Wednesday, October 14, 2009

வெண்பாவிற்குப்பின் ஆசிரியப்பா!

வெண்பா வடிக்கலாம் வாங்க என அழைத்த அகரம் அமுதா, இப்போது, ஆசிரியப்பா அறியலாம் வாங்க என அழைத்திருக்கிறார்!

----
தமிழ்நம்பி அவர்கள் வழங்கும் பாடங்களில் இருந்து எனக்கு விளங்கிய அளவிற்கு தொகுத்துச் சொல்வேன்:

----
வெண்பா இலக்கணத்தினை முன்பு இங்கே பார்த்தோம்.
வெண்பாவிற்கான தளைகள், வெண்டளைகள் அல்லவா?
1) முதலாவது இயற்சீர் வெண்'தளை'கள்:
மாமுன் நிரை, விளமுன் நேர்!
2) அடுத்து வெண்சீர் வெண்டளைகள்:
காய்முன் நேர்!

இதோடு, இன்னபிற தளைகளையும் சேர்க்கலாம் ஆசிரியப்பாவிற்கு:
அவை:
3) இயற்சீர் வெண்டளையை திருப்பிப்போட்டால் என்ன வரும்?
மாமுன் நேர், விளமுன் நிரை!
இவைதான் 'ஆசிரியத்தளை'

4) வெண்சீர் வெண்டளையைத் திருப்பிப்போட்டால் என்ன வரும்?
காய்முன் நிரை!
இதன் பெயர் 'கலித்தளை'

ஆக, இந்த நான்கு வகைத்தளைகள் தட்டாமல் வருவது 'ஆசு'இரியப்பா, ஆசிரியப்பா!
(ஆசு: குற்றம் ; இரி: நீக்குதல் : ஆக, குற்றம் நீக்கிய பா!)

வெண்பாவைப் போலவே, கனிச்சீர் சேராது.
வெண்பாவின் கடைச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு' போன்றதொரு ஒரு வாய்பாட்டில் முடியுமல்லவா?
ஆசிரியப்பாவின் கடைச்சீர் 'ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்' போன்றவற்றில் முடியும்.

வெண்பாவில் கடைசி அடி மட்டும் முச்சீர் கொண்டும், அதற்கு முந்தைய அடிகள் நான்குசீர் கொண்டும் அமையுமல்லவா?
ஆசிரியப்பாவில், இவ்விதி சற்றே தளர்த்தப்படுகிறது.
முதலடியும், இறுதி அடியும் நான்கு சீர்கள் பெறவேண்டும். குறைந்தது மூன்று அடிகள்.
இடையிடையே, நான்கு சீர்களுக்கும் குறைவாக, முச்சீரோ அல்லது இருசீர் கொண்ட அடிகளோ கூட அமைக்கலாம். இவற்றால், இவை 'வகை' பெறும், அவையாவன:

1. நேரிசை ஆசிரியப்பா : கடைசி அடிக்கு முந்தைய அடி, முச்சீர் பெற்ற அடி
2. இணைக்குறள் ஆசிரியப்பா: இடையிடையே இருசீரோ அல்லது முச்சீரொ பெற்ற அடிகள்
3. நிலைமண்டில ஆசிரியப்பா: எல்லா அடிகளும் நான்கு சீர் பெற்ற அடிகள்
4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.

எதுகை,மோனை:
வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்.
~~~~
பின்குறிப்பு:

அடிகள் அமையப்பெற்ற சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இவ்வாறு வழங்கப்படும்:

இரண்டு சீர்களைக் கொண்ட அடி : குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி : சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி : அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி : கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி : கழிநெடிலடி

~~~~~
இதுதாங்க ஆசிரியப்பாவின் எளிமையான இலக்கணம், என்ன நீங்களும் எழுதத் தயாரா?!
எடுத்துக்காட்டுகளோடு, பாடங்களை படிக்கவும், இதற்கு அடுத்த நிலைகளை அறியவும்,
இங்கே வருக, வருக!

13 comments:

  1. ஜீவா அவர்களுக்கென் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக அழகிய முறையில் தொகுத்தளித்திருக்கிறீர்கள். தங்களைப் போன்ற மரபு விரும்பிகள் இருக்கும் வரை மரபுக் கவிதைகள் அழியாது. நன்றி.நன்றி. நன்றி.

    ReplyDelete
  2. நல்லது அகரம் அமுதா!

    ReplyDelete
  3. அப்பப்பா! எவ்வளோப்பா! நமக்கு வராதுப்பா!
    எழுதுங்க ரசிக்கிறோம்!

    ReplyDelete
  4. ஒருவாறு தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
    பாராட்டு!

