Sunday, July 12, 2009

"சக்தி" என்று தமிழ்க்கவிதை பாடி...

சக்தி என்பது யாதென்றேன்; சக்தி என்பாய் என்றாய்!
சக்தி சக்தி யென்றேன்; புதுசக்தி பிறக்குது.
பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது.
முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது.
ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது.

(சக்தி என்பது யாதென்றேன்...)
திக்கெங்கும் தேடி திசையெங்கும் ஓடி
அஃதென்றே அறிந்திட, சக்தியுனை நாடி
சந்ததம் பணிந்து சரணம் அடைந்து
முந்தும் முழுமுதல் மூலம் கணபதி
பிந்திடாமல் பிழறாமல் இருத்திட,
வினைகளை வேரறுத்திட,
வேலவன் துணையுடன் விரைவில்
அச்சமதை அகற்றி உச்சிதனை அடைய,
மெச்சும் சக்தி சிவமதை அடைய,
சிவமும் சக்தியும் இணைந்து
சிவசக்தி யாகுமாமே.

(சக்தி என்பது யாதென்றேன்...)
பாரடா, பராசக்தி, எனச் சொன்னான் பாரதி!
பாரினில் ஈதடா, அன்னை அவளே, சிவனின் சக்தி!
எல்லாமுமாய் இருப்பவளாம் சக்தி!
நல்லதெல்லாம் தருபவளாம் சக்தி!
பவத்தினை மாய்த்திடும் சக்தி! - யோக
தவத்தினை புரிந்திடச் சக்தி!
உள்ளத்தொளிரும் விளக்காம் சக்தி!
ஊக்கம் தந்திடும் ஒளியாம் சக்தி!
ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம்!



முண்டாசுக் கவிஞனின் தாக்கத்தில் விளைந்தது, மேற்சொன்ன கவிதை.
தாக்கத்தின் மூலம் ஈதே:

எடுப்பு:
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்திமாரி!
கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரம் தருவாய்.

தொடுப்பு:

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாம் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்!

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி.
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்!

முடிப்பு:
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்!

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

~~~~~~~~~~~
இராகம்: சிந்து பைரவி

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

இங்கும்:

10 comments:

  1. கவிதையாகட்டும், படங்களாகட்டும் அருமையாக இருக்கிறது ஜீவா.

    படங்களை சேமித்துக் கொண்டேன்னும் சொல்லிடறேன் :)

    ReplyDelete
  2. //புதுசக்தி பிறக்குது.
    பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது.
    முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது//

    குறி சொல்லும் கவிதை நல்லா இருக்கு ஜீவா! :)

    //ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது//

    ரக்தி என்றால் என்ன?

    ReplyDelete
  3. வாங்க மௌலி சார்!
    கவிதை வாழ்த்துக்கு நன்றி.
    அழகான படத்தினை வரைந்தவர் உயர்திரு எஸ்.ராஜம் அவர்கள். குவை சைவசித்தாந்த ஆதினத்திற்காக, இதுபோல பற்பல வண்ணச் சித்திரங்களை தீட்டியுள்ளார்.

    ReplyDelete
  4. வாங்க கே.ஆர்.எஸ்!
    கவிதை நல்லா இருக்கா, நல்லது, நன்றி!
    ரக்தி - மனது இன்பத்தில் நிறைவுருக்கும் நிலை.
    ரக்தி இல்லையேல் விரக்தி!

    ReplyDelete
  5. ஆடி மாசம் வரும் முன்னேயே ஸ்பெஷலா?
    :-))
    நல்லது!

    ReplyDelete
  6. பஞ்ச பூதங்கள் நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் குறித்த‌
    பாரதியின் வசன கவிதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    மரபுக்கவிதைகளில் உள்ள வேகமும் வீரமும் உற்சாகமும் அவரது
    வசன கவிதைகளிலும் பளிச் பளிச் என பொங்குவதைப் பார்க்கிறோம்.
    தங்களது புதுக்கவிதையும்
    அது போலவே.
    அப்பொழுதுதான்
    அன்னை வயிற்றுதித்த
    சேயின்
    இதயத்துடிப்பினைக்
    கேட்டிருக்கிறீர்களா ?

    டெர்பியில் ஓடும் குதிரைகளை விட
    ஃபாஸ்ட் பேஸ்.
    ஸ்மார்ட் இன்டீட்.

    சுதா ரகுனாதன் குரல் சிந்து பைரவியில்
    சிறப்பாக இருப்பதில் என்ன அதிசயம் !
    புன்னாக வராளியில் பாடியிருந்தால் இன்னும் எவ்வளவு
    இதமாக இருக்குமென கற்பனை செய்து பார்த்தேன்.
    அதன் விளைவினை நீங்கள்
    கேட்கலாம். யூ ட்யூபில்.
    "தேடியுன்னை" என்று தேடினால்,
    பிச்சு பேரன் எதிர் வந்து நிற்பான்.


    சுப்பு ரத்தினம்.
    புதிய வலைப்பதிவு இரண்டு. (மொத்தம் பத்து. கிழவனுக்கு வேற வேலையே இல்லை போல இருக்கு ! )
    ராக ஆலாபனை மட்டுமே ஒன்று.
    http://raagampadunga.blogspot.com
    உடல் நலம் மற்றும் மருத்துவ முன்னேற்றம்.
    http://Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  7. வாங்க திவா சார்!
    நமக்கு ஆடி மட்டுமல்ல, ஆடிக்கு முன்னாலேயும், ஏன், எப்போதுமே ஸ்பெஷல் தான்! :-)
    பரம்பொருளுக்கு நாளென்ன, கிழமையென்ன, மாசமென்ன!
    சக்தி என்ற 'நேரம்' 'எல்லாமே' ஸ்பெஷல்தான்!

    ReplyDelete
  8. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா,
    தங்கள் கவிதைப் பாரட்டினை மிகவும் இரசித்தேன், மிக்க நன்றி!

    புதிய இரண்டு வலைப்பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

    சுதா ரகுநாதனின் குரல் எப்போதும் இம்ப்ரசிவ்!

    புன்னாக வராளியினை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

    பாரதியின் வசனை கவிதைகளும் 'நச்' சென்று நேரடியாக நெற்றிப்பொட்டில் தெரித்தாற்போல் நிதர்சனமாய் உண்மையினை வெட்டவெளிச்சமாக்கும் அல்லவோ!

    உதாரணம்:
    சக்தி:
    சக்தி முதற் பொருள்.
    பொருளில்லாப் பொருளிலே விளைவில்லா விளைவு.
    சக்திக் கடலிலே ஞாயிறு ஒரு நுரை.
    சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு. ஒரு ஸ்வரச் ஸ்தானம்.
    சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.
    சக்தியில் கலைகளிலே ஒளி ஒன்று.
    சக்தி வாழ்க!

    காற்றையும், மழையையும் பாடிவிட்டுச் சொல்கிறார்:
    காற்று சக்தி குமாரன்.
    அவனை வழிபடுகின்றோம்.

    ReplyDelete
  9. அழகிய கவிதை. பண்ணுடன் கேட்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  10. தங்கள் இரசிப்பினை சுவைத்து மகிழ்ந்தேன், மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete