Wednesday, April 29, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திமூன்று

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

~~~

இவ்வாறாக ஆத்ம போதம் நிறைவடைந்தது.
பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது.

உசாத்துணை: சுவாமி நிகிலானந்தரின் ஆத்ம போதம் ஆங்கில உரை.

மேலும், இணையத்தில் கிடைத்த சுவாமி சின்மயானந்தரின் ஆங்கில உரையாக்கம்:

ஆத்ம போதம் - சுவாமி சின்மயானந்தர் உரை ஓம் தத் சத்!

24 comments:

  1. அருமையான பதிவுகள். தற்போது நான் எழுதும் பதிவுகளுடன் இயைந்துபோயிற்று. நன்றி!

    ReplyDelete
  2. ramaNar thiruvadigaLe charaNam!

    Hats off Jeeva!
    Good series of 23 posts! Slow thaan but was very steady!

    Few questions abt aanma ennum theertham...Shall I?

    ReplyDelete
  3. வாங்க திவா சார்,
    தங்களின் பதிவுகளும், வருகையும் எனக்கு ஊக்கம், நான் தான் நன்றி சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  4. வாங்க மௌலி சார், நல்லது!

    ReplyDelete
  5. வாங்க KRS,
    மிக்க நன்றி!
    கேக்கவும் வேணுமோ?, கொளித்திப் போடுங்க!
    போனதடவை நடந்த நீண்ட உரையடலின் சுவாரஸ்யம் இன்னும் அகலவில்லை!

    ReplyDelete
  6. கிட்டத் தட்ட தி.வா.வும், திரு வேளுக்குடியும் இதையே தான் சொல்லிட்டு இருக்காங்க. நல்லாப் புரிஞ்சுக்க முடிஞ்சது.நன்றி.

    ReplyDelete
  7. மிக்க நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  8. சாரி ஜீவா! கொஞ்சம் லேட்! பந்தல்-ல யாரோ அனானி விஷயமா நேரம் ஆயிடுச்சி! :)

    //அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ//

    இங்கே தான் சரியாப் புரியலை!
    ஆன்மா = தீர்த்தம்!
    அதில் தன்னைத் தானே தோய்த்துக் கொள்ளுதல்!
    அதாச்சும் தன்னை(ஆன்மாவை) தீர்த்தத்தில் தோய்த்துக் கொள்ளல்!

    தீர்த்தமும்=ஆன்மா, தானும்=ஆன்மா! அப்புறம் எப்படித் தீர்த்தத்துக்குள் தோய்த்துக் கொள்ள முடியும்?
    ஆன்மாவுக்குள் ஆன்மாவே எப்படித் தோயும்?

    இதைக் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  9. பரவாயில்லை இரவி!
    நம்ப கடைதான் எப்போதும் இருக்கே!

    நல்லா பாயிண்டை பிடிச்சீங்க.
    அது இன்னொன்றா இருந்ததானே அதிலே தோய முடியும், அதனால, அது இன்னொன்றா இருக்க வேண்டும் என்பது தானே, நீங்க சொல்ல வரீங்க!

    நாம ஜீவனாய் இருக்கும் வரை, அறியாமை அகக்கண்ணை மறைப்பதால், அது நாம செய்யறதுக்கெல்லாம், என்னாலதான் இதெல்லாம் நடந்ததுன்னு தோண வைக்குது. அதனால், ஆன்மாவில் தெரிவது, பரமனின் பிம்பம்தான் என்கிற உண்மையை உணர முடியலை. அதுக்கு என்ன பண்ணச் சொல்லறாங்கன்னா, அந்த ஆன்மாவிலேயே போய், அதில் நனை - அப்படிச் சொல்லறாங்க.
    அதாவது, இந்த நான், எனது அப்படீங்கற எண்ணம் இங்கிருந்து வருது அப்படீன்னு அதன் மூலத்தை தேடச் சொல்லறாங்க. அதன் மூலம் ஏற்படுகிற தன்னறிவினால், தான் உண்மையில் யார்? தன் ஆன்மா, பரத்தின் பகுதி என்னும் உண்மை விளங்க, பின் இகபரசுகம் தான் என்று சொல்லறாங்க.

