Monday, November 05, 2012

சுழலும் ஞாயிறு

பூமிப்பந்து இடைவிடாமல் சுழல்கின்றது.
சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. 
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும்,
அதற்கப்பாலும் சிதறிக்கிடக்கும் வானத்து மீன்களெல்லாம்
ஓயாது சுழன்று கொண்டேதான் இருக்கின்றன.
- மகாகவி பாரதியார்.


சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும், அவற்றைச் சுற்றி வரும் துணைக்கோள்களும் சூரியனைச் சுற்றி வருவது பொதுவாக பேசப்படும் ஒன்று. ஆனால் சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறதா, அல்லது அதுவும் நகர்கிறதா, சுழல்கிறாதா?

சூரியக் குடும்பம் அமைந்திருக்கும் நமது கேலக்ஸியை பால் வழி மண்டலம் (Milky way) என்றழைக்கிறோம். இந்த பால் வழி மண்டலத்தின் மையப்புள்ளியைச் சுற்றித் தான் சூரியனும், சூரியக் குடும்பமும் சுற்றி வருகின்றன. சராசரியாக ஒரு மணிக்கு 792,000 கி.மீ வேகத்தில். (அண்மையில் நாசா நிகழ்த்திய சோதனைகள், அதை விடக் குறைவாக மணிக்கு 83,700 கி.மீ வேகத்தில் தான் சூரியன் நகர்வதாக கணித்துள்ளது.)


சூரியனைச் சுற்றி வரும் பூமியின் பாதை நீள் வட்டப் பாதை என்பதை அறிவோம். ஆனால், சூரியன் நகர்வதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், திருகுச்சுழல்(helix) வடிவத்தில் பாதை அமைகிறது:



நமது கேலக்ஸியினை, பூமியிலிருந்து பார்க்க இயலுமா? ஆம், இது இரவு நேரத்தில், மங்கலான வெள்ளைப் பட்டையாகத் தெரிகின்றது. இவ்வாறு வெண்ணிறப் பட்டையாகத் தெரிவதனாலேயே இதற்குப் பால்வழி என்னும் பெயர் ஏற்பட்டது. முதலில் உள்ள படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டுவது, பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியினை. மேலும், நமது பால்வழி மண்டலம் எப்படி இருக்கும் என்பதனை இந்த காட்சிப் படத்தினைப் பார்க்க:


பால் வழி மண்டலத்தின் விட்டம் 100,000 ஒளியாண்டுகள் எனவும், அதன் மையத்திலிருந்து சூரியன் 28,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்துகொண்டு மையத்தினை சுற்றி வருவதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. சூரியன் ஒருமுறை தனது வட்டப் பாதையில் சுற்றி வர, 230 மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது. நமது பால் வழி கேலக்ஸியாவது ஒரே இடத்தில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தனக்கு அருகே உள்ளே ஆண்ரோமேடா கேலக்ஸியினை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது.
கீழே உள்ள காட்சிப் படத்தில், நமது பால் வெளி மண்டலத்தின் மாதிரியினைப் பார்க்கலாம். இதன் இறுதியில் சூரியன் சூரியன் நகரும் வேகத்தில், அதன் முன்னே பிறை வடிவிலான ஒரு வில் போன்ற வெளிச்சத்தினைக் காட்டி உள்ளார்கள். இதற்குப் பெயர் bow shock என்கிறார்கள். என்றாலும், அண்மையில் சூரியனின் நகர் வேகம் குறைவாக கணக்கிடப்பட்டபின் இது உண்மையில் ஏற்படுகிறதா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.


4 comments:

  1. இன்னும் எனென்ன வரப்போகுதோ!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்!
      மாற்றம் மட்டுமே மாறாமல் இருக்குது!

      Delete
  2. akkarai eduthu kondu uruvaagiya miga payanulla pathivu.nandri.thodarungal.

    ReplyDelete
    Replies
    1. @அரையாய் நிறை,
      அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள்!

      Delete