Sunday, May 24, 2009

இராம நாமம்

ஸ்ரீராமஜெயம்!


சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.

இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது. அதுக்குத்தான் இந்த பதிவு!

தியாகராஜ சுவாமிகள் முதல் பதிவர் திரு.ரமேஷ் சதாசிவம் வரை பலரும் இரசித்துப் பருகிய நாமம் இராம நாமம்.

சதாசிவ பிரம்மேந்திரரும், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் பாடித் துதித்த இராம நாமம்.

இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.



இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. 'கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக...' எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: 'நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்' என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!
~~~
அடுத்து வருவது:
இராகம் : தேஷ்
இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்

எடுப்பு:
இராம நாமமே துதி மனமே!
க்ஷேமம் உறவே, நீ தினமே,
சீதாராம நாமமே துதி மனமே!

தொடுப்பு:

பூமியை, பொன்னை, பூவையரையும், நீ,
பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே!

முடிப்பு:

சோதனைகள் பல, வாதனைகள் யாவும்,
நாதனை நினைந்திடில் நாடுமோ?
சீதாராம நாமமே துதி மனமே!
~~~
மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

10 comments:

  1. http://httpbakthiblogspotcom.blogspot.com/2009/03/blog-post.html//

    ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

    ReplyDelete
  2. இராமா..
    உன் பெயர் கேட்டவுடன் உன்னைப் பாடாது இருக்க இயலுமோ >
    உனைக்கண்டவுடன் உன் துதி பாடாது இருக்கவும் கூடுமோ ?
    உனது கானத்தைக் கேட்டுப்பின்னும் அதனைத்தொடர்ந்து ராம கானத்தைப்
    பாடாது இருக்க முடியுமோ?

    முதியவன் நான். இந்த வயதில் அப்படி ஒரு அபிமானம் உன் பெயர்தனில்.
    ராமா ராமா ராமா ராமா ராமா
    என்னால் முடி ந்த‌ அள‌விற்கு அதே பாட‌லை ஒரு வித்தியாச‌மான‌ ராக‌த்தில் பாகேஸ்வ‌ரியில்
    பாடிவிட்டேன். குர‌ல் வ‌ள‌மில்லை. ம‌ன‌த்தில் எழும் ப‌க்தி அலைக‌ளின்
    வ‌ள‌மோ ஆழி அலைக‌ள் போன்ற‌து ஆத‌லினால்,
    என்னதான் இருக்க‌ட்டும், பாடிவிடுவோம் என்று பாடிவிட்டேன்.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    http://vazhvuneri.blogspot.com

    பாட்டைக் கேட்டு ஏதோ ப‌ழைய‌ ஹி ந்தி பாட‌ல் போல் இருக்கிற‌தே என்றால் அத‌ற்கு
    நான் பொறுப்பில்லை. ஹேம‌ன்த‌ குமாருக்கும் இ ந்த‌ பாகேஸ்வ‌ரி ராக‌ம் மிக‌வும்
    பிடிக்கும்.

    ReplyDelete
  3. வாங்க கீதாம்மா,
    தங்கள் உடல்நிலை சற்றுத் தேவலையா?
    விரைவில் பூரணகுணமடையா பிரார்த்தனைகள்.
    இராமநாம பக்தியினையும், அதில் தலைசிறந்த பக்திமான்களைப் பற்றியுமான தனி வலைத்தளம் தாங்கள் தருகிறீர்கள் என்பது இப்போதுதான் தெரிந்தது, மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  4. மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள் ஜீவா. யேசுதாஸ் நேரு 100ஆண்டு விழாவில் பாடிய சிடி வெளியிட்டில் கேட்டிருக்கிறேன். நாமம், பாடல், குரல் என்று எல்லாமே இனிமையாக இருக்கும்.

    ReplyDelete
  5. வாங்க சூரி ஐயா,
    தங்கள் இராமாபிமானம் கண்டு, ஆச்சரியம் ஏது இல்லை, ஆனால், மிகவும் மகிழ்ச்சி!
    இராமப்பிரம்மம் தனில் திளைத்த அனுபவம் உங்கள் வார்த்தையில் தெரிகிறது, மிக்க மகிழ்ச்சி!

    தாங்கள் பாடிய பாடலின் சுட்டி தரவில்லையே - அதனால் என்ன, நாங்கள் தேடிக் கண்டு பிடித்து விட்டோம்! இங்கே அது:
    http://www.youtube.com/watch?v=eNKPjiYwJRA

    ReplyDelete
  6. வாங்க மௌலி சார்!
    அப்படியா, ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறீர்களா!
    இந்தப் பாடல், ஜேசுதாஸ் பாடுவதற்காகவே இயற்றப்பட்டது என அறிகிறேன்!

    ReplyDelete
  7. வாலி சுக்ரீவனோடு போர் புரிந்து கொண்டிருக்கையில் எங்கிருந்தோ எதிர்பாராது வந்த பாணம் அவன் நெஞ்சில் தைக்கிறது. பாணம் தைத்துத் திகைத்தவன், 'அழுத்தும் இச்சரம் எய்தவன் ஆர் கொல்?' என்று அறிய அம்மைப்பற்றிப் பார்க்கும் பொழுது அதில் 'இராம' என்னும் நாமத்தைக் காண்கிறான். இந்த இடத்தை 'இராம' நாம மகிமையைச் சொல்ல அருமையான வாய்ப்பாகக் கொள்கிறார் கம்பர்,

    'மும்மை சார் உலகுக்கொல்லாம் மூலமந்திரத்தை முற்றும் - தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை
    தானே - இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராம' என்னும்-- செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்'

    என்கிறார். 'இராம' நாம மகிமைக்கு சரியான இடத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வகையாக மிகச்சரியாக வந்த விளக்கம் இது!

    ReplyDelete
  8. ஆகா,
    அருமையாக கம்பனாழ்வானின் இராமகாதையில் இருந்து மேற்கோள் காட்டினீர்,மிக்க நன்றிகள்!
    இராம நாம மகிமையை இதைவிட சிறப்பாக யார் சொல்ல இயலும்!
    தனிப் பெருமை தரும் பதமாம்!
    ஆகா!

    ReplyDelete
  9. //மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்//

    மூன்று முறை சொல்லுவாங்க சகஸ்ரநாமத்தில்! நீங்களும் மூன்று இராம நாமப் பாடல் கொடுத்திட்டீங்களா ஜீவா?

    கண்ணுதற் கடவுள் சிவபிரான் அகமகிழ்ந்து சொல்லும்...
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மனோ ரமே!

    ReplyDelete
  10. வாங்க கே.ஆர்.எஸ்,
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மனோ ரமே!
    சஹஸ்ர நாமத்திற்கு ஒப்பான நாமம், இராம நாமம் அல்லவோ!

    நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்!

    ReplyDelete