விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் - விளங்கு
மறிவுருவாம் ஆன்மா வறிந்திடத் தன்னைப்
பிறித்தறிவு வேண்டாப் பெறாது.
விளக்கம்:
அங்கே அழகான விளக்கொன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இருண்ட வீட்டுக்கு நல்ல ஒளியை அளித்துக் கொண்டிருக்கிறது.
அந்த விளக்கு எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது என்பதனை - அந்த விளக்கைப் போன்ற "இன்னொரு" விளக்கைக் கொண்டு விளக்க முடியாது. இந்த விளக்கைப் பற்றி விளக்க இன்னொன்று தேவையில்லை.
அதுபோல,
பேரறிவின் உருவாய் சுடர் விடும் ஆன்மாவினை யாதென்று விளக்க, இன்னொரு பொருள் ஏதும் தேவைப்படாது.
ஏன் அப்படி? ஏனென்றால், இந்த ஆன்மாவாகிய விளக்கு தானாக சுடர் விடுகிறது. அதன் ஒளிக்கு அதுவே காரணம். அது பேரானந்தம் தரும் உண்மையான ஞான சொரூபம். ஆதலால், ஆன்மா தான் யாரென்று விளங்கிக்கொள்ள இன்னொன்று தேவையில்லை.
அந்த ஆன்மா, இன்னொருவரின் உதவியில்லாமால் தானாக தன் நிஜ சொரூபத்தினை உணர்ந்திட இயலும் என்றால், குருவின் உபதேசமெல்லாம் எதற்கு எனவும் கேட்கலாம். சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவை அல்லவா?
குருவின் உபதேசமோ அல்லது மறைகள் மூலமாக கற்று அறியும் எந்த அறிவும் தூண்டுகோலாகத்தான் அமையும். சரி, அப்படியென்றால், அந்த ஆன்மா, தான் யார் என்ற உண்மையை அறிந்திட என்ன செய்ய வேண்டும் என்று கேட்கலாம். அதை அடுத்த பா சொல்கிறது.
பா 29:
நேதிநேதி வாக்கினா நீக்கி உபாதியெலா
மீதியாஞ் சீவான்மா மீதிலா - வாதியா
மப்புறம் ஆன்மாக்களின் ஐக்கியமா வாக்கியங்கள்
செப்புவ தொர்ந்து தெளி
இது இல்லை, இதுவும் இல்லை, இதுவும் இல்லை (நேதி நேதி - பிரஹதாரண்யக உபநிடதம்) என்று ஒவ்வொன்றாக ஆன்மாவின் உண்மையான உருவம் இல்லை என்று கழித்துக்கட்டி, இதுவரை சேர்த்துவந்த உபாதியெல்லாம் ஒவ்வொன்றாக கழித்துக்கட்டி, கடைசியில் மிஞ்சி இருப்பது என்ன? சுயத்தில் மீதி இருப்பது என்னவென்றால் - எல்லாவற்றுக்கும் மேலானதான சச்சிதானந்தம் - அதுவே எல்லா ஜீவன்களிலும் ஒன்றாக இருப்பதாகும்.
இவ்வாறு ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதலற்ற தன்மையை உணர்ந்து கொள்வதுதான், தன்னை யார் என உணர்ந்து கொள்வதாகும். இந்த உண்மையை ஆன்மா அறிந்து கொள்வதுதான் அனைத்து துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறுவற்கான ஒரே வழி.
உபாதி: உபாதி என்ற சொல்லுக்கு - ஆன்மாவின் மாயைத் தோற்ற மயக்க நிலை என்று சொல்லலாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றையும் 'நான்' என தவறாக அடையாளம் கண்டுகொள்கிறோம். இதுபோன்ற ஒவ்வொரு நிலைப்பாடுக்கும் ஆன பெயர் 'உபாதி' என வழங்கப்படுகிறது. உபாதி ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.
சச்சிதானந்தம்: சத் + சித் + ஆனந்தம் :
சத்: சகலத்திலும் நிறைந்திருக்கும் பரமன் அல்லது பிரம்மம்.
சித்: சைத்தன்யம் - பேரறிவு - மெய்ஞானம்.
ஆனந்தம்: பேரின்ப பெருங்களிப்புத் தரும் ஆனந்தம்.
ஜீவனில் சத்தானது, சித் என்னும் மெய்ஞானம் தனை மறைத்திடும் உபாதியெல்லாம் இழந்தபின் சித்தம் தெளிகிறது. தெளிந்த ஜீவனில், பரமனின் உண்மை பேரின்ப ஆனந்த நிலையினை அடைவதே சச்சிதானந்த நிலை ஆகும்.
---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்
மிகவும் நல்ல சேவை. தொடரட்டும் ரமணரின் ஆசியோடு.
ReplyDelete....விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே
என்கிற திருமந்திரப் பாடல் (2814) நினைவுக்கு வருகிறது.
மிக்க நன்றி கபீரன்பன் - திருமூலர் மற்றும் ஆதி சங்கரர் - இருவருமே இங்கே விளக்கை உவமையாக பயன்ப்டுத்தி இருக்கிறார்கள்!
ReplyDeleteபக்கத்தில் பார்த்தால் கணினி பற்றி என்னெனவோ சொல்லியிருக்கிறீர்கள்,இங்கு பார்த்தா சத்,சித் என்று விளக்கியிருக்கிறீர்கள்,அருமை.
ReplyDeleteவாங்க குமார்!
ReplyDelete:-)
இந்த நேதி நேதி-யை இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் ஜீவா!
ReplyDeleteயக்ஞவால்கியர், தம் சீடர்களுக்குச் சொல்வது தானே இது?
எது என்று கேட்ட மாணாக்கருக்கு, அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்று சொல்வதை விளக்கில் விளக்கை விளக்க வேண்டுகிறேன்!
முதல் பாடல் அருமை! விளக்கு எங்கே இருக்கு-ன்னு ஒரு விளக்கை வைத்தா தேடுவோம்? தானாத் தெரியாதா? இந்தக் காலத்துப் பசங்க சூரியனுக்கே டார்ச்-லைட்டா-ன்னு கேக்குது பாருங்க! அது போல! :-)
திருமந்திர வரிகள் தான் உடனே நினைவுக்கு வந்தன!
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலும் ஆமே
வாங்க கே.ஆர்.எஸ்!
ReplyDeleteஆம், யக்ஞவால்கியர், தம் சீடர்களுக்குச் சொல்வது தான் நேதி நேதி. சங்கரரும் அதே வாக்கியத்தை ஆத்ம போதத்தில் பயன் படுத்துகிறார்.
//இந்தக் காலத்துப் பசங்க சூரியனுக்கே டார்ச்-லைட்டா-ன்னு கேக்குது பாருங்க! அது போல! :-)
//
இந்த மாதிரி சுவையாச் சொல்ல, உங்களைப் போல் வேறொருவருண்டோ!
மேலும் விளக்க வேண்டுமா!, முயல்கிறேன்:
ஜீவனுக்குள் சுடர் விடும் பரமனாக விளக்கு வரிக்கப்படுகிறது. அந்த விளக்கு தானாக சுடர் விடுகிறது. அது மின்சார விளக்கோ, டார்ச் லைட்டோ போல் இல்லை -- இன்னொரு சக்தியினால் ஒளிர்விட.
அது ஒளிர்வதற்கான சக்தி அதனுள்ளேயே இருக்கிறது.
அப்படிப்பட்ட சக்தி எங்கிருந்து வருகிறது? மூளையிலா? இருதயத்திலிருந்தா? இல்லை ஐம்புலன்களின் கூட்டு சக்தியா? மனமா?
இப்படி ஒவ்வொன்றாக கேட்டு, அது இல்லை, அது இல்லை - என முடிவு கட்டுவதுதான் - நேதி நேதி என சொலப்படுகிறது.
ஏன் நேரடியாக விளக்கமால் இப்படி சுற்றி வளைத்து ஒவ்வொன்றாக இது அல்ல இது அல்ல என சொல்லவேண்டும்? ஏனென்றால் - பிரம்மம் என்பது எந்த இன்னொரு பொருளாலும் விளக்க இயலாது. ஏனென்றால் எந்த இன்னொரு பொருளும் உபாதிகளால் மறைந்தே இருக்கிறது. பரமனெனும் சுடர் விடும் விளக்கை அந்த பரமன் என்னும் விளக்கைக் கொண்டு மட்டுமே விளக்க முடியும்.
அருமையான பதிவுத் தொடர். எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாததும் கூட. நன்றி ஜீவா சார்.
ReplyDeleteமீண்டும் ஒரு முறைபடிக்கிறேன்.
தொடர்ந்து அடுத்த பகுதிகளையும் பதிவு செய்கிறேன் மதுரையம்பதி சார்.
ReplyDeleteவருகை தரவும்.
"ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன் பின்
ReplyDeleteநீயன்றி ஒன்றும் இல்லா நிஜம் காண்பது எக்காலம் ? " பத்திரிகிரியார்.
பூஜியத்தில் உள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆளவந்து
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். = கண்ணதாசன். (சொற்பேதம் பொருத்தருள்க)
டாப் கள் எல்லாமே உபாதிகள் தான்.அவைகளை
மாப் செய்யும்போதுதான் சீவனின்
பித்தம் தெளிகிறது. ஜீவாவின்
சித்தம் தெரிகிறது
சுப்புரத்தினம்
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
வாங்க சூரி சார்! -
ReplyDeleteபத்திரிகிரியார் முதல் கண்ணதாசன் வரை - வைர வரிகளை தந்திருக்கிறீர்கள் - எளிமையாக - The Greatest Truth are always the Simplest என்று சொல்வது இவற்றுக்கு எவ்வளவு பொருந்தும்!
பதிவுக்கோர் நன்றி நவிலப்பட்டுள்ளது
ReplyDeletehttp://pureaanmeekam.blogspot.com ல்
வருக.
சிவ.சூ. நா.
சென்னை.
தங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.
ReplyDeleteதங்களைப்போன்றவர்களில் வருகையால் என் கற்றலை சரி பார்த்துக்கொள்ளுகிறேன். என்னையும் பொருட்டாக மதித்து தங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா!
// ஆன்மாக்களின் ஐக்கியமா வாக்கியங்கள்
ReplyDeleteசெப்புவ தொர்ந்து தெளி//
இதன் விளக்கம் விட்டுப்போயிற்று போல் இருக்கே! மஹா வாக்கியங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து தெளி என்கிறார்.