Wednesday, September 16, 2009

பூவகத்துள் நின்ற பொற்கொடி!

தாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவாரில்லை
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.
- திருமந்திரம் 1717


தானென அறிந்தோ இலையோ எனினும்
தன்னொளிர்ந்திடுமே தானேத் தானேயென்று
யாரறிவார் இதனை? யாருரை செய்வார்?
பாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.

தனக்குள் நின்றாட எண்ணம் இல்லை
தடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை
அலையாய் கரையும் மனது அகத்தில்
நிலையாய் நிலைப்பது எங்கே?

தானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்
தாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ?
தானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த
தாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ?

இன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்
கொண்டபோதெல்லாம் ஒளிர்வதும் அதுதான் !
துன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்
கொண்டபோதெல்லாம் தோன்றாததும் அதுதான் !
என்ன வேண்டும் எனவறிந்த மனமே,
என்ன வேண்டும் இவ்விரண்டில்?
இன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே
ரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.

பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
அவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்
சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே.

துன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்
அன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட
எண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்!
திண்ணமெனக் கொள்வாய் மனமே.

மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து
மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட
எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;
எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.

11 comments:

 1. இக்கவிதையை மிகவும் ரசித்தேன். தியானம் செய்யும் ஆவலை தூண்டுவதாகவும், எங்கும் நிறைந்த பரம் பொருளை உணர உதவுவதாகவும் உள்ளது. பகிர்தலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. //பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
  சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
  சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே//

  சூப்பரோ சூப்பர்! திருமூலர் இப்படி சிவபரத்திலும் அன்னையை முன்னிறுத்தி பல உள்ளுறைகளை ரொம்ப அழகாச் செய்திருக்காரு!
  பூவகத்து உள்நின்ற பொற்கொடி - பேரே எவ்ளோ அழகா இருக்கு!

  புருஷகார பூதை என்று அன்னை மகாலக்ஷ்மியைச் சொல்லுவது வழக்கம்!
  ஆனால் சமயம் கடந்து அனைத்திலும் அன்னை புருஷகார பூதை, அவனிடம் அடைவிப்பவள் என்பதற்கு இந்தத் திருமந்திரமே சிறந்த எடுத்துக்காட்டு!

  ReplyDelete
 3. வாங்க ரமேஷ் சார்,
  தங்கள் இரசிப்பில் மகிழ்ச்சி!
  >>எங்கும் நிறைந்த பரம் பொருளை உணர உதவுவதாகவும் உள்ளது<<
  ஆகா, மிகவும் மகிழ்ச்சி!
  -நன்றிகள்.

  ReplyDelete
 4. வாங்க KRS,
  >>பூவகத்து உள்நின்ற பொற்கொடி - பேரே எவ்ளோ அழகா இருக்கு!<<
  நிரம்பிய அழகு!
  அலர்மேல்மங்கையாரைக் குறிப்பிடுவது எனக்குப் புதுப்பாடம்!
  என் பாடம் இது
  :
  பூவகம் - இதயக் கமலம்
  - அதில் பொன்னாய் ஒளிரும் சக்தி - உமையன்னை - இப்படியே நான் கொண்டேன் :-)
  பொற்'கொடி' - கொடி போல வளைந்து நின்று இருக்கும் குண்டலினி சக்தி.

  ReplyDelete
 5. என்னமோ உணர்ந்து எழுதியிருக்காப்ல இருக்கு. எனக்கும் ஏதோ புரியறாப்ல இருக்கு :) மொத்தமும் வெகு அழகு ஜீவா. மிக்க நன்றி.

  ReplyDelete
 6. வாங்க கவிநயாக்கா,
  உங்களுக்குப் புரியாததா!
  அழகென பாராட்டியமைக்கு அன்புடன் நன்றிகள்!

  ReplyDelete
 7. கவிதை நல்லா இருந்தது. //தானெத்தான் // அப்படின்னா என்ன‌?

