Saturday, September 26, 2009

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி - நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
- சகலகலாவல்லி மாலை

4 comments:

  1. தக்க சமயத்தில் பார்க்க, கேட்க, மனங்கிரங்கி ரசிக்க கிடைத்த பதிவு.
    பிறர் மகிழ்வது கண்டு தான் மகிழும் உங்கள் உள்ளத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. வருக, திரு.ஜீவி ஐயா,
    நல்லுரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நல்ல பாடல், அளித்தமைக்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  4. வாங்க மௌலி சார்!
    வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete