Monday, January 28, 2008

புத்தாண்டுச் செய்தி - 2008

2008, புதியதொரு வருடம் பிறந்து விட்டது. "புதியன புகுதலும் பழையன கழிதலும்" என்றொரு மொழி உண்டு. அதற்கு ஏற்றவாறு புத்தாண்டு புதியனவற்றை வரவேற்பதாக உள்ளது. புதியனவற்றில் எல்லாமே இன்பம் தருவதாக இருப்பதில்லை. தலைவலிகளும் வருத்தங்களும் வரத்தான் செய்கிறது. அவரவர்க்கு அவரவர் கவலை. ஒருவருக்கு பங்குச் சந்தையில் சரிவு என்பது ஒரு கவலை. இன்னொருவருக்கு தங்கம் விலை ஏறுகிறதே என்ற கவலை. இப்படியாக ஏற்றமும் கவலை. இறக்கமும் கவலை. அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை அனுபவங்கள்... கசப்பும், இனிப்பும் பல்வேறு விகிதங்களில் கலந்தவாறு...

இந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன? கசப்பான அனுபவங்களில் இருந்து ஏற்படும் விளைவுகளை நாம் பொதுவாக விரும்புவதில்லை. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்றொரு மொழி இருப்பினும் நமது சுற்றங்களில் இருக்கும் உரசல்களைப் பெரிது படுத்தி அன்றாடம் வழக்காடுகிறோம். உறவுகளில் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதால் தான் புரிந்துகொள்ளாமல் பிரச்சனைகள் வருகிறது என்பதில்லை. பேசிக்கொள்வதாலும் பிரச்சனைகள் வருகிறது!. உறவுகளில் அவரவர்க்கு உள்ள வட்டங்களில் இருந்து வெளியேவருவதால் அனைவருக்கும் வருத்தங்கள். வெளி வட்டங்களில் எத்தனையோ விஷயங்களை பொருத்துக்கொள்ள நம்மால் இயலுகிறது. ஆனால், உறவுகளில் வரும் உரசல்களையோ பொறுத்துக் கொள்ளாமல் பீரிடுகிறோம்.

ஆண்டொன்று செல்ல வயதொன்றும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வயதோடு சேர்ந்து வளர்ச்சியும் இருக்கிறதா?
ஆண்டாண்டாக நம் அனுபவங்களில் என்னவெல்லாம் நாம் கற்றுக்கொண்டோம்?. நாம் என்ன வழியில் நடந்தோம்? எந்த விதமான பலன்களை அதனால் பெறுகிறோம்?. கற்றுக்கொண்டதனால், கற்றதை சரியாக பயன்படுத்தியதால், எப்போதுமே வரவுதான். எந்த தோல்விக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. எந்த வெற்றிக்கும் இன்னொரு பக்கமும் இருக்கிறது.
இனிய அன்புவங்கள் நமக்கு அதிகம் கற்றுக்கொடுப்பதில்லை. கசப்பான அனுபவங்களில் தான் நாம் கற்றுக் கொள்ள இயலும். நமக்கு நாமே ஆசான். 2007 ஆம் வருடத்திலும் அதற்கு முன்னும் நடந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

2008 ஆம் வருடம் இனிதானதாக இருக்கட்டும்.
--------------------------------------------------------------------------------------
சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் புத்தாண்டுச் செய்தியினைத் தழுவி எழுதி இருக்கிறேன். (தாமதத்தினை பொறுத்தருளவும்)
மூலத்தினைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment