Thursday, July 08, 2010

எல்லாம் நீ எனில் நான் எங்கே? - கீதை (அத் 15) - பகுதி 3

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...

11. மனமயக்கம் அகன்றிட, யோக பாதையில் நடந்திட, அது மனதைத் தூய்மை பெறச் செய்திடும். மனத்தூய்மை அடையாதவர்களாலோ, என்ன முயன்றாலும் அவர்களால் இலக்கினை அடைய முடிவதில்லை. எது இலக்கு? 1) அது இன்னொரு பொருளால் ஒளிர்விக்க இயலாதது 2) அது, உயரிய நிலையை அடைந்தபின், அதிலிருந்து திரும்பிட இயலாதது 3) அதனில், ஆன்மாக்கள் எல்லாம் சிறு சிறு பகுதிகளாய் இருப்பது.

மனமது தூய்மை அடைதல் என்றால் என்ன? மனமதில் எதை நீக்க வேண்டும் தூய்மை அடைய? மனமதில், ஐம்புலங்களை துய்ப்பது நான் என்று ஏற்படும் எண்ணத்தைத் தான். பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய சாதனங்கள் கொண்டு, எண்ணச் சீரமைப்பு மேற்கொள்வதே யோக நெறியாம்.

அடுத்த நான்கு சுலோகங்கள், பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான் என்பதனை எடுத்துச் சொல்கின்றன:

12. ஒளிரும் எல்லாப்பொருளும் ஒளிருவது பரமனின் ஒளியினைத்தான். ஐம்புலன் காட்டும் காட்சியானது, அக ஒளியால் புலப்படும்பொழுது தெளிவான மயக்கமற்ற காட்சி கிட்டும்.

சக்தியின் தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். மின்சார சக்தியின் வெளிப்பாடு, மின்சார பல்பில் வெளிச்சமாகவும், மின்சார விசிறியில் அதன் சுழற்சியாகவும், மின்சார உலையில் வெப்பமாகவும் வெளிப்படுவது போல, அவற்றுக்கு தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை சக்தி ஒன்றுதான். அது போலவே, உலகில் ஒளிரும் எப்பொருளும், பரமனின் சைத்தன்ய ஒளியின் வெளிப்பாடுதான்.

மேலும்,

13. பரிதியின் ஒளியினை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியிலும் பயிர்கள் வளர்வதுபோல, அகத்தில் பிரதிபலிக்கும் பரமனின் ஒளிதான் இப்பிரபஞ்சத்தினை வளர்ப்பதாம்.

இயற்கை செழித்து வளர்வதும், பரிதியின் ஒளி மற்றும் வெப்பத்தினால் தாவரங்களும் செழிப்பது போலவும், நிலவொளியினைப் பெற்றும் தாவரங்கள் வளர்வதும் - இப்படியாக, சூரியன், சந்திரன், அக்னி - என சக்தியூட்டும் அனைத்திற்கும் மூல சக்தியாக இருப்பது எல்லையிலா சைத்தன்யமாகும்.

மேலும்,
14. உணவாகவும், உணவின் சுவையாகவும் அமைந்து உடல் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் காரணமாய் அமைகிறான் பரமன்.

உண்ணும் உணவினை செரிக்கச் செய்து, அவற்றின் சத்தினை உடல் வளர்சிக்குப் பயன் படுத்திக்கொண்டு, இதரவற்றினைக் கழிக்கும் ஜீரண உறுப்புகளின் சக்தியாகவும் பரமன் இருக்கிறான்.

"அர்ஜூனா, நானே சூரியன், சந்திரன், பூமியின் இயற்கை வளங்கள்" என்றவன் தொடர்ந்து "நானே உனக்கு உணவாகும் செடிகொடிகள். நான் அவற்றை உண்பவன். நானே உன் வயிற்றின் ஜீரண சக்தியாவும் இருக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் - அவன் மறைமுகமாக கேட்கும் கேள்வியாக - "இதில் ஜீவனான நீ எங்கே?" என்பதும் புலனாகிறது.

மேலும், பகவான் கண்ணன் சொல்கிறான்:

15. "நானே அனைவரது இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். எல்லா வேதங்களும் பரமன் என விளக்குவதும், அவற்றைக் கற்றால் அறியப்படுவதும் நான் தான். வேதாந்தத்தின் ஆசிரியனும் நான் தான்."

இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, 'காணும் மெய்யறிவு' என்ற ஒன்று மட்டுமே மிஞ்சும்.

மெய்யியலில் 'இதயம்' எனக்குறிப்பிடப்படுவது மனத்தைத்தான். நற்பண்புகளால் செழித்து - அமைதியாகவும், விழிப்புடன் இருக்கும் மனத்தை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது, இதயத்தில் மட்டும் அமர்வதாகச் சொல்வதேன்? மனம் எனும் அங்கேதான் அவன் தன்னைத்தான் காட்டிக்கொள்கிறான். அங்கேதான் நாம் அவனை தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு கண்டு கொள்ள இயலுவதால்.

உயிரில்லாத பொருட்களிலும் அவன் இருக்கிறான்; - என்றால் ஏன் அவற்றில் அசைவில்லை, ஏன் அவை வளர்வதில்லை?
ஜீவனின் ஆன்மா பரமனின் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறது. சைத்தன்யத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அனைத்துமே பிரகிருதி மட்டுமே. பிரகிருத்தியில் சில பொருட்களில் மட்டும், சைத்தன்யம் பிரதிபலிப்பதால், அவை உயிர் மற்றும் அறிவு இருப்பதாக (இதனை 'சேதனம்' என்பார்கள்) நாம் சொல்கிறோம். பிரதிபலிக்கக் கூடியதை சூட்சுமம் என்றும், பிரதிபலிக்க இயலாதவற்றை (ஸ்)தூலம் எனவும் சொல்லலாம். நமது சூட்சும உடலும் பிரதிபலிக்கக் கூடியதால், அதனை 'சேதனம்' எனலாம். நம் மனம், சைத்தன்யத்தால் ஒளிர் விடக்கூடைய தன்மை உடையது. அவ்வொளியைப் பெற்று மனம், ஐம்பொறிகளைப் பிரகாசப் படுத்துகிறது. உயிரற்ற பொருட்களில் சூட்சும உடல் இல்லாததால், அவற்றால் சைத்தன்யத்தை பிரதிபலிக்க இயலுவதில்லை.

இவ்வாறாக, பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுறுவி வியாபித்து இருக்கிறான் என்பதை மேற்கண்ட சுலோகங்களில் பார்த்தோம். தொடர்ந்து பகவான் சொல்கிறான்:



16. இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள். ஒரு வகை - அட்சர புருஷன் - மாறுதலுக்கு உட்படாதவர்கள். இன்னொரு வகை - சர புருஷன் - மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.." என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.
இன்னொரு வகை - ஜீவன் முக்தர்கள் - பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் "பட்டை தீட்டும் கல்" போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து - அவற்றை 'பதம்' செய்ய உதவுவார்கள்.

இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:

17. பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

18. "அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்", என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.

19. குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:

குணங்கள் கொண்டது : ஜீவன்

குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்

ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்

சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்

இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.

20. இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.

பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

3 comments:

  1. இரண்டுமுறை படிச்சுட்டேன் ஜீவா.

    //குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

    இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.
    //

    என்று கிடைக்குமோ...

    ReplyDelete
  2. வாங்க மௌலி சார்,
    என்று கிடைக்குமோ என்ற தேடலே என்றும் கிடைக்கச் செய்யட்டும்!

    ReplyDelete
  3. // இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, 'காணும் மெய்யறிவு' என்ற ஒன்று மட்டுமே
    மிஞ்சும்.//

    வியாச பௌர்ணமி ( குரு பௌர்ணிமா ) அன்று ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா நிகழ்த்திய
    (from the SEEKER to the SEER ) என்னும் சொற்பொழிவு இந்த ஆத்ம ஒளியினை ஏன் பார்க்கவேண்டும்
    அதனால் மானுடத்திற்கு கிடைப்பது என்ன
    எனச் சொல்கிறது. நேரம் கிடைக்கும்பொழுது கேட்கவும்.

    http://pureaanmeekam.blogspot.com
    OR
    www. swaminisatyavratananda.org

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete