Sunday, February 19, 2012

லிஸ்பனில் இருந்து கோவா வரை

ண்டைக் காலத்து மக்கள் கடற்பரப்பில் மரக்கலங்களை ஏற்றி அவற்றை காற்றின் உதவியோடு அண்டை அயல் நாடுகளை அடைந்து புதியனவற்றை கொள்முதல் செய்யும் திறன் பெற்றிருந்தனர். இவை யாவும்  திசை காட்டும் கருவிகள் ஏதுமில்லாத காலத்திலேயே. ஒரு வருடத்தில் எந்த மாதத்தில் காற்று எந்த திசையில் வீசும், எத்திசையில் கலத்தினை செலுத்தினால், கடலில் எந்த இடத்தில் எந்த தீவு வரும் என்பதை நன்கு கணித்து வைத்திருந்தனர். சங்க காலத்திலேயே வளிதொழில் ஆண்டவர்கள் தமிழர்கள் என்பதறிவோம். அக்காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது அறிவோம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், அந்த பொருட்கள் கிடைக்கும் தேசத்தை தேடி கனவு கண்டவர்களில், தேடி அலைந்தவர்களில் - பராசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் கிடைக்கும்.

ஐரோப்பாவின் மேற்குக் கோடியில், ஆப்ரிக்காவைத் தொட்ட வண்ணம் இருக்கும் நாடு போர்ச்சுகல்.  லிஸ்பன் அதன் தலைநகரம். கிட்டத்தட்ட மூன்று பக்கத்திலும் கடலால் சூழப்பட்ட நாடு. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளவரசர் ஹென்றி என்பவர் நீண்ட தூரம் பயணம் செய்து அண்டை நாடுகளை அடைவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தார். 1460 இல் அவர் இறப்பிற்கு பின்னும் தொடர்ந்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை : 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ்  ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் பரிச்சயமான வாஸ்கோட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார்.

மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமி - அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது. வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட - "கோவா" என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே ஆபத்தினை அறியாமல் விட்டு வைத்த மனப்பாங்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நன்றாய் சொல்கிறது.


போர்ச்சுகீசியர்களைப் பொறுத்தவரை, ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையைத் தாண்டிய கடற்புரப்பு துவங்கி, கிட்டத்தட்ட இந்தோனேசியா வரையிலான பரப்பு எல்லாவற்றையும் - இந்தியா என்றே அழைத்தார்கள். அவர்களது இந்தியாவில், இந்தியப்பெருங்கடலும் அடங்கியே இருந்தது. அன்னிய கடற்பரப்பை ஆட்சி செய்ய விரும்பிய அவர்களது கனவு எளிதான ஒன்றாக மட்டும் அவர்களுக்கில்லை. கோழிக்கோட்டினை அடையும்முன் ஏற்பட்ட ஒரு பெரிய புயலில் சிக்கியது அவர்களது கப்பல்கள், வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தில். லிஸ்பனில் இருந்து இந்தியா நோக்கி வாஸ்கோடகாமாவிற்கு பின்னாளில் பயணித்த கவிஞன் ஒருவன் பயணக்காட்சியினை பதிவு செய்கிறான்:
"திடீர்திடீர் பயங்கர புயல்காற்றும்,
பகீரெனப் பற்றி எறியும் வான்வெளியும்,
கனத்த காற்றும், அடர்ந்த நிசப்த இரவுகளும்,
பூமியைப் பிளக்கும் இடி முழக்கங்களும்..."
வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திற்குபின், தொடர்ந்த இந்தியப் பெருங்கடலை நோக்கி துவங்கிய பயணங்களில் - பீரங்கிகளும், வெடிமருந்துகளும், சிப்பாய்களும் என நிறைந்திருந்தன. முதல் முயற்சியில் முக்கியமான இடங்களில் கோட்டைகள் கட்டிக்கொண்டு அவற்றில் தங்களுக்கு சாதகமான துறைமுகங்களும் கால்வாய்களும் அமைத்துகொண்டார்கள். இந்தியப் பெருங்கடலில், கடல் வணிகப் பாதைகளை இதன் மூலம் தங்கள் கைக்குள் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும் - ஏனைய ஐரோப்பிய சக்திகளான - டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தலைத்தூக்கத் துவங்கிய வரையில் போர்ச்சுகீசியர்களின் கடலாளுமை இந்தியப் பெருங்கடலில் இருந்து வந்தது.

4 comments:

 1. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், மூன்றையும்
  இணைத்து ஒரு பதிவு இட்டிருக்கிறீர்கள். முனைப்புடன் பிரயாணம் செய்து இந்திய மண்ணை தொட்டிருக்கின்றனர்.
  அந்தக்காலத்து மாலுமிகள்.

