ஆ!, அன்பர்களுக்கு இந்த தலைப்பு, பிடித்திருப்பதால்(!), இதனையே வைத்துவிடுகிறேன்!
ஆ! = ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?
கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்!
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)
ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!
(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)
பாடுபவர்: திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ
Saturday, October 11, 2008
இவ்வுலகம் எப்படிப்பட்டது : கபீர்
அன்றாடம், இந்த உலகத்தில் நாம் நிற்பதும், நடப்பதும், தூங்குவதும், சாப்பிடுவதும், வேலை செய்வதும், இன்ன பிறவற்றையும் செய்வதும், வழக்கமாகி விடவே, இவ்வுலகத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் இயல்பாகி விடுகிறது. நிற்பதும், நடப்பதும், இன்னபிறவும் அற்ப மாயை என்பதை அறியா மனம், இந்த அன்றாட நிகழ்வுகளைத் தாண்டிய ஆழ்ந்த பொருளை எண்ணாது, மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.இவ்வுலகம் எப்படிப்பட்டது என்பதனை, இக்கவியில் எளிதாகச் சொல்கிறார், மகான் கபீர்தாஸ். துன்பத்தில் சிக்க வைக்கும் இவ்வுலகத்தில் இருந்து சுதந்தரம் பெறுவதெப்படி என்பதனையும் அவரே சொல்கிறார், கேளுங்கள்:
புகழ் பெற்ற கசல் பாடகர் ஜக்ஜீத் சிங் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்.
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை
யே சன்சார் காஹது கி புடியா பூண்ட் படே
குலு ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை
யே சன்சார் ஜாடு அவுர் ஜாகடு
ஆகு லகே பர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை
யே சன்சார் காடோ கீ பாடி
உல்ஜ் புல்ஜ் மர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை
கெஹத்து கபீரு சுனோ பாய் சாதோ
சத் குரு நாம் டிகானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை
(உச்சரிப்பில் பிழைகள் இருக்கலாம், பொறுத்தருள்க!)
இப்போ, இக்கவியை தமிழாக்கிப் பார்க்கலாமா?
இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே... அன்னியமான
இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...
இவ்வுலகம் காகித உருண்டைபோலே - ஒருவாளி
நீரிரைத்தால், கூழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)
இவ்வுலகம் முட்புதர் போலே - அதில் சிக்கித்
தம்மைத் தொலைக்கச் செய்யுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)
இவ்வுலகம் வெறும் மரங்களும், புதர்களுமே - அதில்
சிறுதீ பற்றினாலும், பாழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)
கபீரன் சொல்வதைக் கேளும் - சாதுக்களே,
சத் குருநாதரின் நாமமே, நமது ஒரே இலக்கு!
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)
உருது கவிஞர் ஒருவரைப் பற்றிய இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில்,
இப்பாடலை தெருவில் பாடி வருவதுபோல அமைத்திருக்கிறார்கள்.
கீழே இருக்கும் அசைபடத்தில், இப்பாடலையும், அப்படத்தின் இதர காட்சிகளையும் காணலாம்:
Subscribe to:
Posts (Atom)