Wednesday, March 30, 2005

Spring, Summer, Fall, Winter & Spring

தங்கமணியின் சிபாரிசுக்குப்பின் இந்த கொரியப்படத்தைப் பார்த்தேன். (ஆங்கில subtitles உடன்)

மீண்டும் அவருடைய முகவரியைப்படித்தேன். அருமை. படத்தப்பார்த்தபோது விளங்காத சில விஷயங்களும் பின்னர் விளங்கின.
உதாரணத்திற்கு,
//
படம் முழுவது தொடர்ந்து கோர்க்கப்பட்ட குறியீடுகளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
அந்த விகாரையில் இருக்கும் ஒரே அறையில் குருவும் சீடனும் படுப்பதற்கு ஒரு பக்கத்தில் இடமும், விருந்தினர்கள் படுப்பதற்கு மறு பக்கத்தில் இடமும் இருக்கும். இந்த இடங்களுக்கு செல்ல ஒரு நிலையும், கதவும் உண்டு;
ஆனால் அதைத்தவிர பக்கத்தடுப்புகள் எதுவுமிருக்காது. (அதாவது அந்த கதவின் வழியன்றியும் அந்த இடத்தையடையலாம்) //
இதற்கென்ன பொருள்?
எனக்குத்தோன்றியது:
பாவமென்னும் கல்லரைக்கு பலவழி, தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி என்பதே. ஒரு சமயம் இளம்துறவி இரவில் எழுந்து செல்லும்போது, கதவு இடிக்க, முதிய துறவியை தாண்டிச்செல்வதுபோல் காட்டியிருப்பது இந்தக்குறியீட்டினால் ஆகத்தான் இருக்க வேண்டும்.

படத்தில் குரு எழுதச்சொல்லும் புத்த சூத்திரம் என்ன என்று தேடினேன். மஹாயானத்தைச்சேர்ந்த ப்ரஜ்னபரமிதா என்பவரின் சூத்திரம்:
http://www.wildmind.org/meditation/mantra/gategate.html

சீடன் பெரியவனாக வளர்ந்தபின் குரு முதலில் சேவலையும், பின்னர் ஒரு பூனையையும் வளர்க்கிறார். இவற்றின் பொருள் தெரியவில்லை. இரண்டுமுறை சீடன் பிரியும்போதும், அவன் இந்த வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு செல்கிறான். இதற்கு எதோ பொருள் இருக்க வேண்டும்.

மேலும் படத்தில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண், விஹாரைக்குள் குருவினைக்காண வருவாள். அவள் தன் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அங்கேயே விட்டுவிட்டு வெளியேரும்போது, கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து விடுவாள். அவள் சடலத்தை பனிக்குழிக்குள் இருந்து மீட்டபின், குழிக்குள் இருந்து, புத்தர் முகம் போலத்தெரியும். இதன் பின்னணியும் தெரியவில்லை. ஏதாவது ஜென் கதையின் பின்னோட்டமாக இருக்கலாம்.

படத்தைப்பார்த்தேன் என்று செல்லுவதைவிட, படம் பார்ப்பதில் ஈடுபட்டேன் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.
படத்தை அறிமுகப்படுத்திய தங்கமணிக்கும் நன்றி.

Sunday, March 27, 2005

பாரதி - என் அரசவைக்கவி

திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள் ஓர் கவி.
பாரதி - என் அரசவைக்கவி.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என்னவைக்கு அழைத்தேன்,
கவி பாட.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உருதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொருநாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.