  அது சரி எனக்கு ஒரு ஐயம். இக்காலத்து விமானப்பாதைகள், அட்ச ரேகையின் நேர்கோட்டில் போகாமல்,
  ஏன் வளைந்து போகிறார்கள். ? உதாரணமாக, சென்னையிலிருந்து, ந்யூ யார்க் செல்லவேண்டிய விமானம்,
  சென்னை ( ஏ) ந்யூ யார்க் ( பி) என்று கொண்டால், ஏ டு பி நேர்கோட்டில் செல்வதில்லை. நடுவில் அவர்கள்
  நிற்கவேண்டிய கட்டாயங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், ( உதாரணம்: ஜெட்; ப்ரஸ்ஸல்ஸ்,
  லுஃப்தான்ஸா.. ஃப்ரான்க்ஃபர்ட் , பிரிட்டிஷ், லன்டன், கடார் ஏர்வேஸ், டோஹா ) ப்ரஸ்ஸ்லஸிலிருந்தோ, ஃப்ரான்க்ஃபர்ட்டிலிருந்தோ, அல்லது லன்டனிலிருந்தோ, டோஹாவிலிருந்தோ ஒரு நேர்கோட்டில் செல்லாமல்,
  சுற்றி, அயர்லன்டு, க்ரீன் லான்ட், கனடா என்று சுற்றி அதாவது மேலே போய் மறுபடியும் கீழ் நோக்கி ஒரு வட்டப்பாதையில் வருகிறார்கள்.

  இது என்ன காரணம் என்று கேட்டதற்கு, சிலர் அட்லான்டிக் சமுத்திரத்தில் ட்ராக்கிங் ராடார் இல்லை என்கிறார்கள்.
  சிலரோ, இது போல் லாஞ்சிட்டியூட் கணக்கில் வடதுருவத்தை நோக்கிச் சென்று திரும்பினால் தான் மைல் தூரம்
  கம்மி என்கிறார்கள். சிலர், கடல் வழிப்போவதை கூடிய வரை தவிர்க்கவேண்டும், ஏன் எனில் எம்ர்ஜென்ஸி லான்டிங்
  என்றால், உடனடியாக ஒரு இரண்டு மணி நேரத்தில் இறங்கும்படி இருக்கவேண்டும் என பல்வேறு காரணங்களைச்
  சொல்கிறார்கள்.

  எது கரெக்ட் விடை ..?

  இன்னிக்கு மஹாசிவராத்திரி. விழித்திருக்க்வேண்டும் ராத்திரி.
  ஹி..ஹி...ஒரு சரியான கணக்கு கொடுத்துவிட்டேன்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 2. வாங்க சூரி ஐயா.
  நல்ல கணக்கு கொடுத்தீங்க!
  இந்த கணக்குக்கு விடையை யூகித்ததில் - எனக்குத் தோன்றியது நீங்கள் சொல்லியதுபோல "இது போல் லாஞ்சிட்டியூட் கணக்கில் வடதுருவத்தை நோக்கிச் சென்று திரும்பினால் தான் மைல் தூரம் கம்மி என்கிறார்கள்." என்பது.

  பின்னர் தேடிப்பார்த்ததில், இன்னொன்றும் புலப்பட்டது:
  அதாவது, முடிந்தவரை, விமானங்கள், நேரான பாதையில்தான் செல்கின்றன. உலகம் உருண்டையாக இருப்பதால், அதன் வரைபடத்தை தட்டையான 2D படத்திற்கு மாற்றும்போது, இவ்வாறாக தெரிகிறது என்கிறார்கள்!!!

  ReplyDelete
 3. சூரி ஐயா
  இதற்கு உள்ள காரணங்களை நீங்களே பட்டியலிட்டுவிட்டீர்கள். வடதுருவம் நோக்கி போனால் தூரம் குறைகிறது என்பது இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
  ஜீவா...அருமையான பதிவு.அந்த காலத்தில் இருந்த அந்த துணிச்சல் அசாதரமானது தான்.

  ReplyDelete
 4. வாங்க குமார்!
  விமானங்களின் பாதை பற்றிய ஒரு ஆன்லைன் கேள்வி-பதிலுக்கு இங்கே பார்க்கவும்.

  //அந்த காலத்தில் இருந்த அந்த துணிச்சல் அசாதரமானது தான். //
  "துணிச்சல்" - நான் விட்டதை சொல்லி விட்டீர்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற மனப்பாங்கில் அவர்கள் சாதித்தவை நிறைய.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails