Saturday, September 19, 2020

கனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்

 மும்பை. சனிக்கிழமை மாலை. விக்டோரியா டெர்மினஸ் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தென்பட்ட அந்த நூலகத்துக்குப் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படவே, அப்படியே செய்தேன். இந்தி மற்றும் மராத்தி புத்தகங்கள் நிறையவே இருந்தன. கொஞ்சம் நேரம் ஆங்கிலப் புத்தகங்கள் பகுதியில் சில புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்னதான் இங்கிருக்கு என்று அங்கும் இங்கும் பார்க்க, ஒரு மூலையில் ஒரிரண்டு தமிழ்ப்புத்தகங்கள் தென்பட்டன. அவற்றின் அடியில் ஒரு கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியும் அவற்றில் சில புத்தகங்களும் இருந்தன. 

  ந்த அட்டைப் பெட்டியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் பார்க்க, அதில் குவியலாக இருந்தவை எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் பிரிக்காத பார்சல்களும் இருந்தன. புது புத்தகங்கள் போல் இருந்தது. ஒரு பார்சலை எடுத்து, கொஞ்சமாக முனையில் திறந்து பார்க்கலானேன். உள்ளே பிளாஸ்டிக்கில் ஆன ஏதோ இருந்தது. இன்னும் கொஞ்சம் விலக்கிப் பார்க்கையில், சி.டி தட்டுகளின் உறைகள் போல இருந்தது. வெறும் உறைகள் - புது சி.டி போடுவதற்கான பிளாஸ்டிக் உறைகள். சரி, அடுத்த பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை எடுத்தேன். அதற்குள் இரண்டு மூன்று பேர்கள் என் பக்கத்தில் வந்து, நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கலானார்கள். அவர்களுள் காக்கி உடை போட்டிருந்த ஒருவன் என்னை அதட்டி, "ஏன் நீ இதல்லாம் எடுக்கற?" என்று இந்தியில் கேட்டாவாறு, என் கையில் இருந்தை பிடுங்கிக் கொண்டான். பின்னார் "இங்க வா, இங்க வா", என்று பின்பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போனான். 

"ன்னவெல்லாம் பிரச்சனை வருது பார் இந்த ஊர்ல.." என்று தமிழில் அவன் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டதில் இருந்து அவன் தமிழ்க்காரன் தான் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒரு டாய்லெட் ரூமிருக்குள் சென்று கதவை மூடினான். பின்னர் சி.டி தட்டுகளின் உறைகள் இருந்த பார்சலை ஒரு மூலையில் வைத்தான். 

என்னைக் கோபமாகப் பார்த்து, "என்ன பிரச்சனையை விலை கொடுத்து வாங்கப் பார்க்கிறாயா?" என்றான். 

அவனுடைய மிரட்டலில் பாபாசாப் தாக்ரே எல்லாம் எனக்கு நினைவில் வந்தது. அதே சமயம், சற்றுமுன் அவனது புலம்பலும் நினைவிற்கு வர, இவன் ஊருக்கும் வேலைக்கும் புதிதுபோல என்றும் இந்த பார்சலை மறைத்து வைக்கத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்றும் ஊகித்தேன்.

"என்னப்பா இங்கேதான் எல்லாரும் வந்து போகிற இடம். இங்கே போய் மறைச்சு வைக்கப் பார்க்கிறாயே" என்றேன். 

அவன் வியப்பில் என்னைப் பார்க்க, நான் தொடர்ந்தேன். 

"என்னைக் கேட்டா, இது அந்த அட்டைப்பெட்டியிலேயே குவியலோடு குவியலோடு இருக்கலாம். இங்க நீ கொண்டு வந்து வைச்சாதான் தனியா இருக்கறதனால, ஈசியா யாரும் எடுத்துட்டுப்போக முடியும்" என்றேன். 

அவன் மேலும் வியப்பில் "அப்படியா சொல்றே?" என்றான்.  

"இதுவாவது வெறும் சி.டி. உறை. அங்க மத்த பார்சல்களில் நிறைய புது புத்தகங்கள் இருக்கு போல.. அதெல்லாம் அங்கேயாதன் இருக்கப் போறதா?" என்றேன்.

"இதெல்லாம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் இங்கேயே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்குமோ தெரியலை. அதுவரைக்கும் அதை காப்பாத்தணுமே" என்றான் கவலையில்.

"உன்னோட சாப்-கிட்ட சொல்லி சீக்கிரமா இவற்றை கணக்கில் கொண்டு வரலாம் இல்லே?" என்றேன். அதைச் சொன்ன பிறகுதான் தோன்றியது. ஒருவேளை வேண்டுமென்றெ கணக்கில் இருந்து மறைப்பதற்காகத் தான் இங்கே இருக்கிறதோ என்று.

"தேஷ்முக் சாப்-க்கு தெரியும், ஆனா அவரு இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..." என்றான்.

"இதைக் காப்பாத்தணும்னா ஒண்ணு செய்யலாம், வா" என்று கதவைத் திறந்தவாறு அவனுடன் அந்த அட்டைப்பெட்டி இருந்த இடத்திற்கு சென்றேன்.

   ட்டைப்பெட்டி முன்னால் இருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அது அங்கே காணவில்லை.  

"ஐயோ, என் வேலையே போச்சு" என கீழே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டான் இவன்.  

சுற்றிமுற்றி பார்த்தால் அருகே எங்கேயும் காணோம். அதற்குள் விஷயம் அறிந்து கிடைத்ததை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களா? அப்படி இருந்தாலும், காலியான அட்டைப்பெட்டி மட்டுமாவது இங்கு இருக்கணுமே? சரி - வெளியிலே போய்ப் பார்ப்போம் என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறினேன். கூடவே இவனும் தொடர்ந்தான். அப்போது தொலைவில் இரண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களுக்கு அருகாமையில் சென்றதும், அவர்கள் தூக்கிச் செல்வது அந்தப் பெட்டியைத்தான் என்று தெரிந்தது. அவர்களும் காக்கி உடை அணிந்திருந்தார்கள். ஒருவேளை, அவர்களும் நூலக ஊழியர்கள் தானோ? 

கூடவே வந்த இவன், "ருக்கோ. ருக்கோ. எங்கே எடுத்திட்டு போறீங்க இந்த பெட்டியை?" என்று அவர்களைக் கேட்டான். 

அவர்கள் இவனைப் பார்த்ததும் திகைத்து முழித்தார்கள். அவர்களில் ஒருவன் சுதாகரித்துக்கொண்டு, "தேஷ்முக் சாப் கொண்டுவரச் சொன்னார்" என்றான். 

உடனே நான், "வாங்க நாம எல்லாரும் சேர்ந்து அவர் கிட்ட போவோம்" என்றேன். 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவனும் கூடவே, "ஆமாம், வாங்க போலாம்" என்று உரக்கவே சொன்னதும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

  ல்லோரும் தேஷ்முக் சாப் அறைக்கு சென்று அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர் இந்த இரண்டு பேரையும் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லவே இல்லை என்று. அவர் இந்தப் புதிய புத்தகங்களின் வரவைப் பற்றியே மறந்து போயிருந்தார். நூலகத்தின் கேட்லாகில் சேர்க்கப்படாத இப்புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் பொதுமக்கள் கையில் படும்படி இருந்தன என்பதைக் கேட்டதும் அவரே ஆடிப்போனார். அவரது ஊழியர்களை உடனே அப்புத்தகங்களை கேட்லாகில் சேர்க்கச் சொன்னார். நூலகம் மூடுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வேலையை துரிதமாக முடிப்பதற்கு அவர்களுக்கு நானும் உதவுகிறேன் என்று ஒருகை என்ன, இருகைகளையும் கொடுக்க, அன்றைக்குள்ளே புத்தகங்கள் அனைத்தையும் நூலகத்தின் கேட்லாகில் சேர்த்துவிட்டோம். வேலை முடிந்ததும் வெறுங்கையுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் மனநிறைவுடன்!   😇

6 comments:

  1. நிஜம்மா நடந்ததா? ஆனால் நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன். அவையும் தமிழ்ப் புத்தகங்களா?

    ReplyDelete
  2. வித்தியாசமான பதிவு

    ReplyDelete
  3. வாங்க கீதாம்மா! நிஜமில்லை. கதைதான். ஆனா கற்பனை இல்லை, கனவு!

    ReplyDelete
  4. @கீதாம்மா:
    >>ரசித்துப் படித்தேன்
    மிக்க மகிழ்ச்சி!
    >>அவையும் தமிழ்ப் புத்தகங்களா?
    ஆம்! அதனாலதான் அந்த இடத்தில் அந்த அட்டைப்பெட்டி இருந்தது போலும்!

    ReplyDelete
  5. அருமையான கற்பனை சாரி கனவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் விஜி அக்கா!

      Delete