Monday, December 12, 2011

ஹரியும் ஹரனும்

ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.
ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.
ஹரிஹரன் என்பாருண்டு.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே!  சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.

எடுப்பு
மா ரமணன்
உமா ரமணன்
மலரடி பணி மனமே- தினமே

தொடுப்பு
மாற ஜனகன்
குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்- பாவன

முடிப்பு
ஆயிரம் பெயரால் உரைத்திடும்
ஆயிரம் உருமாறினும்
உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்

உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:


அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.

இயற்றியவர்: நீலகண்ட சிவன்
பண்: காந்தார பஞ்சமம்
இராகம்: கேதாரகௌளை
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்
தரிசனம் செய்வோமே

தொடுப்பு
நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்
ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து

முடிப்பு 
அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு
அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு
பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு
பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு
உன்னத இடப வாகனமிவர்க்குண்டு
உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு
தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு
சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு

இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "தில்லையம்பலத்தானை" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:

இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : சஹானா
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை
தரிசித்துக் கொண்டேனே

தொடுப்பு
தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்

முடிப்பு
தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே
துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே
அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே
தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே
திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே
அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே
அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:

Sunday, December 04, 2011

மெய்ப்பொருளின் சாயை

மகா காளியின் புகழ்
ராகம்-ஆனந்த பைரவி                                                                  
தாம்-ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி என்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவுமொரு வண்டு-தழல்

காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்கள் ஆறுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ

வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம்

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண்டு உய்கை-அவள்

ஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை.

இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலாம் அவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில்

எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை.

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கும் எங்குமுள வாகும்-ஒன்றே
யாகினால் உலகனைத்தும் சாகும்-அவை

அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.

நீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்துவர் நினைத்தபோது-அந்த

நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது.

மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்:
1. எம்.எஸ் அம்மா
2. ராஜ்குமார் பாரதி 

ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்!
பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ!
அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே!
எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே!

மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்:
சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.
இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்!
எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும்.

Monday, November 21, 2011

தில்லை விளாகம்

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.

"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

Sunday, October 02, 2011

நவராத்ரி - இதன் பொருள் யாது?

ஒன்பது இரவுகள் - அன்னை சக்தியைத் துதிப்பதற்கு - குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுவது.
.... மேலும்....?

சக்தி?
இயக்க சக்தி - இயங்குவதற்கான சக்தி.
இந்த சக்தி உடலில் இருந்தால் தானே எந்த செயலையும் செய்ய இயலும்?
ஓட்டப்பந்தயத்தில் போல ஓடி தங்கப் பதக்கத்தைப் பெறவும் சக்தி வேண்டுமல்லவா!
ஒரே நோக்கத்தோடு உடலில் சக்தியை கவனத்தோடு செயலில் நடத்துகையில் நமது சக்தியின் திறனை அறிகிறோம்.  மன நிறைவைப் பெறுகிறோம்.
இது போலவே தான் இறைவனின் சக்தியும்.
இறைவனின் சக்தியில் கவனத்தைக் குவிக்கையில் - அந்த குவிமுனையில் விளையும் ஆக்கத்தினை அறிகிறோம். அவ்வாறு விளையும் ஆக்கமே அன்னை சக்தியாம்.

எப்படி உடலில் சக்தியினை அறிகையில் "நம்மால் இந்தச் செயலை செய்ய முடியும்" என்கிற திறனை அறிகிறோமோ, அதுபோல, இறைசக்தியெல்லாம் ஒன்று சேர - அவற்றின் ஆதாரத்தினை - அன்னையை அறிகிறோம்.

எப்படி குழந்தைக்கு அதன் அன்னை ஆதாரமோ அதுபோல உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உயிரில்லா பொருட்களுக்கும் அன்னை சக்தியே ஆதாரம். அந்த ஆதாரத்தினை, இறைவனின் சக்தியினை அறிகிறோம்.

"ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்"
என்பான் "பாட்டுக்கொரு புலவன்" பாரதி.

இவ்வாறு அன்னையை, இறை சக்தியின் ஆதாரத்தினை அறியும் சாதனையைச் செய்வதற்கான பண்டிகையே - நவராத்திரி எனப்பட்டது.

Friday, September 30, 2011

மாயா யாமா

மாயை? இச்சொல்லின் பொருள்தான் என்ன?
மாயை என்பது காட்சிப்பிழையா அல்லது கானல் நீரா?

தொடக்கக் காலத்தில் மாயை என்றால் மகேசனின் ஜாலமென்றுதான் பொருள்.
காலப்போக்கில், அப்பொருள் மறைந்து போய், மனமயக்கமே மாயை என்று பொதுவாக பொருள் கொள்ளப்பட்டது. இந்த உலகமே பொய். காண்பதெல்லாம் வெறும் மாயை என்று பொருள் சொல்லப்பட்டது. நிலையாமை என்பதுதான் மாயை என்பதாகக் கொள்ளப்பட்டது.
 
சுவேதஸ்வதர உபநிடதம் சொல்லுவதை சற்று நோக்கினால்:
"இயற்கையே மாயை என்பதறிவோம்.
மனமே மாயையின் அரசன் என்பதை அறிவோம்.
அவ்வரசனே இறைவன் என்பதறிவோம்."


கிட்டத்தட்ட  கனவில் நடப்பது போல, பாதி உறக்கத்தில், பாதி விழிப்பில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்க, நமது புலன்களால் உணரப்படக்கூடயதை மட்டுமே உலகமாக, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவாய் நாம் கொள்வதால் - நம்மைப் பொறுத்த வரையில் பிரபஞ்சம் என்பதுஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

1. ஒரு பக்கம் மாயை என்றால் "கனவுக் காலம், வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என்பது போன்ற நிலையின்மையாகவும், புலன்களால் உணரப்படுவதாகவும், அதனால் மனமும் அதே மயக்கத்தில் அமிழ்ந்து போவதாகக் கொள்ளப்பட்டாலும்,

2. அதே மாயையினால்தான் எங்கெங்கும் வியாபித்து, எல்லாப் பொருளிலும் இருக்கிறான் இறைவன்.


மேலே சொல்லப்பட்ட இரண்டு கூற்றுகளும் இந்து சமயத்தின் தத்துவ அடித்தளமாகும்.
மற்ற எல்லா கூற்றுகளும் இவற்றில் இருந்து வந்தவைதான்.

-சுவாமி விவேகானந்தரின் "மாயை" பற்றிய சொற்பொழிவுகளில் இருந்து
சகோதரி நிவேதிதையின் குறிப்புகள் (The Master as I saw Him)


Monday, September 19, 2011

இலக்கும் இறுதியும்

இலக்கு தொலை தூரத்தில் இருக்கிறது.
இயற்கைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ஆனால் அது,
நம்மை எப்போதும் தன்பால் ஈர்த்தபடியே இருக்கிறது!
அதனை அருகாமையில் வரச் செய்ய வேண்டும்.
அருகே அருகே என அருகாமையில் வர வர:
வானத்தின் இறைவன் இயற்கையில் தெரிகிறான். பின்னர்,
இயற்கையில் தெரிந்த இறைவன் இயற்கையாகவே மிளிர்கிறான்.
அடுத்து, உடலாகிய கோயிலில் உறைகிறான்.
பின்னர், உடலில் உறைந்த இறைவன் உடலாகவே ஆகிறான்.
இறுதியாய் அவனே அதன் ஆன்மாவாகிறான்.
அது வரை இலக்கானது நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கெங்கெலாமோ தேடப்பட்டவன்
இங்கேயே இதயக் கமலத்திலேயே இருக்கிறான்.
தத்வமஸி. நீயே அவன், ஓ மனிதா, நீயே அவன்.

- சுவாமி விவேகானந்தர்
மேற்கோள் : சகோதரி நிவேதிதாவின் "The Master as I saw Him"

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

- மகாகவி பாரதி



Sunday, September 11, 2011

கண்ணன் விடு தூது

மிழ் இலக்கியத்தில் தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக பேசப்படும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. அகம் இது, புறம் இது என அளபெடுத்த தமிழர் அவற்றில் ஒவ்வொரு பகுதியினையும் ஆராய்ந்து அழகு படுத்தியுள்ளனர். அகம், புறம் இரண்டிலும் இடம்பெறக் கூடிய சிறப்பு தூதிற்கு உண்டு. பற்பல காப்பியங்களில் அவற்றை அலங்கரிக்கும் பாத்திரங்கள் தமக்குள்ளே ஏற்பட்ட ஊடலையோ அல்லது பிரிவையோ அல்லது சச்சரவினையோ தீர்க்கும் பொருட்டு இரு தரப்பிற்கும் பொதுவான ஒருவரையோ, அல்லது பொருளையோ, ஏன் தமிழ் மொழியைக்கூடத் தூது விட்டதுண்டு!

மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால், அக்காப்பியத்திலேயே பல தூது உண்டு என்றாலும் அவற்றில் கண்ணன் தூது சிறப்பிலும் சிறப்பு. சரி, கண்ணன் விடு தூது என்று சொல்லலாமா அல்லது கண்ணன் விடும் தூதா? மான் விடும் தூது/ மயில் விடு தூது என்றால் மானையோ மயிலையோ தூதாக அனுப்பப்பட்டதைச் சொல்லலாம். பாண்டவர்கள் சார்பில் கண்ணன் தூதனாக கௌரவர்களிடம் சென்றான் என்பதினைக் கண்ணன் விடு தூது எனலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமுதலாகக் கண்ணன் இருக்கையில் தூதனாகச் செல்வதும், செல்லச் சொல்வதும் கண்ணன் அல்லவோ! கண்ணன் அன்றி வேறில்லை.

கண்ணன் தூதுச் சருக்கத்தில், வில்லிபுத்துரார், கடவுள் வாழ்த்துப் பாடலில், பாரளந்த அண்ணலைப் பாடுகிறார்:
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் 
பிரியான் ஆகி, 
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு, 'படை எடேன் அமரில்!' 
எனப் பணித்த கோவை, 
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு 
ஆழிக் கரை கண்டாரே. 
- வில்லி பாரதம் 

கௌரவர்களிடம் இருந்து சஞ்சயன் தூதனாக வந்து போன பின்பு, தருமர் தன் தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வேண்டி திருத்துழாய் மாலை சூடும் கமலக்கண்ணனைத் தூதாக அனுப்ப எண்ணி இருந்தார். கண்ணனை அழைத்து அவரிடமும், தனது தம்பியர் நால்வரிடம் அவ்வெண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.   "கண்ணா, போர் என்று வந்தால் அனைவரும் மாள்வார். ஆகையால் போர் வேண்டாம். சமாதானம் வேண்டு. நாட்டில் எங்களது பகுதியினை வேண்டு. அதைத் தர அவர்கள் மறுத்தால் ஐந்து ஊர்கள் வேண்டு. அதையும் தர மறுத்தால், ஐந்து வீடுகளாவது வேண்டு. அதனையும் தர மறுத்தால், பின் போர் வேண்டு" என்றான் தருமன். 

தருமனது மேற்சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெஞ்சினம் கொண்டு வெதும்பிச் சொன்னான் வீமன்:

சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
                  சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
                  செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
                  வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
                  கொற்ற வேந்தே! 
 
தேவர்களும், முனிவர்களும், வேதங்களும் தேடப்பெற்ற சிறப்புடைய கண்ணனை - போயும் போயும் நமக்கு அரசு வேண்டி தூது அனுப்பலாமோ, வேண்டாம் வேந்தே, என்னத் தூதாக அனுப்பு. நான் போய் என் கதையால் கௌரவர்கள் கதையை முடித்து விட்டு வருகிறேன் என்றான். வீமனது சினத்தைக்  தணித்தபின் கண்ணன் அர்ஜூனனை நோக்கி, "விஜயா, உன் கருத்து யாது?" என வினவினான். விஜயனோ, "கண்ணா, அண்ணன் வீமனும் போக வேண்டாம், யாரும் போக வேண்டாம், இங்கிருந்தே என் காண்டீபத்தால் அவர்களைப் பொடிப்பொடி ஆக்குவேன்" என்றான். அடுத்து கண்ணன் நகுலனைக் கேட்க, "தூதினால் பயனில்லை" என்றே பெயர்ந்தனன். இறுதியாக ஐவரில் இளையவனாம் சகாதேவனது கருத்தைக் கண்ணன் கேட்டான்:

நகுலன் இவை உரைத்ததற்பின், 'நன்று!' எனக் கை
                  அமைத்தருளி, 'நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
                  யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
                  திறல் உடையோய்! புகல், நீ' என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
                  உருக, மொழிகின்றானே:

ஐவரில் ஞானி சகாதேவன் தான் போலும். சொல்லுதற்கு அரியதான மெய்யறிவை உடையவனாம் இளையோன் மொழிந்தான்: 

'சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
                  செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
                  என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
                  என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
                  தெரியுமோ?-ஆதி மூர்த்தி! 

"கண்ணா, தருமன் சொல்வதுபோல் நீயும் தூது சென்றால் என்ன? அல்லது செல்லாவிட்டால்தான் என்ன?துரியோதனன் எங்களுக்கு நிலம் தந்தால் என்ன? தராவிட்டால் என்ன? சபதமிட்ட பாஞ்சாலியும் தன் கூந்தலை முடித்தால் என்ன? முடியாமல் விரித்தால் என்ன? எந்த செய்கையும் எப்படி முடியும் என்று அறிந்தவன் நீ. எனக்கு என்ன தெரியும்? எது எப்படி நடந்தாலும் அது உன் விருப்பத்தால் விளைந்தது அல்லவோ!" என்றான்!:

'முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
                  அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
                  பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
                  அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
                  என்றான், தெய்வம் அன்னான். 

"அன்று நீ பாலகனாய் இருந்தபோதே, விடம் தடவி முலைப்பால் தந்து உனைக்கொல்ல வந்த பேய்மகளையும் அறிந்து கொண்டாய். மேலும் உரலோடு உன்னைக் கட்டி வைத்த பின்னும், அதனோடு மருது மரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்றாய். உயர்ந்து நின்ற சகடாசுரனும் நிலத்தில் விழச்செய்தாய். இடையர் மாளிகையில் வளர்ந்து இப்படியெல்லாம் இந்திரஜாலம் புரிந்த கண்ணா, நீ செய்யும் மாயை தனை இங்கு இருக்கும் ஒருவரும் அறியார். ஆனால் அதன் உட்பொருளை அடியேன் அறிவேன். உன் திருவுளத்தில் இருக்கும் கருத்தே என் கருத்தாகும். உன் சுதந்திரமே என் சுதந்திரம் ஆகும்" என்றான் கடவுளைப் போன்ற சகாதேவன்.

உடனே கண்ணன் சகாதேவனை தனியே அழைத்துச் சென்று நகைப்புடன் அவனது தந்திரமான பேச்சை மெச்சி, "சகாதேவா, நன்று உரைத்தாய். ஆனால், பாரதப் போர் நடக்காமல் இருக்க நீயே ஒரு உபாயம் சொல்." என்றான். அதற்கு சகாதேவன்:
'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?  
கண்ணனை "புயல்வண்ணன்" என்றழைப்பதைப் பாருங்கள்! பூமியின் பாரத்தைக் குறைக்க புயலாகப் புறப்பட்டான் போலும் புயல்வண்ணன்! உன் திருவுளக் கருத்து அப்படி இருக்க, பாரதப் போர் ஏற்படாமல் தடுக்க உன்னால் மட்டுமே இயலும். எனினும் பாரதப்போரை தடுக்க ஓர் உபாயத்தினைக் கேட்பதால், உன்னைக் கட்டிப்போட்டல் இயலும் என்றான் சகாதேவன். அன்பனின் மனமதை அறிந்த கண்ணனும் பதினாறாயிரம் உருவங்கள் கொண்டு, "இப்போது என்னைக் கட்டுக பார்க்கலாம்" என்றான். மாயவனின் விளையாட்டை அறிந்த தூயவனாம் சகாதேவன், உலகளந்த உத்தமன் பாதங்களைத் தன் மனமாகிய கருத்தினால் கட்டினான்!  

பக்தியும் ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற சகாதேவனை, "அன்பால் என்னை அறிந்த அன்பனே சகாதேவா" என கண்ணனும் அழைக்க, சகாதேவனும் "கண்ணா, வன் பாரதப்போரில் பாண்டவரை உன் பார்வையாலே காத்தருள வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

Sunday, August 21, 2011

கண்ணன் அன்றி வேறில்லை

ஆற்றங்கரையோரம் சேற்றுத்தென்னை மரநிழலில் இளைப்பாறுகையில் எங்கிருந்தோ இனியதொரு கானம் தென்றல் காற்றொடு இழைந்து வருகுதே! இப்படியொரு இணையிலா இனிமை ததும்பும் இசையை இதுநாள்வரை கேட்டிலையே. கோலக்குயில் ஓசைபோல் குழலிசைத்தார் யாரோவென என்மனம் திகைக்க காரணமெதுவென கண்டிலேனே. அதைக்கேட்கக் கேட்க என் மனத்திலும் கவிதைகள் பிறக்குதே:

மருத நிலத்தின் மேன்மை மண்ணொடு வயலொடு செழுமை!
ஆற்றுநீரும் அந்தக் குழலிசையோடு சேர்ந்திசை பாடும்!
எப்படிப்பாடும்? துள்ளித்துள்ளிக் குதித்துப் பாடும்!
ததிங்கிணத்தோம் தத்திங்கணத்தோம் என ஜதி போடும்!
ஏனிப்படி அடியே, ஏனிப்படி நதியே? எனக்கேட்டால்,
கண்ணன் குழலிசையே எனச் சொல்லும்!, அது சொல்லும்!

காத்திருத்தலே நிமித்தம் முல்லை நிலத்தில் - அதுபோலே
காத்திருந்தேன் நானும் குழலிசையைக் கேட்டே.
கண்ணன் கனிமுகத்தைக் காண்பேனா மாட்டேனே அறியேனே.
அடி நீயாவது சொல்லேனடி சற்றே ஆறுதலாய்க் கண்ணே.

காத்திருந்த முல்லை மலர்களும் ஏங்கும் - எப்போது
எங்களிறைவன் முடி சேர்வோம் என ஏங்கும்.
முல்லை மலராவது பரவாயில்லை, அவன் முடிசேர முயலும்.
அடியேன் அவன் அடியாவது அடைவேனா அறியேனே.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்போல் வருவான்
கண்ணன் வருவான், நான் பொய்யொன்றும் சொல்ல வில்லை.
எங்கள் கண்ணன் அன்றி வேறில்லை,
கண்ணன் அன்றி வேறில்லை, வேறில்லை.
-ஜீவா

கவிதைகளில் கற்பனையை வடிப்பவர் சிலருண்டு!
கதைகளில் கற்பனையை வடிப்பவர் பலருண்டு!
ஆனால், கற்பனையும் இல்லாமல் கதையும் இல்லாமல் கண்ணனோடு தனது நேரடி அனுபவத்தினைக் கவின்மிகு கவிதைகளாக, இசைநயத்தோடு வடித்துப்போனவர் வெகு சிலரே.
அவ்விடத்தில் தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் முன்னிற்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
அப்பாடற்தொகுதியில் இன்னுமொரு பாடலை இந்தப்பதிவுல் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

ராகம்: காவடிச்சிந்து
தாளம் : திஸ்ரகதி
இயற்றிவர்: ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணை யாதென
தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வரவில்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

இப்பாடலை பாம்பே சகோதரிகள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Sunday, August 14, 2011

முருகினைக் காணா விடில்

ஒருகண் உலகதைக் காணப்போது மெனினும்
இருகண் இருந்தும் பயனென்கொல் எனதருமைத்
திருமுருகினைக் காணா விடில்.
முக்கண்ணனுமை மைந்தன் செந்திற்பதியே தேவாதிதேவா
இக்கணமே எனைக்காக்க விரைவாய் அருள்வாய்.
ஈராறுகண் இருந்தும் எனைக்காணதிருப்பதேன்
ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
வேறேது கதியேது விரைவாய் அருள்வாய்.
-ஜீவா
----------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது செந்திற்பதியைப் பாடும் சந்தமொன்று சாவேரி ராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்கள் இயற்றியது.

ஸ்ரீபாலகோபல பாலா எனும் தீக்ஷிதர் கிருதியும்,
சங்கரி சங்குரு சந்திரமுகி எனும் ஷ்யாமா சாஸ்திரிகள் கிருதியும் போலவே
இப்பாடலில் சாவேரி இராகத்தில் இழைந்தோடும் இனிமைய இரசிக்கலாம்.

ராகம்: சாவேரி
தாளம்:ஆதி

எடுப்பு
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ
(முருகா முருகா என்றால்)


தொடுப்பு

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்
(முருகா முருகா என்றால்)


முடிப்பு

தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே
(முருகா முருகா என்றால்)

பாடுபவர்: அருணா சாய்ராம்




தேவாதிதேவன் : தேவாTheதேவன்!

Thursday, August 04, 2011

சிவனே இவன்! - அர்ஜூனன்

மாமல்லபுரத்துக் கடற்கரைச் சிற்பங்களுள் அர்ஜூனன் தவநிலையைக் காட்டும் சிற்பம் மிகவும் புகழ் பெற்றது. அத்தனை அத்தனை உருவங்களைத் தாங்கி நிற்கும் அச்சிற்பத்தின் நடுநாயகமாக, அர்ஜூனனார் விலா எலும்புகள் தெரிய, இருகை தூக்கி, ஒற்றைக்காலில் நின்றவாறு இருக்கும் தவக்கோலத்தை துல்லியமாய் அச்சிற்பத்தில் இழைத்திருப்பார்கள் பல்லவர்கள். கண்ணுக்கு விருந்தான இச்சிற்பத்தோடு காதுக்கு விருந்தான கவிநயத்தினை சற்றே இங்கு பருகலாமா! வில்லிபுத்தூரார் இயற்றிய வில்லிபாரதக் காப்பியத்தோடு.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் வில்லி பாரதத்தின் சந்த நயத்தை மிகவும் சிலாகித்து "அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும், தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலேயே ஒலிக்கும்." என்பார்.

"அர்ஜூனன் தவநிலை" என்று ஆசிரியர் தலைப்பிட்ட பகுதியில் இருந்து:

ஆசில் நான்மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
சடைப் புறத்தே சேர்த்தான்;
'தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
போலும்!' எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
நிலை சிலர்க்குப் பேசலாமோ?
-வில்லி பாரதம்

சி வா ய ந ம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்பி இருந்தனன்.
அபாயம் இல்லை என அறிந்தோதும் அர்ஜூனன், பரகதி பெற
உபாயம் இதுவே என ஓதினான்.
ஓலமறைகள் ஒன்றென ஒலித்திடும் ஐஞ்தெழுத்தை நெஞ்செழுத்தாய்க் கொண்டனன்.

அர்ஜூனனின் தவஒளியினைக் கண்ட தேவரெல்லாம் - கயிலாயம் மேவும் பெம்மான் சிவனே இவன் என்று பேசினராம். அப்படிப்பட்ட, அர்ஜூனனின் தவக்கோலம் எப்படியெல்லாம் இருந்ததாம்?

ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
ஆர்கொல்
?' என, நிலைபெற்றானே.

நிலத்தின் தொடர்பினை ஒற்றைக் காலோடு நிறுத்திடவே ஒற்றைக் காலில் நின்றனன் போலும். நிலமகளும் அக்காலைத்தாங்க, அவ்வாறு நின்றகாலின் தொடையில் இன்னொரு காலை ஊன்றினனாம். பரமனைத் தவிர வேறொன்றும் நினையாது, தன்னிரு கரத்தையும் கதிரவனைக் காட்டி விரித்திட்டானாம்.
இவ்வாறு தவம் செய்யும் "இவனுக்கு நிகர் யாருமில்லை" என்னும் நிலை பெற்றனன்.

கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊரங்
கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
புரிந்தார், சிவசிவ என்று
? அரியவாறே!

கருஞ்சிலை போலவே கடுந்தவம் புரியும் விஜயனைக் கல்லென்றே கருதின போலும்! அவனருகே வந்த யானைக்கூட்டங்கள், தம்முடலை அவன் மேல் பொருத்தி உராய்ந்தன!
அது மட்டுமா? கரையான்கள் ஏறி தங்குதலால் ஏற்பட்ட துளைகளைப் புற்றெனக் கருதி பாம்புகளும் அவன் மேல் ஊர்ந்தன. பூங்கொடிகள் மரமென்று நினைத்து அவனைச் சுற்றி வளைத்தன.
எக்காலமாயினும், வேற்றுமை ஏதும் பாராட்டாமல், தான் கொண்டதே குறியெனக் கருதி மண்ணில் பெருந்தவம் புரிந்தனன் பாண்டுவின் மைந்தன்.

"சிவ சிவ" என விடாமல் பயிலும் இவன் போல் மண்ணில் வேறு யார் புரிந்தார் அருந்தவம் என்கிறார் வில்லிபுத்தூரார்.

இவ்வாறு ஈசனை நோக்கித் தவம் புரியும் விஜயனைப்பற்றி தோழியர் மூலமாக அறிந்த அம்பிகை, சிவனிடம் அதைப்பற்றி வினவ, அதற்கு சிவன்:

ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, 'நிரை வளைச்
செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; "நரன்"
எனும் நாமமும் படைத்தோன்;

தருமனுக்கும் பீமனுக்கும் இளையோனானும், ஞாலம் உண்ட மாலவனுக்கு உற்ற நண்பனுமான பார்த்தனன், நம்மை நோக்கி நெடுங்காலம் தவம் புரிவதை அறிவோம் என்றார்.

பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
சிறந்தவர்?' என்றான்.

சிறந்த தவத்தை இயற்றும் அர்ஜூனன், தனது இதயக் கமலத்தை - சிவன் விரும்பி வந்து வீற்றிருக்க ஏற்றதொரு இடமாய்ச் செய்தனன். ஆகையால், "நம்மேல் தனது உணர்வைச் செலுத்தி இருக்கும் இவன் போல் யார் செய்தார் தவம்" என்றார் சிவன்.