  ReplyDelete
 8. வாங்க கேபி அக்கா,
  நல்லது.
  தானெத்தான் - அப்படின்னா என்ன‌?
  அப்படி ஒண்ணும் இல்லை! :-), எழுத்துப்பிழைதான்!
  தானெனத்தான் என்றுதான் இருக்கணும், திருத்திடறேன். கூர்ந்த கவனிப்புக்கு நன்றிகள்!

  ReplyDelete
 9. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  அலர்மேல்மங்கையாரைக் குறிப்பிடுவது எனக்குப் புதுப்பாடம்!
  என் பாடம் இது
  :
  பூவகம் - இதயக் கமலம்
  - அதில் பொன்னாய் ஒளிரும் சக்தி - உமையன்னை - இப்படியே நான் கொண்டேன் :-)//

  ஹிஹி!
  நானும் அலர்மேல் மங்கைத் தாயாரைச் சொல்லலையே ஜீவா! பொதுவா "அன்னை"-ன்னு தானே சொல்லி இருந்தேன்? :))

  கான்செப்ட் என்னான்னா...
  "அன்னை" புருஷகார பூதை! "அவனிடம்" ஜீவனை அடைவிப்பவள்!

  எனவே இந்த புருஷகாரம் என்பது மகாலஷ்மிக்கே பொதுவாகப் பேசப்பட்டாலும், சைவ சித்தாந்தத்திலும் புருஷகாரம் உண்டு என்பதற்கு இந்தத் திருமந்திரமே சிறந்த எடுத்துக்காட்டு-ன்னு சொல்ல வந்தேன்!

  //பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
  பொன்னென மிளிரும்
  சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
  சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே// - என்று அன்னை உமையவளை இங்கு புருஷகார பூதையாகவே (அவனிடம் அடைவிப்பவள்) காட்டுகிறார் திருமூலர்!

  இதை இன்னொரு பாட்டிலும் திருமூலர் காட்டுவார்!
  அ-கரத்தில் இறைவனோடு, இறைவியும் கூடவே எழுந்தருளி இருக்கிறாள் என்பது வைணவத் தத்துவமாகப் பெரிதும் பேசப்பட்டாலும், திருமூலர் காட்டுவதும் அதுவே தான்!

  தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
  வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
  பூரேர் எழுகின்ற "பொற்கொடி தன்னுடன்
  தானேர் எழுகின்ற அகாரமது ஆமே"

  - இப்படிச் சமயம் கடந்து, எத்தனை எத்தனை ஒன்றான தத்துவங்கள் திருமூலரிடத்திலும், நம்மாழ்வாரிடத்திலும்! இந்தப் பதிவில் நீங்க சொன்ன பூவகப் பொற்கொடி அதைத் தான் அடியேனை யோசிக்க வைத்தது!

  ReplyDelete
 10. விளக்கத்திற்கு நன்றி கே.ஆர்.எஸ்!
  >>எனவே இந்த புருஷகாரம் என்பது மகாலஷ்மிக்கே பொதுவாகப் பேசப்பட்டாலும், சைவ சித்தாந்தத்திலும் புருஷகாரம் உண்டு என்பதற்கு இந்தத் திருமந்திரமே சிறந்த எடுத்துக்காட்டு-ன்னு சொல்ல வந்தேன்!<<
  ஓ, அப்படிச் சொன்னீங்களா! :-(

  >>இப்படிச் சமயம் கடந்து<<
  இருப்பது ஒரு சமயம் தான் என்று நான் நினைச்சிகிட்டு இருந்தேன்?!

  ReplyDelete
 11. //இருப்பது ஒரு சமயம் தான் என்று நான் நினைச்சிகிட்டு இருந்தேன்?!//

  ஹா ஹா ஹா!
  நீங்களும் நானும் வேணும்-ன்னா அப்படி நினைச்சிக்கிடுவோம்! ஆனா உலகமும் பதிவுலகமும் வேற! :))

  திருமூலரும், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்"-ன்னு மட்டும் சொல்லி நிறுத்திட்டாரு! ஒன்றே மதம்-ன்னு சொல்லியிருந்தா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணப் பாக்குறாரு-ன்னு அவரையும் மதம் பிடிச்சி கும்மி அடிச்சிருப்பாய்ங்க! :))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails