
சிவனின் சித்தமே என்றாலும்,
ஒவ்வொரு நொடியும் நடப்பதுயாவும்
கணபதி வரையும் நுண்ணிய ஓவியமேயாம்.
உடனடியாய் வருவான் ,
உடனேயே இருப்பான் ,
புவி ஈர்ப்பு விசை போலே.
தன்னுடனேயே இருந்து
தன்னைச் சாதிக்கச் செய்ததெல்லாம்
ஆனைமுகன் செயலேயாம்.
அழகாக வந்து மடியில் அமர்ந்து
ஆகா, சாதித்து விட்டோம் என்பான்.
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வரினும்
அத்தனையும் தகர்த்தெரிவான்;
ஆனை நடந்துவந்த வழியில்
அத்தனை வினைகளும் மடியுது பார், அது போல.
ஆனைமுகனின் பானை வயிறில்தான்
புவியும் அடக்கம் என்பர். அவன் செயல்
புவி ஈர்ப்பு விசைபோல்
அத்தனை அண்டங்களையும்
கட்டி இழுத்திடும் விசையாம்.
வழிமாறிப்போனவற்றை
சமன் செய்யும் விசையாம்.
கணபதியின் இளையவன், கதிர்வேலனோ,
அகிலமெல்லாம் அகண்டிருக்கும்
அணுத்துகள்களை இணைத்திருக்கும்
மின்காந்த சக்தி போலேயாம்.
அன்றாட நடப்பில் நம்முடன் நடப்பவன் கணபதி.
ஆழ்மனதில் அதன் சக்தியாய் உரைபவன் முருகன்.
முருகன் மாற்றங்களை விளைவிப்பவன்.
இச்சையில் தொடங்கி, அதை அடையும் செயலில் முடித்து,
ஞானமதை அடைந்திட கூர்வேலும் குறி சொல்லும்,
வள்ளிக்குச் சொன்னது போல.
மின்காந்த சக்திபோல மறைமுகமாய் இருந்தாலும்
அன்றாட நிகழ்வுகளில் ஒளியாகவும் சக்தியாகவும்
திகழ்கிறான் கார்த்திகேயன்.
கண்ணுக்குப் புலப்படா ஒளி அலைகளின்
வெளிச்சம் மட்டும் புலப்படும்.
அவன் அன்றாட நிகழ்வுகளில் புலப்படாவிட்டாலும்,
அவன் சக்தி புலப்படும்.
அன்றாட செயல்களில் அறமது தழைத்திட
அன்பது துளிர்த்திட அழகன் முருகனது சக்தி
முந்தி மேலேற்றட்டும் மூலக்கனலை.
வேலவன் வேலதுவும்
யாமிருக்க பயமேன் எனக் கேட்கும்.
துணையெனக் கொண்டு தூர்ந்திடும் அன்பொடு
குமரனும் குன்றேற்றிடுவான்.
இரண்டு சக்திகளைப் பார்த்தாதிற்று - இறுதியாய்
பார்க்கவிருப்பது, அணு சக்தி! - அவன்
சக்தியவளை இடமொருபாகமாய் கொண்டவன்.
எல்லாவற்றுக்கும் மேலானவன் - மகேஸ்வரன்.
அணுத்துகள்களை இணைப்பது மின்காந்த சக்தியென்றால்,
அணுவிற்குள் ஒளிந்திருப்பது அணுசக்தி.
கணபதி அசுத்த மாயைகளின் அதிபதி.
கந்தன் சுத்தாசுத்த மாயைகளின் அதிபதி.
சிவன் சுத்த மாயைகளின் அதிபதி.
அண்ட சராசரம் ஆடுவதெல்லாம் அவன் ஆட்டத்திற்கே.
பொன்னம்பலத்தில் பொதிந்த ஆட்டமதில்
அணுத்துகள்கள் அன்றாடம் 'உள்ளே, வெளியே' ஆடும்.
அணுத்துகள்களில் வெளியேற்றமும் உள்வாங்கலுமாய்
அனைத்து மாற்றங்களிலும் இருப்பது ஈசன்,
அணுத்துகள்களின் அணுசக்தியாய்!
அவையனைத்திலும் இருக்கும் சக்தி ஆட்டமே
அம்பலத்தரசனின் ஆனந்தத் தாண்டவம்.
ஆக்கமும், அழிதலும், மீள் ஆக்கமும் என பிரபஞ்சமதில்
ஆதி அந்தமில்லா வேதகம வினோதம்.
இவையெல்லாம்
அறிவியலா, அதற்கும் அப்பாலா, ஆரறிவார்!
No comments:
Post a Comment