    தீர்த்தம் அப்படின்னா, கோயில் என்றொரு பொருளும் இருக்கல்லவா.
    அப்படிப்பார்த்தா, இந்த ஜீவாத்மாவில் பரமாத்மா குடியிருக்கும் கோயிலாக நினைத்து அதை வழிபட, அதனால, ஜீவனின் அக அழுக்குகள் தோய்த்து வெளியேறும் எனவும் கொள்ளலாம்!

    ReplyDelete
  10. //அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ....//
    தீர்த்தமும்=ஆன்மா, தானும்=ஆன்மா! அப்புறம் எப்படித் தீர்த்தத்துக்குள் தோய்த்துக் கொள்ள முடியும்?
    ஆன்மாவுக்குள் ஆன்மாவே எப்படித் தோயும்?//


    கே.ஆர்.எஸ். கேள்வி நியாயமானதுதான். ஆனால், கே.ஆர்.எஸ். கேட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.



    //தீர்த்தமும்=ஆன்மா, தானும்=ஆன்மா! அப்புறம் எப்படித் தீர்த்தத்துக்குள் தோய்த்துக் கொள்ள முடியும்?
    ஆன்மாவுக்குள் ஆன்மாவே எப்படித் தோயும்?

    இதைக் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நல்லா இருக்கும் //
    //நான், எனது அப்படீங்கற எண்ணம் இங்கிருந்து வருது அப்படீன்னு அதன் மூலத்தை தேடச் சொல்லறாங்க. அதன் மூலம் ஏற்படுகிற தன்னறிவினால், தான் உண்மையில் யார்? தன் ஆன்மா, பரத்தின் பகுதி என்னும் உண்மை விளங்க, பின் இகபரசுகம் தான் என்று சொல்லறாங்க
    //


    பரம்பொருள் என நாம் அறுதியாகச் சொல்கிறோமே அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது எனச்
    சொல்லிவிட்டோம். அப்படியானால், இந்த ஜீவாத்மாவும் தானே அதில அடக்கம் ! அப்படி இருக்கையில்
    திரும்பவும் இந்த ஜீவாத்மா போய் ஒரு புனித நீரில் மூழ்கி... என்ன இதெல்லாம் ! மேலும், அப்ப அந்த புனித‌
    நீர் என்று எதைச் சொல்கிறோமே அது அந்த பரம்பொருளில் அது ஏற்கனவே அடங்கி இல்லாது தனியாக‌
    இருக்கிறதா ?

    பிருஹதாரண்யகத்தில் இதற்கான விளக்கங்கள் முதல் அத்தியாயத்திலேயே தரப்பட்டுள்ளது.

    ஜீவாத்மா எப்பொழுதுமே பரமாத்மா தான். அனாதி. பரமாத்மா அனாதி என்று சொல்கையில் பரமாத்மா உள்ளடக்கியுள்ள ஜீவாத்மாவும் அனாதி. அனந்தம்.

    முதல் நிலை. ஜீவாத்மா தன்னை பரமாத்மாவை விட்டுத் தனித்துப் பார்ப்பது. இதை நாம் அறியாமை எனச் சொல்கிறோம். இந்த அறியாமை நிலையிலும் ஜீவாத்மா பரமாத்மா தானே அன்றி வேறில்லை.

    இரண்டாவது நிலை. ஜீவாத்மா கதிரவன் ஒளி பட்டு, ஞானம் வந்து ( 21,22 பாசுரங்கள் பார்க்கவும் )
    தானே பரமாத்மா என உணரும் நிலை. தொடர்ந்து உணர்ந்த நிலை.

    இந்த ஞானமும் பரமாத்மாவுக்கு அப்பாற்பட்டதல்ல. ஞானமே பரமாத்மா. பரமாத்மாவே ஞானம்.

    ஜீவாத்மா இந்த ஞானம் பெறுவதற்கான நேரம் வருகையில், தானே
    பரமாத்மா என உணர்கிறது. உணர்கிறான்.

    அஹம் பிரும்மாஸ்மி என்ற உணர்வு வருவதற்கு முன்பும், ஜீவாத்மா பிரும்மாத்மா தான். ஞானம் சாதனம் முதற்கண். அடுத்த நிலையில், ஞானமே பிரும்மமானதால், ஞானமே ஸாத்யமும் ஆகிறது.

    கடற்கரையில் ஒருவன் நின்றுகொண்டு, கடலைப்பார்க்கிறான். அதில் எழும் அலைகளைப்பார்க்கிறான்.
    கடல் வேறு, அலைகள் வேறு என்று ஒரு கணம் தோன்றுகிறது. அதில் இன்னமும் சிந்திக்கிறான். இந்த‌
    அலைகளெல்லாம், கடலிலே தான் அடக்கம். அவற்றிலிருந்துதான் எழுகிறது. அவற்றிலேயே அடங்குகிறது.
    ஆகவே அலைகளும் கடல்தான் என உணர்கிறான். ஆஹா! இவ்வலைகளும் கடலும் ஒன்றே எனத் தெளிவடைகிறான்.

    பார்க்க:

    அயம் ஆத்மா ப்ரும்மம். .. மஹா வாக்கியம்

    கடலைப்பார்ப்பவன் மனம் அமைதி அடைகிறது. ஆஹா ! நான் தான் கடலையும் அலைகளையும்
    பிரித்துப்பார்த்தேன். இரண்டும் ஒன்று தானே என நினைக்கிறான். அவனுக்கு இந்தத் தெளிவு வருவதற்கு
    முன்பும் கடல் அலைகளை உள்ளடக்கியதுதானே.

    இந்த ' அயம் ஆத்மா பிரும்மம் " என்ற அறிவு , முன் இருந்த அறியாமை ( தனித்து,இரண்டாகப்பார்க்கும் அறியாமைதனைப் போக்குகிறது.)

    உடனே தோன்றுவது. இறுதி நிலை. உணர்வு பூர்வமான நிலை. அவன் சொல்வான்: நான் தெளிந்தேன். அஹம் பிரும்மாஸ்மி. (மஹா வாக்கியம் ) நானே பிரும்மம் என்கிறான்.


    சுப்பு ரத்தினம்.
    அது சரி. ஒரு சிங்கத்திற்குத் தான் சிங்கம் எனத்தெரிவதற்கு முன்பாக, அது சிங்கம் அல்லவோ ?

    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  11. ஆகா, அருமையான விளக்கத்திற்கு நன்றி சூரி சார்!
    //கே.ஆர்.எஸ். கேட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.//
    எனக்கும் தான்!

    போன பின்னூட்டம் இடும்போது, அடடா, சூரிசார் வந்து விளக்கினா நல்ல இருக்குமேன்னு நினைச்சேன். அதுபோலவே, நீங்கள் வந்து சொன்னமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. ஒரு மண் குடம் இருக்கிறது. நீர் நிறைந்து இருக்கிறது.
    அது தன்னை முற்றிலும் நிறைந்தது என நினைக்கிறது.

    அந்த மண் குடத்தை எடுத்துப் போய் அதன் சொந்தக்காரர்
    நதியில் சேர்த்தார்.

    மண் குடம் இப்போது பார்த்தது. 'அடடா ! எங்குமே நீர் இருக்கிறதே !
    நான் மட்டுமே என நினைத்தது சரியில்லை போலும் !!'

    சிறிது சிறிதாக‌ அது த‌ன்னை ம‌ற்ற‌திலிரு ந்து த‌னிப்ப‌டுத்தும் ம‌ண் உறை
    க‌ரைவ‌தை க‌வ‌னிக்கிற‌து.

    'நான் என்ப‌து இல்லையோ ?'

    வெளியே உள்ள‌ நீரும் உள்ளே இருக்கும் நீரும் க‌ல‌க்கின்ற‌ன‌.


    'ஆமாம். நான் என்ப‌து இல்லை போல்தான் இருக்கிற‌து.'


