம் அதாவது
    மாயை இருக்கத்தான் செய்யும்.

    அறிந்தவர் மாயை என உணர்ந்ததை, அறியாதவர் உண்மை என நினைக்கிறார்.
    உணர முற்படும் தருவாயில் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் நடுவில் இருக்கிறார்.


    இருளிலே பாம்பை மிதித்த உதாரணம் இருக்கட்டும். இன்னொன்று சொல்வேன்.

    ஐந்து வயதிலே ஜீவாவின் புகைப்படம், பத்து வயதிலே, பதினைந்து வயதிலே,
    இருபதிலே, இருபத்தி ஐந்திலே, முப்பதிலே, எடுத்த புகைப்படங்களிலே இருந்த‌
    ஜீவா எங்கே !! அவை போலவா இப்பொழுது ஜீவா இருக்கிறார் ! அப்போது
    அந்த புகைப்படங்கள் நிஜமில்லையா ? நிஜம் தான். அது அப்போதைய நிஜம்.
    நிஜம் என நாம் எதை நினைக்கிறோமோ அது மாறிக்கொண்டே வருகிறது. (உடல் தோற்றம் மட்டுமல்ல, உள ரீதியிலும் கூட ) ஆக,
    நமது உடலும் இருளிலே பார்த்த கயிறு போலத்தான் . வெளிச்சம் வரும்போது,
    கயிறு, பாம்பில்லை, கயிறு தான் என விளங்கியது போல, உடலும் உண்மையறிவு
    விளங்கும்போது அசத்யம் , நிலையானது இல்லை என்பது புலனாகிறது.

    ஐந்து வயது ஜீவாவும், இன்றைய ஜீவாவும் ஒன்று என நினைப்பது அறியாமை.
    நினைக்க வைப்பது மாயை.
    வேறு என நினைப்பது உணர்ந்த நிலை. இது ஒரு லெளகீக உதாரணம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. வாஙக சுப்பு ஐயா,
    வினாவுக்கு நேரடியான விடையை விளக்கத்துடன் அளித்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  8. ஊருக்கு போய் இருந்தீங்களோன்னு நானும் நினைச்சேன்.
    //மாயையினால் எல்லாம் இரண்டாகத் தெரிகிறது,மாயை அகன்றால் ஒன்றாகிவிடும்.//

    இரண்டா தெரியாது. தண்ணி அடிச்சாதான் ரெண்டா தெரியும்! :-))

    வேறாகத்தெரியும் என்று பொருள் கொள்க.
    கடவுள் ப்ரிகேஜி ன்னு சொல்லாட்டாலும் அது வேறு ப்ரம்ம நிலை வேறு என்கிற அளவிலே சரிதான்.

    ReplyDelete