Sunday, August 14, 2016

காம்போதியில் மனங்கவர் இரண்டு!

இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் - பாபநாசம் சிவன் அவர்கள்.
இந்த இரண்டு பாடலிலும் "இராமதாசன்" அல்லது "சௌரிராஜன்" ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம்.  ஆனா இந்த பாடல்களில் சொல்நயம் தான் எவ்வளவு அருமையாக அமைஞ்சு இருக்கு!  இரண்டு பாடல்களிலும் சரளமான சொல்லாடல்கள் வந்து விழுந்திருக்கு!
முதல் பாடல்:
எடுப்பு
ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
இடது பாதம் தூக்கி (ஆடும்)
தொடுப்பு
நாடும் அடியர் பிறவித் துயரற
வீடும் தரும் கருணை நிதியே  நடம் (ஆடும்)
முடிப்பு
சுபம் சேர் காளியுடன் ஆடிப் படு தோல்வி அஞ்சி
திருச் செவியில் அணிந்த மணித்தோடு விழுந்ததாக 
மாயம் காட்டியும் தொழும் பதம் உயரத் தூக்கியும் – விரி
பிரபஞ்சம் முழுதும் ஆட்டும்  நின் திருப் பதம்  
தஞ்சம்  என உன்னை அடைந்தேன்
பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே 
சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)

உக்கர கோலத்தில் உலகை உலுக்கும் காளியுடனான ஆட்டத்தில்
ஊர்த்துவ தாண்டவம் காட்ட திருச்செவி வரை தூக்கிய  காலானது!
எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கும் ஈசனது திருப்பாதமானது!

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடிட இங்கு கேட்கலாம்:


அடுத்த பாடல் :

எடுப்பு
காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும் (காணக்)

தொடுப்பு
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-
இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)

முடிப்பு
மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடரக்கலை
வாணி திருவும் பணி கற்பக நாயகி
வாமன் அதிகார நந்தி சேவைதனைக் (காணக்)

களை நிறை திருக்கபாலி மயிலை வீதிகளில் பவனி வரும் காட்சியானது 
கண்ணாறக் கண்டாலும் போதாது, கண்ணாயிரம் இருந்தாலும் போதாது. 
பாபநாசம் சிவனின் வர்ணனை தான் என்னே!
தரித்த பிறை மதியோடு, விண்மீன் கூட்டங்களையும் காண -
இது என்ன அந்தி வானமோ என மயங்கியதில் விந்தை இல்லை.
கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை சிவகணங்கள் தொடர கற்பகாம்பாளுடன் பவனி வரும் காட்சியைப் இப்பாடலில் அழகாகப்
பதிவு செய்திருக்கிறார்!

இப்பாடலை மதுரை மணி ஐயர் பாடிட இங்கு கேட்கலாம்:

3 comments:

  1. வெகு சிறப்பு.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. காம்போதியில் இரண்டு என்பதைத் தாண்டி இரண்டு பாடகர்கள் என்பது மனதைக் கவர்ந்து கிரக்கத்தைத் தான் ஏற்படுத்தியது.

    சஞ்சயின் இழைதலும், மணி ஐயரின் ஸ்பஷ்டமும் இரு துருவங்களாக மனசில் ரீங்காரமிட்டது

    சுதாஜி என்ன சொல்லப் போகிறாரோ, தெரிய்லே!

    ReplyDelete
  3. எனக்கு ரசிக்கத் தெரியும், உங்களைப் போல எல்லாம் ஆய்வுகள் செய்யத் தெரியாது. :)

    ReplyDelete