Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





2 comments:

  1. சிறப்பான தகவல்கள். எடுத்துக் காட்டிய பாடல்கள் சிறப்பு. நன்றி. திட்டக்குடி வழியே பல முறை சென்றிருந்தாலும் இக்கோவில் சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வெங்கர் நாகராஜ். விருதாசலம் - திட்டக்குடி வழியில் மெயின் ரோடில் இல்லாமல், அதிலிருந்து பிரிந்து தெற்கே செல்லவேண்டும்.
      கூகிள் மேப் இணைப்பு:
      https://www.google.com/maps/place/NNT001-Thiruvattathurai+Shiva+Temple+Padal+Petra+Temple/@11.3852911,79.1879849,16z/data=!4m22!1m16!4m15!1m6!1m2!1s0x3bab4a796cb7ceaf:0xe7cd39ca29dbafb1!2sVirudhachalam,+Tamil+Nadu,+India!2m2!1d79.3268894!2d11.515868!1m6!1m2!1s0x3bab3bf0fe6a3d1d:0x9ba996c2a7393a2f!2sTittakudi,+Tamil+Nadu+606106,+India!2m2!1d79.1181599!2d11.4096412!3e0!3m4!1s0x3bab3a7076630aa9:0xbb887fd6792bb7dc!8m2!3d11.3817209!4d79.19053
      கூகுள் மேப் படங்களையும் இணைக்கிறேன்.

      Delete