Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


5 comments:

  1. ஸ்ரீராமஜெயம்!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ராமேஷ் சாதாசிவம். இராமனின் தூய அன்பராகிய தாங்ளும் வந்து படித்து மறுமொழி இட்டதில் மகிழ்சி!

      Delete
  2. //பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள். அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.//

    என்ன அருமையான கோணம்! அற்புதமான பார்வை. இந்த மாதிரி ஒரு கோணத்தில் பார்க்கலாம் என்பதை அறிந்திலேன். பகிர்வுக்கு நன்றி.

    அது சரி, புத்தகம் மின்னாக்கம் செய்யப் பட்டதா? அப்படி எனில் நான் பார்க்கலையே? ம்ம்ம்ம்ம்? தேடிப் பார்க்கிறேன். மீண்டும் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திவா சார் இதனை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். தங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  3. இப்பொழுதுதான் தனுஷ்கோடி பதிவொன்று படித்துவிட்டு வந்தேன். அந்த ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமும் இராமனோ. ராமனை நினைக்கையிலேயே மனம் மகிழ்கிறது. உங்கள் பதிவு இன்னும் இன்பத்தக் கொடுக்கிறது. மிகவும் நன்றி திரு .ஜீவா.

    ReplyDelete