எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.
பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.
பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.
விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.
பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.
பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.
பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.
விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.
அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8
- முண்டக உபநிடதம், III, i, 8
ரொம்ப நாளா காணோமே ன்னு பாத்தேன். வேலை அதிகமோ?
ReplyDeleteஆத்ம போதத்தை சூட்டோட சூடா எழுதுங்க!
நாள் விட்ட தொஞ்சு போயிடும்!
வாங்க திவா சார்!
ReplyDeleteஆத்ம போதத்தில் இன்னும் சில செய்யுள்கள் தான் மீதம் இருக்கு! பார்ப்போம், நேரம் கிடைக்கணும்.
// மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார் //
ReplyDeleteபிருஹத் ஆரண்யகத்தில் வரும் இக்கருத்துடைய ஒரு சுலோகத்துக்குப் பொருள் கூறுகையில்
எங்கள் குரு சொல்வார்:
ஐம்புலன்களும் "எங்கெங்கும்" பரவி நிற்கும் " பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் " இல்லை
என உணர்ந்தபடியால், பார்த்தாலும் பிரம்மம் பார்க்கிறது, நான் என்று எதை நான் நினைத்தேனோ அது பார்க்கவில்லை.
கேட்டாலும், நான் என்று எதை நான் நினைத்தேனோ அது கேட்கவில்லை. பிரம்மம் கேட்கிறது. உண்மையில் நானாகிய அஹம் என்பதே பிரும்மம் என உணர்ந்தபடியால், என் ஐம்புலன்களும் அதில் அடங்கும் என
உணரந்த பரவச நிலையில் ஆழ்கிறார்.
அற்புதமாக, தெளிவாக பதவுரை எழுதி இருக்கிறீர்கள்.
ஜீவா ஆன்மீகப் பதிவுலகத்தில் ஒரு நட்சத்திரம்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blospot.com
வாங்க சுப்புரத்தினம் சார்!
ReplyDeleteதங்கள் மேற்கோள் அருமை!