Monday, April 28, 2008

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

சென்ற பதிவில் ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலுடன் விருத்தத்தினைப் பாடத் துவங்குவதை பார்த்தோம்.
தொடர்ந்து, அவர்கள், இன்னொரு பாடலையும் பாடினார்கள்.
அந்தப் பாடல், ஆறாம் திருமுறையான திருநாவுக்கரசர் தேவரத்திலிருந்து ஒரு பாடல்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

'நமசிவாய' எனும் அஞ்செழுத்து திருநாமத்தினை ஒருகாலும் செப்பாதவர்.

தீவண்ணம் உடைய சிவனின் இயல்பை ஒருகாலும் பேசாதவர்.

ஒருகாலும் திருக்கோயிலினை வலம் வாராதவர்.

உண்பதற்குமுன் மலரைப் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதாவர்.

கொடுநோய்கள் தீர வெண்ணீற்றை அணியாதவர்.

இவ்வாறு செய்யாதாரெல்லாம் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர்.
இப்படிப்பட்டவருக்கு, தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செய்து,
வரும் பிறப்பிலும் பயனின்றி இறந்து மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கு அவர் செய்த ஊழ் வினைகளே தொழிலாகி இறக்கின்றார், என்கிறார் திருநாவுக்கரசு நாயன்மார்.
---------------------------------------------------------------
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் திருநீறினையும்,
பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவருக்கும் அபயம் தந்திடும்
நமசிவாய மந்திரத்தின் மாண்பினையும் இவ்வாறாய் எடுத்துரைக்கிறார் அப்பர் பெருமான்.
உம்மையில் தொடர்ந்த வினைகள், இம்மையில் அவன் பாதம் பற்றி அகற்றா வினைகள்,
எல்லாம் சேர்ந்து, மறுமையினைத் தொடர்வதற்கு தொழிலாகவே மாறி விடுகின்றனவாம்.
'ஒருகாலும்' என்ற சொல்லாடலை கவனிக்கவும். ஒருமுறையேனும், மேற்சொன்னவற்றைச்
செய்தாலும், அந்த நற்செயலின் பயனே, நாதனின் அருளைத் தந்திடாதோ.
நற்பயன்களின் தொடர்ச்சியால், வினைப்பயன்கள் வெந்து மடியாதோ.
---------------------------------------------------------------
சென்ற பதிவில் கேட்ட பாடலை இங்கும் கேட்கலாம்: ('உலகெலாம் உணர்ந்து...'தனை தொடர்ந்து கேட்கவும்)

பாடுபவர் : ரஞ்சனி & காயத்ரி
வயலின் : சாருமதி ரகுராமன்
மிருதங்கம் : அருண் பிரகாஷ்
கடம் : குருபிரசாத்
ராகம் : சுத்த தன்யாசி

Ulagellam unarndu....


பி.கு:
விருத்தம் முடிந்தபின், அடுத்த பாடலாக, நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே...' என்ற பாடல் துவங்குகிறது. அந்தப் பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

5 comments:

  1. பஞ்சாக்ஷ்ரத்திற்கு அருமையான விளக்கம்.
    நன்றி

    ReplyDelete
  2. வாங்க கைலாஷி.

    வாங்க மதுரையம்பதி.

    ReplyDelete
  3. அருமையான பதிகப்பாடலை அறிமுகம் செய்தீர்கள் ஜீவா. எளிமையாகவும் இருக்கிறது. நன்றிகள்.

    ReplyDelete
  4. ஆம், குமரன், எளிமையான பாடல்.

    ReplyDelete