    ம‌ண் ச‌ட்டி முற்றிலும் க‌ரைய‌,

    'அட‌ ! நான் என்ப‌தே இல்லை '


    ' நான் ' என எதை நினைத்தேனோ அது 'எல்லாம்' தான்.

    'எல்லாமே நான் '

    தீர்த்தவாரியில் முழுகும் ஒரு மண்சட்டியின் நினைவோட்டங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  13. அருமையான உவமையுடன், விளக்கினை விளக்கினால் விளக்கினீர், நன்றி சூரி ஐயா!

    ReplyDelete
  14. பார்த்தீங்களா? இப்படிக் கேட்டாத் தானே மழை மாதிரி பொழிதல் நடக்கிறது? :)
    ஜீவா வடமழை, சூரி சார் தென்மழை-ன்னு விளக்க வாரிதிகளுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. //கே.ஆர்.எஸ். கேள்வி நியாயமானதுதான். ஆனால், கே.ஆர்.எஸ். கேட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
    //

    ஆகா! இது என்ன வியப்புக் குறி?
    அடியேனுக்குப் பெருமாளின் திருநாமம் அன்றி வேறு ஒன்னுமே சரியாத் தெரியாது சூரி சார்! நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு ஒன்றிலேன்! :)

    //அப்புறம் எப்படித் தீர்த்தத்துக்குள் தோய்த்துக் கொள்ள முடியும்?
    ஆன்மாவுக்குள் ஆன்மாவே எப்படித் தோயும்?//

    நீருள்ள மண்குடம் நீரிலேயே தோயும் என்ற பதிலைத் தான் நம்ம ஜீவா கிட்ட எதிர்பார்த்தேன்! ஆனா நீங்க தான் வந்து சொல்லணும்-ன்னு இருக்கு! :)

    மண்குடம் ஆற்றில் தோய்வது போல, ஜீவாத்மா பரமாத்மா என்னும் தீர்த்தத்தில் தோயும் சரி! இப்போ அடுத்த கேள்வி! :)

    ஆனால்
    //*தன்* ஆன்மாவான 'தீர்த்தத்தில்' தன்னைத் தானே தோய்த்துக் கொள்கிறானோ// என்று ஜீவா சொல்லி இருக்கிறாரே?
    பரமாத்மாவான 'தீர்த்தத்தில்' தன்னைத் தானே தோய்த்துக் கொள்கிறான் என்றல்லவா இருக்க வேண்டும்?

    ஜீவாத்மா-பரமாத்மா வேறுபாடு தோய்ந்த பின் இருக்காது என்பது ஒரு கருத்து (அத்வைதம்)
    ஆனால் தோயும் முன் வேறுபாடு அல்லது வேறுபாடான ஒரு தோற்றம் உண்டு தானே?

    அப்படி இருக்க, பரமாத்மாவான 'தீர்த்தத்தில்' தன்னைத் தானே தோய்த்துக் கொள்கிறான் என்றல்லவா இருக்க வேண்டும்?

    ReplyDelete
  16. //இப்படிக் கேட்டாத் தானே...//
    அதே அதே!

    ReplyDelete
  17. //அப்படி இருக்க, பரமாத்மாவான 'தீர்த்தத்தில்' தன்னைத் தானே தோய்த்துக் கொள்கிறான் என்றல்லவா இருக்க வேண்டும்?//
    :-)

    ReplyDelete
  18. //அடியேனுக்குப் பெருமாளின் திருநாமம் அன்றி வேறு ஒன்னுமே சரியாத் தெரியாது சூரி சார்! நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு ஒன்றிலேன்! :)//
    பெருமாளின் திருநாமமே நுண்ணறிவு, பேரறிவு, உயர் ஞானம் - அதுவே இங்கே தோயத் தீர்த்தம்!
    :-)

    ReplyDelete
  19. //பெருமாளின் திருநாமமே...இங்கே தோயத் தீர்த்தம்!//

    மூன்று கேள்விக்கும் ஒரே பதிலில் பதிலளித்து ஹாட் ட்ரிக் செய்த எங்கள் தத்துவ வித்தகர் ஜீவா வாழ்க! வாழ்க! :)

    பை தி வே, சூரி சார் இப்போ எங்கே இருக்காரு? வட அமெரிக்கா தானே?

    ReplyDelete
  20. :-)

    ஆமாம், கே.ஆர்.எஸ்,
    இங்கேதான் இருக்காரு. உங்க ஊருக்குப் பக்கத்திலதான்! விரைவில் தன் பதிலை வந்து சொல்லுவாருன்னு எதிர்பார்ப்போம்!

    ReplyDelete
  21. ஜீவாத்மா-பரமாத்மா வேறுபாடு தோய்ந்த பின் இருக்காது என்பது ஒரு கருத்து (அத்வைதம்)
    ஆனால் தோயும் முன் வேறுபாடு அல்லது வேறுபாடான ஒரு தோற்றம் உண்டு தானே?//

    வேறுபாடான ஒரு தோற்றம் என்று சொல்லிவிட்டீர்க‌ள்.
    ஆக‌,உண்மையில் வேறுபாடு இல்லை .

    அதுவும், யாருக்கு இத்தோற்ற‌ம் ?

    பதில் தோன்றுமுன் இன்னொரு காட்சி பார்க்கலாம்.

    சொப்பு ர‌ங்க‌னை ராமானுச‌ முனிவ‌ரும் பார்த்தார். அவ‌ர‌து சீட‌ர்க‌ளும் பார்த்த‌ன‌ர்.

    முனிவ‌ரோ,
    // அடியேன் நாயிந்தே, ஜீயேன்!" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார்! மரக்குச்சி ரங்கன் முன்பாக அடிக்கீழ் வீழ்ந்து சேவிக்கிறார்!//

    அதே ச‌ம‌ய‌ம்,

    //வயதில் மூத்த சீடர்: "..... ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், கீழே விழுந்து சேவித்தீரே! என்ன ஜீயரே இது?"///

    என்றாராம்.

    சொப்பு ர‌ங்க‌ன் ஒருவ‌ருக்கு ர‌ங்க‌னாகவே தெரிகிறார்.
    அதே சொப்பு ர‌ங்க‌ன் இன்னொருவ‌ருக்கு சொப்பாக மட்டுமே தெரிகிறார்.

    இந்த தோற்ற மாறுபாடு,அல்லது தோற்றப்பிழை (differences in perception )
    ஏற்பட்டது
    சீடருக்கா அல்லது ஆசார்யனுக்கா ?

    நிற்க.

    அண்மையில் ந்யூ யார்க் பாமூனாவில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கனாதரைத் தரிசித்தேன்.
    தீர்த்தம் தந்தார்கள். அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டு தலையில் ப்ரோக்ஷணம் செய்துகொண்டார்கள்
    பக்கத்தில் இருந்தோர் பலர். நான் மட்டும், அந்த வாட்டர் நல்ல வாட்டர்தானே என்று ஒரு தடவைக்கு
    பத்து தடவை பார்த்தேன்.

    " என்ன பார்க்கிறீர்கள் ! ஸ்ரீமன் நாராயண பிரஸாதம் " என்றார் பட்டர்.
    நாராயணனே பிரஸாதம் என்று சொல்வது போல் தோன்றியது.

    நானோ நாராயணனையும் பிரஸாதத்தையும் தனித்தனியாகப் பார்த்தேன்.

    ரங்கா ! ரங்கா !!

    சுப்பு ரத்தினம்
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.

    ReplyDelete
  22. >> என்ன பார்க்கிறீர்கள் ! ஸ்ரீமன் நாராயண பிரஸாதம் <<
    இரண்டு வாரங்களுக்கு முன் இங்கே அட்லாண்டா வேங்கடவன் சந்நிதியில், குழந்தைக்கு தீர்த்தம் தந்துவிட்டு, எங்களுடம் இதையே சொன்னார்!

    ReplyDelete
  23. விளக்கங்கள் அருமை. நன்றி

    ReplyDelete