Monday, November 21, 2011

தில்லை விளாகம்

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.

"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

12 comments:

  1. மிக அருமையாக இருக்கிறது...விக்ரஹமும் பாடலும். யாரும் பாடிய சுட்டி இருந்தால் அளிங்களேன் ஜீவா!

    ReplyDelete
  2. வாங்க மௌலி சார்!
    பாடற்சுட்டி, இதுவரை கிட்டவில்லை. கிடைப்பின், அவசியம் சேர்க்கிறேன், நன்றிகள்!

    ReplyDelete
  3. நான் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவன் . இதுவரை தில்லை விளாகம் தல பெருமையை இதுவரை அறிந்ததில்லை .உங்கள் மூலகமாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.
    எம்பார் இயற்றிய பாடல் தொகுதிகள் உங்களிடம் உள்ளதா?

    ReplyDelete
  4. வாங்க கோபாலகிருஷ்ணன்,
    தனியாகத் தொகுதிகள் இல்லை. இருப்பினும் கிடைப்பதை அவசியம் வலையேற்றுகிறேன், நன்றிகள்!

    ReplyDelete
  5. தில்லை விளாகமா? வளாகமா?:)

    இராகவன் பாட்டும் அழகு! இராகவன் படமும் அழகு!!

    //ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால்//

    எல்லா இடங்களிலும், மூவருமே நின்ற கோலம் தானே! (except Bhadrachalam)! அப்பறம் எப்படி இது மட்டும் சித்ரகூடம்?

    ReplyDelete
  6. //பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று//

    :)
    உவேசா சொன்னது ஒரு புறம் இருந்தாலும், பல ஆய்வுகளில், திருச்சித்திரகூடம் = தில்லையே என்பது தெளிவு!

    (சிலருக்குச் சிதம்பரத்தில் பெருமாள் இருப்பது அவ்வளவாக ஏலவில்லை என்பது தனிக்கதை:) பெருமாள் மேல் மதிப்பு உண்டு என்றாலும், அவர்கட்கு, தலைநகரமான தில்லையில், அவ்வளவு அருகில் வேண்டாமே என்பது போலொரு மன ஓட்டம்...)

    ஆனால்...
    குலசேகராழ்வார் பாசுரம், திருமங்க பாசுரம் எல்லாம் கிடந்த கோலத்தையும் காட்டும்! மாணிக்க வாசகர் பாட்டும் அப்படியே!

    தில்லை விளாகத்தில் கிடந்த கோலப் பெருமாள் இல்லை ஆதலால்...தில்லையே சித்திரகூடம் என்பது தெளிவு!!

    ReplyDelete
  7. வாங்க கே.ஆர்.எஸ்,
    விளாகமா?
    விளாகம் - "கழனியைச்சுற்றி ஒருவட்டம் உழுதல்" அப்படின்னு அகராதியிலே சொல்லராங்க.
    அமெரிக்காவில் பெரிமீட்ர் என்று சொல்லுவதுபோல "ஊருக்குள்ளே" போன்ற இடத்துக்கேற்ற பொருள் தரும் சொல்லாக இருக்கிறது.

    //எல்லா இடங்களிலும், மூவருமே நின்ற கோலம் தானே! //
    சொல்லவந்தது - இன்னொரு கோலமான: "பரத சத்ருக்கனோடு காட்சி தரும் பட்டாபிஷேகக் கோலம்" அல்லாமல் மூவர் மட்டுமே காட்சி தருவது - வனவாச காலத்தில் - இருக்கும் இடங்களில் சிறப்பானது சித்ரகூடம் என்பார்.

    ReplyDelete
  8. //திருச்சித்திரகூடம் = தில்லையே!//
    நல்லது. நான் இரு தரப்பிலும் இல்லை!

    ஆனால் பெயரை வைத்துக்கொண்டு மட்டும் வாதாடுவதென்றால்:
    தில்லை விளாகத்திற்கு இன்னொரு பெயர் "ஆதி தில்லை" - அப்படியென்றால் ஆதிகாலத்து தில்லை சிதம்பரமோ?:-)

    ReplyDelete
  9. சுந்தர காண்டம் படித்துக்கொண்டு, இன்னும் சில நாட்களில் முடிக்கவிருக்கும் இ ந் நாட்களில் எனக்கு தில்லை விளாக கோதண்டராமனின் தர்சனம்
    கிடைத்தது பெரும் பாக்கியம் எனவே நினைக்கிறேன். தில்லை விளாக கோதண்டராமர் சிலை வடித்தவர் அந்த சாட்க்ஷாத் ராமனின்
    அருள் பெற்றவராக இருந்திருக்கவேண்டும். அந்த சுந்தர ராமன் கோதண்ட ராமன் அழகுக்கு நிகர் உண்டோ ?

    தன்யாசி ராகப்பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. சுட்டி கிடைக்கவில்லையே யாராவது பாடி, என யாரும் வருத்தப்படவேண்டாம்.
    கிழவன் கட்டைக்குரலில் பாடுகிறான

    ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
    ரகுனாதாய நாதாய சீதாயா பதயே நமஹ

    அசாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவ கிம் வத
    ராம தூத க்ருபா சிந்தோ மத் கார்யம் சாதக ப்ரபோ

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  10. தில்லை விளாகம் திரு கோதண்டராமர் கோவில் பற்றிய கட்டுரை ஒன்றை படிக்கவும்.

    http://srividesikan.web.officelive.com/Documents/Sri%20Rama%20Darshanam%209-Thillaivilagam.pdf

    ராமர் சன்னதியின் முன் புறத்திலிருந்து வடக்கு நோக்கி பார்த்தால், ஒரே திசையில் சிவனையும்
    பெருமாளையும் தரிசிக்க இயலும் என்பதால், இதற்கு ஆதி தில்லை எனப்பெயர் வந்தது
    எனக்குறிப்பிட்டுள்ளது காண்க.

    சுப்பு ரத்தினம்.
    உங்களது வலையில் இடப்பட்ட பாடலை எனது வலையில் கேட்கவும்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  11. வாருங்கள் சுப்புரத்தினம் ஐயா,
    தாங்கள் பாக்கியம் என்று சொன்னதே என் பாக்கியம்! அதற்கு மேலும் பாடலை பாடித் தந்தமைக்கு மேலும் மேலும் நன்றிகள். பாடல் சுட்டி இல்லையே என பாடல்கள் இடாமல் இருக்க வேண்டியதில்லை போலும் இனி, நன்றிகள்.

    ReplyDelete
  12. 'ஆதி தில்லை' பற்றிய குறிப்பினைச் சேர்த்தமைக்கும் நன்றிகள் சூரி ஐயா.

    ReplyDelete