----------
இப்படியாக வில்லிபாரதத்தில் அர்ஜூனனின் தவக்கோலமும் அதன் சிறப்பும் விவரிக்கப்படுகிறது.
தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவாரெல்லாம் சிவனை அறிவார், சிவனே ஆவார்.

Friday, July 29, 2011

விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் வழிக்கும்

கேள்வியும் பதிலும்:

இது கேள்விக்கேற்ற பதிலல்ல - அதற்குப்
பதில் பதிலுக்கேற்ற கேள்வி.

அடியேன்:
பழித்திருக்கும் பாதக உலகம் பாழுங்கிணற்றில் தள்ளப்பார்க்க
விழித்திருப்பதே விழிக்கும் வழிக்கும் துணையாமோ?
செழித்திருக்கும் மொழியும் எம்மை அணையாய் தடுத்திருக்க
வழித்தடமெல்லாம் வானோர் கண்திறந்து பார்த்திடச்செய்திடும்
விழித்திருத்தலே வாடிக்கையாய்ப் போகாதோ?

கந்தரலங்காரம்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


|

Wednesday, June 29, 2011

தொலைநோக்கி

தொலைநோக்கி ஒன்றினை தொட்டுப் பார்க்கிறேன்
தொலைதூரத்தை அதில் தொட்டுப் பார்க்க இயலுமோ?
தூரம் தொலைவானது தொலைந்த இடைவெளியால்தானே?
இல்லை, விட்டுப் போகாமல் இருக்கும் வாசனைகளாலோ?
சொல் சபேசா, அவை விட்டுப்போவது எந்நாள்?
நானும் தொட்டுப்பார்ப்பது எந்நாள்?
பட்டுப்போனவற்றிலும் பச்சையம் தடவிப்பார்த்தது நீயே.
பாரெங்கும் படரவிட்டுப் பார்ப்பதும் நீயே.
சட்டென்று கைவிட்டுப் பார்ப்பதும் ஏனோ?
எட்டுத்திசைகளிலும் சுற்றித்திரியும் என்மனதை
கட்டிப்போடக் கச்சையொன்று கிட்டாதோ?
கட்டிப்போடும் வித்தையதை அறிவேனோ?
சட்டிப்பானை அது கெட்டிப்பனையானாலும்
விட்டுப்போட்டுடைத்தால் மிஞ்சுமோ ஏதும்?
சட்டிப்பானைக்கு முன்னேயும் பின்னேயும்
ஏன் எப்போதும் எங்கெங்கும் இருக்கும் ஒன்றின் அறிவுதான்
கட்டிப்போடும் கச்சையோ, அல்லது வித்தையோ!
நீள் தூரத்தை குறுக்கிக் காட்டும் தொலைநோக்கியே
நீயே உன் நீளத்தைக் குறைத்துக் கொண்டு
நீ வந்தமர்வாய் எம் கண்களில்.

Sunday, June 05, 2011

திருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய!

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

"பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்பார். காளிதாசன் "குமார சம்பவம்" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் "உற்பத்திக் காண்டம்" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க! என்றார்.
-கந்தபுராணம்

தேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி? "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்!”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

முகங்கள் ஆறு:
முருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.
சிவனுக்கும் அறுமுகங்களா? சிவனுக்கு ஐந்து முகங்கள் தானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.
(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)

கரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு
சிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்!
சூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.
முன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.

அப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது

(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் "இது தான் அது" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.
பிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)

சால வுடைய தவர்கண்டு கொண்டது
(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)
மூல நிறைவு குறைவின்றி நின்றது
(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
(சாதி, குலம் போன்றவை அற்றது.)

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,
நின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்
என்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,
சிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,
வெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,
குண்டலினி சக்தியான அம்பிகையாம்)

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்
அன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே)

Monday, May 30, 2011

முதல் வணக்கம்

அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம்
ஆனைமுகனுக்கு முதல் வணக்கம்
அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம்
ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!

உமைபாலனுக்கு முதல் வணக்கம்
ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம்
ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம்
உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!

மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம்
மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம்
மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம்
மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம்
மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம்
முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!

அகர உகர மகரமென ஒலிக்கும்
ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!

Thursday, May 26, 2011

சுடராழி


கண்டதும் கழன்றது
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
-பூதத்தாழ்வார் (2248)
(ஆழி - சக்கரம்)

கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்!
அச்சக்கரம் எப்படி இருந்ததாம் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம்.
தீபாவளிப் பட்டாசு விடும் சமயத்தில் மட்டுமே நாம் அப்படிப்பட்ட சக்கரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆழ்வாரோ, நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார்.
முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் வினைகளும் தொலைந்தது போலும்.
சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும் எனக் கொண்டாரோ!
அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.

வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(பொய்கையாழ்வார்)

அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.

Sunday, May 22, 2011

ஓம் சக்தி சிவசக்தி

ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி!
பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென
ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது.
இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?



ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி:
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சக்தி:
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

முருகன்:
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கலைமகள்:
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கண்ணன்:
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

திருமகள்:
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்:



சக்திக் கூத்து

பல்லவி

தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ?
(தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.
(தகத்)

புகப்புகப் புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே
(தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென
(தகத்)

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
(தகத்)

Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!

Saturday, April 16, 2011

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!

Thursday, March 17, 2011

மாமதுரை மீனாக்ஷி!

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
- அபிராமி அந்தாதி


இப்படி, அப்படி என எப்படிச் சொல்ல இயலும்?
பெரொளி கூட்டி, பெருநிறைக் காட்டி, ஈதன்றி வேறில்லை எனவிருக்கையில் வேறெப்படிச் சொல்ல இயலும்.
அதிசயம்! ஆம், அதிசயம்!

ஒப்பிலா சொல்லில் அதிசய வடிவில்
மெச்சிடும் பேச்சாய் நிற்பாள் அன்னை!

அன்னையவளைப் பாடும் அபிராமிபட்டரின் அந்தாதி சொல்லும் சந்தத்தை சிந்தித்திருக்கையில் அங்கயற்கண்ணியைப் பாடும் மாமேதை நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய பாடல்கள் - ஒன்று மட்டுமல்ல - மூன்று பாடல்களைச் இங்கே சுவைக்கப்போவது சுகம்.
~~~~~~~~~~~
1.
இராகம் : கரஹரப்ரியா
தாளம் : ஆதி
பாடுபவர் : திரு. உன்னி கிருஷ்ணன்

anthari_sundari-ka...


எடுப்பு
அந்தரி சுந்தரி காமாக்ஷி என
அருள்புரியும் மாமதுரை மீனாக்ஷி

தொடுப்பு
சுந்தரேசர் வாமாங்க மேவிய ஆனந்தம் ஓடுஞ்
சுகமுங் கைக்கொண்டு நாமுமக மகிழ்ந்துறவாடும்

முடிப்பு

மும்மலைத் தடாதகை எனப்புவி மீது உதித்தாய்
முழுதுலகமும் வென்று வீர முடி தரித்தாய்
செம்மையாய் உலகாண்டு ஜகம் புகழ்ந்திட வைத்தாய்
திருநீல கண்டர் பாதி உடற் அலங்கார முற்றாய்.

~~~~~~~~~~~
2.
இராகம் : நாட்டைகுறிஞ்சி
தாளம் : ஆதி

எடுப்பு
ஏனிந்தத் தாமதம் மீனாட்சி மனம்
இரங்கி வந்து தந்தருள் திருக்காட்சி

தொடுப்பு
நீ நினைந்தால் நடவாததும் உண்டோ
நித்திய கல்யாணி யென்பெற்றவளே கண்டாய்

முடிப்பு
சோதனை யாமென்றாலும் நான்மனம் பொறுக்கேன்
துரும்பெனத் தள்ளினாலும் இனியுனை வெறுக்கேன்
நீதனை யாலவாயில் நீலகண்டனை மேவி
நிரந்தர வருள்புரிந்து எதுந்தரும் பரதேவி.


~~~~~~~~~
3.
இராகம் : வராளி
தாளம் : மிச்ரசாபு

எடுப்பு
கருணை புரியிதுதருணம் மீனாக்ஷி நானுன்னடிமை
சரணம் உனக்கே சரணம் ஜகத்ஸாக்ஷி

தொடுப்பு
பெருமை யுறுமது ராபுரித் தனி
யரச பெரும் சுந்தரேசர் மனோன்மணி
அருணிறைந்த கடாக்ஷ வீக்ஷணி
அம்பிகே யுன்னை நம்பினேன் இனி

முடிப்பு
நீல வேணி நிறைந்த பூஷணி
லீலைதரு முக்கதர பாண்டிய ஜனனீ
சீல மிகு பரதேவி சீகபாணி
நீல கண்டர் மனோல் லாசினி.

Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.