Monday, July 22, 2013

கண்ணனைக் காணவில்லை

எடுப்பு
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கனிமுகமும் என் நினைவில் இல்லை
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கார்குழலும் என் காதினில் கேட்கவில்லை

தொடுப்பு

வண்டுகள் சூழும் சோலையில் தேடியும்
வான்முகில்களின் இடையே தேடியும்
வருவான் வருவான் - வருவான் என
வழிமேல்விழி வைத்தும் மணி வண்ணணைக்
 (கண்ணனை இன்னமும்...)

வீதியில் ஆடும் கோபியர் பின்னேயும்
மாடுகள் மேய்க்கும் ஆயர் பின்னேயும்,  தயிர்
கொட்டி வைத்திருந்த உரியின் பின்னேயும், அவனைக்
கட்டி வைத்திருத்த உரலின் பின்னேயும்
தேடியும் தேடியும் தேடியும்
 (கண்ணனை இன்னமும்...)

முடிப்பு
முன்னம் முலையில் விடம் உண்டதனால்
இன்று இப்போது காணாமற் போனானோ? மண்
தின்ற வாய் திறந்து அண்டம் காட்டியதனால்
அண்டம் தனை விட்டு அகன்றே போனானோ?
ஆலிலையில் ஒரு காலைத் தூக்கியதால்
அமிழ்ந்தே அமிழ்ந்தே ஆழ்கடலுக்கடியே போனானோ?
(கண்ணனை இன்னமும்...)

சகடனை உதைத்து அவன் உருள்வதைக்
காணச் ஓடிச் சென்றானோ!
காளியன் வாலினால் கட்டுண்டது போல் மயங்கிப் போனானோ?
குழலூதி கறவையை அடக்கச் சென்றானோ?
கன்றினை தடியாய் மாற்றி விளாங்கனி பறிக்கச் சென்றானோ?
குன்றினைத் தூக்கி குடைபிடிக்கச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)
பிணை மருத மரங்களை சாய்க்கச் சென்றானோ?
ஆனையை காலனும் அண்டாது காக்கச் சென்றானோ?
வஞ்சகன் கஞ்சனை வாட்டவே சென்றானோ?
பாஞ்சாலியின் மானம் காக்கவே சென்றானோ?
பஞ்சவர்க்குத் தூதாகச் சென்றானோ? பின்னர்
பார்த்தனுக்குத் தேரோட்டச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)

பாவை நான் பாடும் பாவைக் கேளானோ
பாவையின் வாட்டத்தைத் தான் தீர்ப்பானோ
மாலையும் வாடுது - மாலை நேரமும் கூடுது
மன்னவா மன்னவா - மனதுக்கினிய
(கண்ணனை இன்னமும்...)

















எங்கும் எங்கும் கண்ணன் என இருக்க
எங்கோ எங்கோ ஏன் தேடினேன்
எங்கும் மறைபவன் கண்ணன்
எங்கும் தெரிபவன் கண்ணன்
எல்லாம் எல்லாம் எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம் எல்லாமும் கண்ணன்!

4 comments:

  1. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தனபாலன் சார்!

      Delete
  2. //எங்கும் மறைபவன் கண்ணன்
    எங்கும் தெரிபவன் கண்ணன்
    எல்லாம் எல்லாம் எல்லாம் எல்லாம்
    எல்லாம் எல்லாம் எல்லாமும் கண்ணன்!//

    முடிப்பில் தான் எவ்வளவு தேடும் கற்பனை.. முடிவில் தான் எத்தனை 'கண்டுகொண்ட' தீர்க்கம்!


    ReplyDelete
  3. அட?? கண்ணன் எங்கேயுமே போகலை. நம்முள்ளே தான் இருக்கிறான். நேத்துக் கூடக் கண்ணனைக் குறித்தும் அவன் சொன்ன கீதையைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். கண்ணன் எங்கேயுமே போகலை. நம்முள்ளே தான் இருக்கிறான்.

    ஆனாலும் இந்தத் தாபமும் நன்றாகவே இருக்கிறது. அதான் கடைசியில் புரிஞ்சு போச்சு, அனைத்தும் கண்ணனே என! :)))))))

    ReplyDelete