Monday, April 07, 2008

எப்போது ஓடுவதை நிறுத்தப் போகிறோம்? & காகிதத்தில் மேகம்

என்ன நடக்கிறது, என்னைச் சுற்றி இருப்பவை என்னவையாய் இருக்கிறது?

எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் அந்த நீல வானம், ஒளிர் விடும் ஆதவன், அழகான நீர்நிலை அல்லது இனிமையான சோலைவனம் - இப்படியாக நாம் இரசிக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் - இவற்றை அருகே சென்று தொட்டுப் பார்க்க இயலுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எவ்வளவு ஓட வேண்டும்?

மனிதன் வாழ்வதே சந்தோஷத்திற்காகத்தான். அந்த சந்தோஷம், இப்போது, இங்கேயே கிடைக்கக் கூடியது. எங்கேயும் தேடிப் போக வேண்டாம். எவ்வளவு தூரமும் ஓட வேண்டாம். இங்கேயே, இப்போதே, இந்தச் செயல் செய்யும்போதே கிடைக்கக் கூடியது.
ஜென் துறவி திச் நாட் ஹான் சொல்லுவதைக் கேளுங்க:



ஒரு காகித்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் உங்களுக்கு என்ன தெரிகிறது?

மேகங்கள் தெரிகிறதா? ஆம், திச் நாட் ஹான் அவர்களுக்கோ, மேகங்கள் தெரிகிறதாம், அவரே சொல்கிறார் பாருங்கள்:

நீங்கள் கவிஞராய் இருக்கக்கூடின்,
மேகக்கூட்டங்கள் உலவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள் -
இந்தக் காகித் தாளினில்.
மேகங்கள் இல்லாமல், மழை இல்லை.
மழை இல்லாமல், மரங்கள் இல்லை.
மரங்கள் இல்லாமல், நம்மிடம் காகிதம் இருப்பதில்லை.
ஆகவே, இதோ மேகம் இங்கே இருக்கிறது.
மேகமும், காகித்தாளும், ஒன்றுக்கொன்று மிக அருகே...
மரத்திற்கு சூரிய வெளிச்சம் தேவை - அது மரமாய் இருக்க.
இந்தக் காகிதத்தாளை உற்று நோக்கினால்,
அதில் மேகமும்,
சூரிய வெளிச்சமும் மட்டுமல்ல,
எல்லாமும் இருப்பதும் தெரிந்திடும்.

Thursday, April 03, 2008

உனை எப்படி நான் மறப்பேன்? : இதயக் கமலத்தில்...

சென்ற பதிவில் என்னை மறவாமல் இருக்க வேண்டும் என தியாகராஜர் இறைவனிடம் மன்றாடுவதை பைரவி ராகக் கீர்த்தனையில் பார்த்தோம் அல்லவா?

இந்தப் பதிவில் எப்படி மறப்பேன் ஐயா என்கிற உருப்படியினைப் பார்ப்போம். அழகு தமிழில் நிறைவான பாடல்கள் பல படைத்துள்ள கடலூர் எம்.சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவரது தமிழிசைத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. 'பாடலீசன்' என்பது அவரது முத்திரை என நினைக்கிறேன். அவருடைய இன்னொரு பாடல் மிகப் பிரபலமானது - இராகமாலிகையில் அமைந்தது - நீங்களே சொல்லுங்களேன்.

இந்தப் பாடலைக் கேட்குமுன் சிறியதொரு முகவுரை: இதயக் கமலத்தில், அனஹதத்தில், தூய அன்பாக மலர்ந்திடும் முருகனை எப்படி மறக்க இயலும்? சந்தோக்ய உபநிடதம் அத்தியாயம் எட்டில் (1.3) சொல்லப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன்: "இந்த இதயக் கமலத்தில் தான் எல்லாமும் இருக்கிறது. சொர்கமும், பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஆகாசமும், நெருப்பும், காற்றும், சூரியனும், சந்திரனும், சுடர் விடும் விண்மீன்களும் இங்கேதான் இருக்கின்றன."
இப்படி எல்லாமுமாய் இருக்கும் தூய சச்சிதானந்தம், தூய அன்பில் துலங்கிடும். துலங்கித் துலங்கி துளிர் விடும். துளிர் துளிர் விட, தூர்ந்து வளரும். தூர்ந்து வளர வளர, துரியம் அதை அடைந்திட பாதை தனைக் காட்டிடும்.
இதயக் கமலத்தில் அன்பே வடிவாய், ஆனந்தப் புன்னகையுடன், அருந்தவப் புதல்வனாய், பழனியப்பனாய், அவன் அருள் வேண்டி, இந்தப் பாடலை படித்திடுவோம்:

எடுப்பு:
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா? - முருகா - என்
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா?

தொடுப்பு:
பதமலரை தினம் இசை என்னும் மலராலே
பாடிப் பணிந்தேனய்யா - பழனியப்பனே...

முடிப்பு:
பட்டம் பதவி என்ற புகழறியேன் - நான்
பட்டம் பதவி என்ற புகழறியேன்... கந்தக்
கோட்டமே சதமென்று நம்பி வந்தேன்
கஷ்டமே வந்தாலும்... முருகா...
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே
கண்கண்ட தெய்வமே - பாடலீசன் குமரா...

என் இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா, முருகா...

----------------------------------
இராகம்: சூத்ரதாரி (நடபைரவி ஜன்யம்) (ஸ ரி2 ம ப த1 ஸ் - ஸ் த1 ப ம ரி2 ஸ)
தாளம்: ஆதி
இயற்றியவர்: கடலூர் எம்.சுப்ரமணியம்
பாடுபவர்: நித்யஸ்ரீ மஹாதேவன்

இதயக் கோயிலில் வசித்திடும்


[play]