Sunday, December 10, 2006

பாரதி - என் அரசவைக்கவி (மீள்பதிவு)

இன்னோர் வருடம் - உன் பிறந்தநாள் -
எம் மனத்தில் இன்னோர் வருடம் நீ செய்யும் ஆட்சியின் நினைவாய் இந்த மீள்பதிவு.


திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
வழக்கத்திற்கு ஓர் மாற்றாக,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள்:

பாரதி - என் அரசவைக்கவி.
-------------------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என் அவைக்கு அழைத்தேன்,
கவி எழுத.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொரு நாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

6 comments:

  1. மன்னா! வாழ்க உன் தமிழ் பற்று!
    பாரதியை வாழ்த்தி ஒரு பா படைத்துவிட்டீர்கள்.
    ஒன்று எப்படி பத்தும் எம் மாகவிக்கு!

    ஆதலால் இனி உன் பணி அவனுக்கு துதி பா படைத்து இருப்பதே! :)

    நல்ல கவிதை! எனக்கு முண்டாசு கவியின் கம்பீரமும் முறுக்கும் தான் பிடிக்கும். பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் போட்ட இக்கவிதையினை நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது.

    ReplyDelete
  2. மன்னர் அகிலாவின் வருகைக்கு நன்றி.

    பா ஒன்று போதாதென்று சொல்கிறீர்.
    பாவென்று நான் எழுத - அது
    பாவென்றானால் நலம்.
    இல்லாவிட்டால்...?

    பாரதி துதிக்கு இலக்கணப்
    பாவாக இல்லாவிட்டாலும்
    பரவாயில்ல்லையோ...?
    அவன் பெயரில்தான்
    'பா' இருக்கிறதே!

    ReplyDelete
  3. அன்பு ஜீவா

    நண்பர் செல்வன் முத்தமிழ் குழுமத்தில் இந்த கவிதையை மீள்பதிவு செய்திருந்ததால் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பாரதிக்கான மிகவும் பொருத்தமான ஒரு கவிதையை எழுதியுள்ளீர்கள். நீவீர் வாழ்க. உம் குலம் வாழ்க.
    மேலும் பல அருமையான கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.
    நன்றி.

    பின்குறிப்பு: மனதில் உறுதி வேண்டும். (உருதி அல்ல)

    குழுமம்:http://groups.google.com/group/muththamiz

    ReplyDelete
  4. நன்றி ராசா!
    ஆமாம், உறுதிதானே சரி என்று, அப்படித்தானே இருக்கவேண்டும் என்று சென்று பார்த்ததில், தவறு தெரிந்தது.
    சுட்டியமைக்கு நன்றி, சரி செய்து விடுகிறேன்.

    ReplyDelete
  5. ஜீவா

    மிக நல்ல பதிவு.நன்றி

    எட்டையபுரம் ஜமீனை எள்ளி நகையாடியவர் பாரதி என குறிப்பிட்டிருந்தீர்கள்.அந்த விவரம் தர இயலுமா?

    மிக்க நன்றி
    செல்வன்

    ReplyDelete
  6. செல்வன் - முதலில் உங்களுக்கு என் நன்றிகள் (எதற்கென்று உங்களுக்குத் தெரியும்!)

    காசியிலிருந்து திரும்பி எட்டையபுரம் வந்தபின், சமஸ்தான ராஜா, பாரதிக்கு ஒரு 'வேலை' போட்டுத் தந்தார். உண்மையில் அங்கு அவருக்கு ஒரு வேலையும் இல்லை. ஆனால் சம்பளம் உண்டு. ராஜாவின் தயவில் காலம் தள்ள வேண்டும். முதலில் ராஜாவின் 'அன்புத்தொல்லை' மட்டுமே. போகப்போக ராஜாவின் லீலாவினோதங்கள் பாரதியை வெறுப்படையச் செய்தன.
    இந்த சந்தர்பங்களில்தான் ஜமீனை எள்ளி நகையாடி இருக்க வேண்டும்.

    பாரதி 'சின்ன சங்கரன் கதை' என்று ஒரு கதையும் எழுதி இருக்கிறார். அது அவருடைய சொந்த அனுபவ சம்பங்களை கொண்டு எழுதிய கதைதான். அதில் ஜமீந்தாரை நகைச்சுவை ததும்ப வர்ணித்திருப்பார்.

    ராஜா இந்த கதையில் ஆட்டு வண்டியில் பயணிப்பார், அதை அவரே ஓட்டுவார்!
    அரண்மணையில் சில சமயம் சேவல் சண்டை நடக்குமாம். பெரும்பாலும் அதில் அரண்மணைச் சேவல் தோற்றுப்போகுமாம். பின்னர், அந்த சேவலை கொண்டு வந்தவன் அதை ராஜாவின் காலடியில் வந்து வைப்பானாம். அந்த சேவலை பெற்றுக்கொண்டு அவனுக்கு சன்மானம் தருவாராம்!
    தினப்படி, காலை குளியலில் இருந்து ராஜா என்னென்ன செய்வார் என்று இப்படி பலப்பல சங்கதிகள் உண்டு!

    ReplyDelete