Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்:



5 comments:

  1. அருமையான க்ருதி, நான் ஒரு காலத்தில் அடிக்கடி கேட்பதாக இருந்த ஒன்று

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, மிக்க மகிழ்ச்சி!

      Delete
  2. இரண்டும் கேட்டேன். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். இதிலிருந்து இப்போதைய சமூகம் மனைவியைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.ஆனால் சிலருக்குப் புராண இதிகாசங்களால் என்ன பயன் என்று தோன்றும்போது இதை எல்லாம் சொல்லுவதும் தவறாகி விடுகிறது. நம் வரையில் பார்த்து, படித்து, கேட்டு ஆனந்திக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது கீதாம்மா. நன்றிகள்!

      Delete
  3. சௌம்யா நேரடியாகக் களத்தில் இறங்க சஞ்சய் முஸ்தீபுகள் செய்து கொள்கிறார். இரண்டுமே அருமை தான்.

    ReplyDelete