Sunday, May 22, 2005

வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்

இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. பாடல் வரிகளும் பொருளும்:
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!

2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?

3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!

4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?

5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?


பாடலை இங்கே கேட்கலாம்:

10 comments:

  1. மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
    படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
    நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
    நாராயணா என்னா நாவென்ன நாவே!

    -*-

    சில இடங்களில் உங்கள் பொருள் தவறாக உள்ளது. நீங்களாகவே சொந்தமாகப் பொருள் கொள்ள முயற்சி செய்துள்ளீர்கள்.

    சேவகன் என்றால் அது அனுமனைக் குறிக்காது. தொல் இலங்கைக் கட்டழித்த சேவகன் = இராமன். சேவகன் என்றால் வீரன். பின்னர்தான் சேவை செய்பவன், வேலைக்காரன் என்ற பொருள்கள் எல்லாம்.

    செய்ய = இங்கு இதை ஒரு வினையெச்சமாக (செய்தல் என்னும் வினையின் எச்சமாக) எடுத்துக்கொள்ளக் கூடாது. இதற்கு மற்றுமொரு பொருள் "perfect" அதாவது குற்றமொன்றுமில்லாத கோவிந்தன். செய்ய கரியவன் = perfect, black coloured Krishna. இந்தப் பாடலிலும் பெரியவன் என்றால் அது பலராமனைக் குறிக்காது. கிருஷ்ணனை - விஷ்ணுவை மட்டும்தான்.

    வெண்ணை கரும் துளசியாக மாறுவதில்லை. தவறாகப் பொருள் கொண்டுள்ளீர்கள். முதல் மூன்று பாடல்களிலும் ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை, அதற்கு சற்றும் மாறான சிறு பிள்ளை விளையாட்டுடன் இணைத்து ஆய்ச்சியர்கள் அதிசயிக்கின்றனர்.

    வண்டுழாய் மாலை - வண் துழாய் மாலை = வளமான துழாய் மாலை. மலர்க்கமல உந்தியாய் = தொப்பையில் தாமரை மலரை வைத்திருப்பவனே, மடங்கலாய் (சிங்கமானவனே) - எல்லாமே திருமாலை மட்டும் குறிக்கும் சொற்கள்.

    ReplyDelete
  2. விட்டுப்போன ஆறாவது பாடலையும் சேர்த்ததற்கு நன்றி பத்ரி.
    பொருள் நானாக கொள்ளவில்லை.
    பொருள் தந்தவரின் ஆங்கில மூலம்:
    http://www.geocities.com/promiserani2/c1473.html

    நீங்கள் சொல்லும் பொருள் மேலும் சரியாகத் தான்தெரிகிறது, நன்றி.

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன சுட்டியைப் பார்த்தேன். பல இடங்களிலும் அவர் தவறாகப் பொருள் கொண்டுள்ளார். உந்தி = வண்டி என்கிறார். உந்தி = தொப்புள்.

    ஆர்வத்தினால் செய்திருக்கிறார்.

    -*-

    சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்தப் பாடல் மிக நன்றாக வந்துள்ளது. ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தப் பாடலைக் கச்சேரியில் யாரும் அதிகமாகப் பாடுவதில்லை.

    இரண்டு நாள்கள் முன்னர் கூட ஒரு தமிழிசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பல பாடல்கள் இருந்தன. ஆனால் இளங்கோவைக் காணவில்லை.

    ReplyDelete
  4. பத்ரி,
    உங்களுக்கு இந்த பாடலின் ஆர்வமும், தமிழ் சொற்களின் ஆழ்ந்த அறிவும் என்னை வியக்க வைக்கின்றன.
    இது போன்ற விஷயங்கள் உங்கள் பதிவுகளில் காணோமே?
    இணையத்தில் தேடியதில், வேறொரு இடத்தில் இதே பாடலை மதுரை திட்டத்தில் இணைத்திருப்பதாக எழுதி இருந்தீர்கள், பார்த்தேன்! நன்றி.

    ReplyDelete
  5. சிலப்பதிகாரத்தின் ஒரு காண்டத்தை நான் மதுரைத் திட்டத்துக்காக தட்டச்சு செய்தேன். அது இந்தக் காண்டமா என்று இப்பொழுது மறந்துபோய்விட்டது.

    எப்பொழுதாவது பழந்தமிழ் இலக்கியங்களில் நான் படித்து ரசித்தவற்றைப் பற்றி என் பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  6. அடடே! சிலப்பதிகாரம். எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் ஒன்று. பத்ரி சொன்னது போல ஆங்காங்கே பிசகியிருந்தாலும் சொல்ல நினைத்ததே சிறப்பு.

    திருமாலையும் முருகனையும் எக்கச் சக்கமாகப் பாடியிருக்கிறார் இளங்கோவடிகள். இத்தனைக்கும் அவர் சமணர்.

    ReplyDelete
  7. Badri is right in his comment. As I mentioned in my article http://www.chennaionline.com/columns/variety/2007/01article07.asp
    while the verses are simple in construction multiple meanings could be construed.
    Badri:
    Please read my article referred to above and send your comments about any misinterpretations I may bave made. Thanks.

    ReplyDelete
  8. Regarding the geocities site, it is an excellent compilation of a multitude of songs in different languages (Thamizh, Telugu, Sanskrit) but several songs are replete with errors. I have corresponded with the webmaster of that site. She is a Telugu person and is doing a yeoman's service. I rectified several errors in various Thamizh songs composed by one Ramaraj. But it (the site)is a monumental effort in other respects

    ReplyDelete
  9. Thanks for adding your comments Sir.
    Also I appreciate your service of sending corrections.

    ReplyDelete
  10. Anonymous3:04 AM

    இளங்கோ அடிகளார் பாடல் முழுவதிலும் கண்ணனையும் மாலவனையுமே தான் நேரடியாகப் பாடுகிறார். அனுமன் துதி வர வாய்ப்பில்லை.
    எனினும் பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்,
    ஜி.ஸன்தானம்

    ReplyDelete