Sunday, May 07, 2006

தேர்தல் 2006 - உங்கள் வாக்கு யாருக்கு?

தேர்தல் களம் சூடு பிடித்து தேர்தலும் நெருங்கியாகி விட்டது. கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள்தான் வாக்குறுதிகளை சகட்டுமேனிக்கு அள்ளி விடுவார்கள். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளே 'மொத்த' அளவில் வாக்காளர்களில் தலைகளை சிரைப்பதென முடிவு செய்து, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகின்றன. திராவிட கட்சிகள் சென்ற தேர்தல்களில் 'அலை'களில் உதவியிலேயே ஆட்சியை பிடித்துவிட்டதால், அவர்களுக்கு புதிதான யுக்தி ஏதும் தோன்றவில்லை. தேசிய கட்சிகளோ, திராவிட கட்சிகளை நம்பியே காலம் தள்ளி விட்டதால் மூளை மங்கிப்போய், ஏதோ நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என்கிறார்கள்.

இந்த நிலமையில் யாருக்கு வாக்களிப்பது என்று கட்சி சாராத சராசரி வாக்காளன் பெரிதும் குழம்பிப்போய் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கட்சிகளுக்கும் பெரிதும் வித்யாசம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்னும் கேலிச்சித்திரம் 80-களில் விகடனில் பார்த்த நினைவு வருகிறது. இன்னமும் நிலமை சற்றும் மாறவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த கட்சித் தொண்டர்களோ சென்ற முப்பது ஆண்டுகளில் இரு கட்சிகளின் மத்தியில் ஏற்பட்ட வன்மங்களின் நினைவிலேயே இன்னமும் ஊறிப்போய், இன்றைய நிலமை என்ன என்று யோசிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.

வாரிசு அரசியலை குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து பிரிந்து புதுக்கட்சி தொடங்கிய தலைவர் ஒருவர் இன்னொரு கட்சியில் கூட்டு சேர்வதால் தானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்கிறார். புதிதாக அரசியலில் குதித்திருக்கும் நடிகரோ, எல்லா கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களையும் (அப்படி 'ஒன்று' இல்லாவிட்டாலும்) கலந்துகட்டி, 'தான் இதிலும் நடிகன் தான்' என்கிறார். அரசியல் கட்சிகளாய் மாறிப்போன ஜாதி சங்கங்களின் ஆதிக்கம், தேர்தல் என்றால் திருவிழா என்று மட்டுமே நினைக்கும் அப்பாவி மக்களிடம் குறைந்து போயிருப்பது இந்த தேர்தலில் பாராட்ட வேண்டியது. ஆனால், இதை சாக்கிட்டு ஏனைய கட்சிகள் தங்களை அவர்களின் தனிப்பொரும் பிரதிநிதியாக காட்டிக் கொள்கின்றன.

இந்த நிலமையில் உங்கள் வாக்கு யாருக்கு?
தற்போதைய முதலமைச்சர் சென்ற பாரளுமன்றத் தேர்தல் தோல்வியின் பின், தோல்விக்கான காரணமாய் வாக்குகள் கணக்கெடுக்கும் இயந்திரத்தை குறை சொல்கிறார். என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கள்!. முதலைமைச்சரையோ, முக்கிய அமைச்சர்களையோ நம்பி வாக்களிக்காதீர்கள். இத்தனை நாளில் திருந்தாத அவர்கள் இனிமேலுமா திருந்தப்போகிறார்கள்?. கட்சிகளை நம்பிப் பயனில்லை. அவர்கள் இலவச வாக்குறுதிகளை நம்பிப் பயனில்லை.

என்ன செய்யலாம்?
தலைமையையோ, கட்சியையோ தேர்வு செய்யாமால், உங்கள் வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சுயேச்சையாக இருந்தாலும் பாதகமில்லை.

உங்கள் வேட்பாளர்களில் யார் நியாயமான நபர் என்று பாருங்கள்.

யார் பாரபட்சமன்றி அனைத்து தரப்பு மக்களின் சரியான பிரதிநிதியாக செயல்படுவார் என்று தீர்மானியுங்கள்.

அவ்வளவே. முதலில் நியாயமான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். பின் அவர்களாகவே, அவர்களின் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள். சரியான அரசியல் பாதைக்கு வழி வகுப்பார்கள். முதலில் வித்திடுவோம்.

இவையெல்லாம் வாக்களிக்கும் உங்கள் கையில்தான் உள்ளது. இத்தனைநாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள். தேர்தல் களத்தில் முக்கியமானவர்கள் வாக்களர்களும், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும்தான். கட்சி சார்போ, கூட்டணியோ அல்லது தலைமையோ அல்ல.

3 comments:

  1. That's the way to go!

    ReplyDelete
  2. That's the way to go!

    ReplyDelete
  3. ஆம், வருகைக்கு நன்றி SK!

    ReplyDelete