    ஓரிரண்டு செய்திகள்:

    *** ஆக, இந்த நான்கு வகைத் தளைகள் தட்டாமல் வருவது ... ஆசிரியப்பா!***

    ஆசிரியப்பாவைப் பொறுத்தவரை,
    தளைகள் தட்டாமல் வரவேண்டும் என்ற கவலையே வேண்டா! ஏனென்றால்,

    ஈரசைச் சீர்களும் காய்ச்சீர்களும் மட்டும் இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டால் போதும். தளைகள் தாமே செப்பமாக அமையும்.

    (ஈரசைச்சீர்கள் மிகுந்தும் காய்ச்சீர்கள் அருகியும் (குறைவாகவும்) வரும்)

    ***அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.***

    அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப் பெறுவது; முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருப்பது.

    ***வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்***

    சரியே. அத்துடன் ஆசிரியத்தில், அடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைத்துப் பாடுதலும் சிறப்பாம்.

    முயன்று தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
    எழுதுங்கள்! நண்பர்களையும் எழுதச்சொல்லுங்கள்!
    நன்றி.

    ReplyDelete
  5. வாங்க திவாய்யா,
    நீங்கள் ரசிக்காத மரபுக்கவிதையா!

    ReplyDelete
  6. /வருக தமிழ்நம்பி ஐயா,
    மேலும் செய்திகளைச் சேர்த்து செம்மை சேர்த்தமைக்கு நன்றிகள்.

    >>தளைகள் தட்டாமல் வரவேண்டும் என்ற கவலையே வேண்டா!<<
    மிகச்சரி. கனிச்சீர் தவிர்த்தாலே போதுமல்லவா.

    கனியிருக்க காய்?
    கனிச்சீர்கள் மரபில் எப்போது பயன்படுத்த இயலும் என வியக்கிறேன்?

    ReplyDelete
  7. 2,3 மாசம் கழிச்சு வந்தா,இலக்கணப் பாடம் எடுத்திருக்கீங்க. நிறைய ஆப்செண்ட் ஆகி இருக்கேன்! ரிவிஷன் எடுப்பீங்களா தெரியலை, நான் முதல்லே இருந்து படிச்சுட்டே வரேன்! :)))) அரியர்ஸ்!!!!!!

    ReplyDelete
  8. வாங்க கீதாம்மா,
    2,3 மாசம் கழிச்சு வந்தா இப்படித்தான்... இலக்கணப் பாடம் நான் எடுக்கலை - ஆசான் தமிழ்நம்பி ஐயாதான்! நாம எப்போவுமே மாணவர்தான்! - அதிலே அரியர்ஸ் எல்லாம் சகஜம் தான்!

    ReplyDelete
  9. வெண்பா தளத்தில் தொழில்நுட்ப காரணங்களால், ஆசான்மார்கள் பாடம் இடுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    இதை நீக்க இறைவனைப் வணங்கி ஒரு அளவடி ஆசிரியம் இதோ:

    அமுதனென் றொருவா சிரியரிங் குண்டு
    தமிழநம் பியெனும் தமிழாசா னுண்டு
    மரபுப்பா மகிழ்வுடனே மாந்துவோரு முண்டு
    இறைவாநீ இவர்வலையில் இணைந்திடவே அருள்வாய் !


    ஆசிரியம் அனுமதிக்கும் தளர்த்திய தளைவிதிகளை உபயோகித்து, ஈற்றுச்சொல் ஆய் என்று முடியும் பா.

    //கனியிருக்க காய்?
    கனிச்சீர்கள் மரபில் எப்போது பயன்படுத்த இயலும் என வியக்கிறேன்?//
    நல்ல கேள்வி, தமிழநம்பி ஆசான் பதிலுடன் விரைவில் வருவார் என நம்புவோம்.

    //ஆசான் தமிழ்நம்பி ஐயாதான்!//

    ஆசானின் பெயர் தமிநம்பி, தமிழ்நம்பி அல்ல; ஒற்றை உயிர்மெய்யாகக் காண வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. வாங்க 'அவன'டியாரே!
    அளவடி ஆசிரியம் அருமை!
    >>ஆசானின் பெயர் தமிழநம்பி, தமிழ்நம்பி அல்ல; ஒற்றை உயிர்மெய்யாகக் காண வேண்டுகிறேன்.<<
    அப்படியே ஆகட்டும் ஐயா!

    ReplyDelete
  11. அனைவருக்கும் வணக்கம். அன்புக்கு நன்றி. கனிச்சீர் வஞ்சிப்பாவிற்கு உரியது. வேறு சில பாஇனங்களில் அருகி வரும். எதிர்பாராத நிலையில் இப்பதிவைக் கண்டேன். மகிழ்ந்தேன். மறுபடியும் நன்றி.

    ReplyDelete
  12. jeeva ninga blog ai arumaiya use panringa..ungal pathivugal annaithum nan virumbuvathu..athai arumaiya alikirirgal..meendum oru murai nandri...thodarnthu konde irukavum

    ReplyDelete