Sunday, July 12, 2009

"சக்தி" என்று தமிழ்க்கவிதை பாடி...

சக்தி என்பது யாதென்றேன்; சக்தி என்பாய் என்றாய்!
சக்தி சக்தி யென்றேன்; புதுசக்தி பிறக்குது.
பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது.
முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது.
ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது.

(சக்தி என்பது யாதென்றேன்...)
திக்கெங்கும் தேடி திசையெங்கும் ஓடி
அஃதென்றே அறிந்திட, சக்தியுனை நாடி
சந்ததம் பணிந்து சரணம் அடைந்து
முந்தும் முழுமுதல் மூலம் கணபதி
பிந்திடாமல் பிழறாமல் இருத்திட,
வினைகளை வேரறுத்திட,
வேலவன் துணையுடன் விரைவில்
அச்சமதை அகற்றி உச்சிதனை அடைய,
மெச்சும் சக்தி சிவமதை அடைய,
சிவமும் சக்தியும் இணைந்து
சிவசக்தி யாகுமாமே.

(சக்தி என்பது யாதென்றேன்...)
பாரடா, பராசக்தி, எனச் சொன்னான் பாரதி!
பாரினில் ஈதடா, அன்னை அவளே, சிவனின் சக்தி!
எல்லாமுமாய் இருப்பவளாம் சக்தி!
நல்லதெல்லாம் தருபவளாம் சக்தி!
பவத்தினை மாய்த்திடும் சக்தி! - யோக
தவத்தினை புரிந்திடச் சக்தி!
உள்ளத்தொளிரும் விளக்காம் சக்தி!
ஊக்கம் தந்திடும் ஒளியாம் சக்தி!
ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம்!



முண்டாசுக் கவிஞனின் தாக்கத்தில் விளைந்தது, மேற்சொன்ன கவிதை.
தாக்கத்தின் மூலம் ஈதே:

எடுப்பு:
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்திமாரி!
கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரம் தருவாய்.

தொடுப்பு:

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாம் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்!

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி.
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்!

முடிப்பு:
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்!

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

~~~~~~~~~~~
இராகம்: சிந்து பைரவி

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

இங்கும்: