அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம் ஆனைமுகனுக்கு முதல் வணக்கம் அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம் ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!
உமைபாலனுக்கு முதல் வணக்கம் ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம் ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம் உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!
மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம் மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம் மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம் மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம் மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம் மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம் முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!
அகர உகர மகரமென ஒலிக்கும் ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!
கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்! அச்சக்கரம் எப்படி இருந்ததாம் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம். தீபாவளிப் பட்டாசு விடும் சமயத்தில் மட்டுமே நாம் அப்படிப்பட்ட சக்கரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆழ்வாரோ, நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார். முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் வினைகளும் தொலைந்தது போலும். சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும் எனக் கொண்டாரோ! அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.
ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி! பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது. இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?
ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி: கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சக்தி: சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
முருகன்: வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கலைமகள்: தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கண்ணன்: பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
திருமகள்: செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்: