Monday, May 31, 2010

எய்தவனே என்னையும் நோக்கு.

கைகொளாச் சிறுமை வலிந்து மலிந்தும்
கைகொளக் கிடைத்த தனித்த கருணையிற்
செய்தவம் யாதோ எனத்திகைத்த செய்கையிற்
எய்தவனே என்னையும் நோக்கு.

9 comments:

  1. //எய்தவனே என்னையும் நோக்கு//

    நோக்கித் தானே எய்திருப்பான்? :))

    என்ன ஜீவா, திடீர்-ன்னு ஒத்தை வெண்பா பதிவு?

    ReplyDelete
  2. வாங்க KRS!
    ஆனா எய்தபின் மறந்தான் போலும்...!
    அது என் கோலமோ, இல்லை அவன் ஜாலமோ, அறியேன்!

    ஒத்தைக்கு ஒண்ணும் காரணம் இல்லை...பின்னால வருவதற்கு முன்னீடெல்லாம் இல்லை :-)

    ReplyDelete
  3. இந்த பாவில் வரும் 'கைகொள்' என்ற சொல்தான் - பாவினை எழுதுவதற்கான முனைப்பைத் தந்தது.

    கைகொள் சக்கரம்:

    'வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
    செய்கொள் செந்நெலுயர் திருவண்வண்டூருறையும்,
    கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
    கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே." (நம்மாழ்வார்)

    கைகொள் மான்:
    "மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
    பைகொள் வாளர வாட்டும் படிறனார்
    கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
    ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே." (சம்பந்தர்)

    இப்படி இவங்க எல்லாம் கைகொள்-ளராங்க.
    என் கையிலே என்ன இருக்கு பார்த்தேன்.
    அதான் இந்த வெண்பா...

    ReplyDelete
  4. //ஆனா எய்தபின் மறந்தான் போலும்...!
    அது என் கோலமோ, இல்லை அவன் ஜாலமோ, அறியேன்//

    ஹா ஹா ஹா
    அவன் ஜாலமா? பாவம் அவன்! :)

    இந்தக் "கைகொள்" என்பது பற்றி மேலே பேசத் தான் அப்படிக் கேட்டேன் - நோக்கிய பின் தானே எய்திருக்க முடியும்-ன்னு!

    அன்பைக் கைகொள்ளல், அஹிம்சையைக் கைகொள்ளல்-ன்னு பல..."கை-கொள்ளல்" பற்றிப் பேசுகிறோமே! அது என்ன "கை"கொள்ளல்? கருத்தில் கொள்ளல்-ன்னு கூடச் சொல்லலாமே? ஏன் "கை"கொள்ளல் என்ன வேண்டும்?

    கருத்தில் கொண்டால், மனம் அலை பாய்ந்து, கூடவே வேறொன்றையும் யோசிக்க முடியும்! ஆனால் கையிலே ஒன்றைக் கொண்டு விட்டால், அதை வைத்துக் கொண்டு தான் எதுவும் செய்ய முடியுமே தவிர, வேறு எதுவும் "மாறாகச்" செய்ய முடியாது!
    ஏன்-னா கைநிறைய அதுவே இருக்கு! மாறாகச் செய்யணும்-ன்னா முதலில் கைகொண்டதை இறக்கி விட்டாக வேண்டும்!

    அதனால் தான் உயர்ந்தவற்றுக்கு எல்லாம் "கை"கொள்ளுதல்-ன்னு சொன்னது தமிழ் இலக்கியம்!
    உயர்ந்தவற்றைக் கை கொண்டால், அதை வைத்துக் கொண்டு தான் செயல்பட முடியுமே தவிர, வேறு செய்ய ஏலாது!

    இறைவனுக்கும் அவ்வாறே சக்கரம்-சங்கினைக் "கை"கொள்ளலாகக் காட்டுகிறார் ஆழ்வார்!
    வாள் முதலான பிற ஆயுதங்களை இடுப்பில் சொருகிக் கொள்ளலாம்! ஆனால் சக்கரம் "கை"க்கொண்டே ஆக வேண்டும்! கையை விட்டு நீங்காது! நீக்கி வைக்க இயலாது!

    அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
    சங்கரையா உஞ்செல்வம் சால அழகியதே! - என்று தோழி கோதையும் கைக்கொள்கிறாள்!

    இப்படி நாம் அவனையும், நம்மை அவனும் "கை"க்கொண்டால்....?
    தீண்டல் இன்பம் மட்டுமன்றி, நீக்கி வைக்க முடியாத இன்பம்!

    கை நிறையக் "கை" கொள்வோம்!
    ஆந்தனையும் "கை" காட்டி,
    உய்யுமாறு என்று எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  5. //இப்படி நாம் அவனையும், நம்மை அவனும் "கை"க்கொண்டால்....?//
    நீங்காச் செல்வம் ன்னு அனுபவச்சு சொல்லுவது அருமை.

    //கையை விட்டு நீங்காது! நீக்கி வைக்க இயலாது!//
    ஒரு சந்தேகம் - கைகொண்டபின் நீங்கவே நீங்காதா? ஒரு பேச்சுக்காக - ஒருத்தர் கைபற்றிய பின்னர், அதுவே செருக்கினை ஏற்படுத்தி அவரது கண்ணை மறைத்தால்? அப்போ அது "நீங்காச் செல்வம்" இல்லை அல்லவா?
    ஆக, அந்த செல்வத்தை தக்க வைத்துக்கொள்வதும் நம்ம "கையிலே" தானே உள்ளது!

    ReplyDelete
  6. //ஒரு சந்தேகம் - கைகொண்டபின் நீங்கவே நீங்காதா?//

    இறைவனுக்கு நீங்காது!
    நமக்கு???

    * சக்கரம் சில கணங்களே நீங்கினாலும், சங்கு (பிரணவம்) நீங்கவே நீங்காது!
    * மழு நீங்கினாலும், மான் (ஆன்மா) நீங்கவே நீங்காது!

    //ஒரு பேச்சுக்காக - ஒருத்தர் கைபற்றிய பின்னர், அதுவே செருக்கினை ஏற்படுத்தி அவரது கண்ணை மறைத்தால்?//

    பாருங்க! அப்போ கூட, கண்ணை மறைத்தால், கருத்தை மறைத்தால்-ன்னு தான் சொல்றீங்க! "கையை" மறைத்தால்-ன்னு சொல்றீங்களா? :)

    கருத்தால்,
    கணக்கு போடும் புத்தியால்,
    நம் கையை விட்டு நாமே அதை நீக்கி விடுகிறோமே தவிர...

    கைகொண்டு விட்டால் அது நீங்காச் செல்வம் தான்...நாமாகக் கையிலிருந்து கீழே இறக்கி வைக்கும் வரை! :)

    //ஆக, அந்த செல்வத்தை தக்க வைத்துக்கொள்வதும் நம்ம "கையிலே" தானே உள்ளது!//

    தக்க வைத்துக் கொள்வது
    நம் கையில் இல்லை!
    நம் வேட்-கையில் உள்ளது! :)

    தக்க வைத்துக் கொள்வது நம்ம "மனத்தில்" தான் உள்ளது!!
    தொழுது எழு என் "மனனே"!

    என்கொல் அம்மான் திருவருள்கள்?
    உலகும் உயிரும் தானேயாய்
    நன்கென் னுடலம் "கை-விடான்"!

    தொழுது எழு என் "மனனே"!
    தொழுது எழு என் "மனனே"!

    ReplyDelete
  7. //கருத்தால்,
    கணக்கு போடும் புத்தியால்,
    நம் கையை விட்டு நாமே அதை நீக்கி விடுகிறோமே தவிர...//
    அருமையாச் சொன்னீங்க, ஆனா அது மட்டுமில்லையே. செடியாய வல்வினைகளும் வழிமறித்திருக்குதே மலை போலே. அவன் அகலாம இருந்தாலும், அவனை அகக்கண்ணால காண இயலாமற் தடுக்கும் இவ்வல்வினைகளைத் தீர்க்கத் திருமாலே நெடியோனே, நீயென்னை நோக்கிடு!

    ReplyDelete
  8. //சக்கரம் சில கணங்களே நீங்கினாலும்//
    அது என்னென்ன கணங்கள் KRS?
    கொஞ்சம் சொல்லுங்களேன்...

    ReplyDelete
  9. வலஜி இராகத்தில் ஒரு அருமையான பாட்டு உணடு, அது நினைவுக்கு வருகிறது:
    "கைவிட மாட்டான் கனகசபேசன்
    காத்திடுவான் கண்ணால் பார்த்திடுவான் நெஞ்சே."

    ReplyDelete