Sunday, April 27, 2008

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்!

பெரிய புராணத்தின் தொடக்கச் செய்யுள் - 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...'. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து, அதிலிருந்து விளைந்த வாழ்த்துப் பாடலைப் பார்ப்போமா?

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்! : அவனை மனத்தால் உணர்வதும், மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம்.

அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்!. (அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி!)

பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்!

அளவிட இயலாத ஒளியினை உடையனாம்!

அரியவன், வேணியன், சோதியன் - இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான்.

அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று அவனெடுத்துக் கொடுத்த அடியினை முடிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

இப்பாடலில் இறைவனின் இரண்டு நேரெதிர் இயல்புகளைக் கூறுவதைக் கேட்கலாம்.
அறிவதற்கு அரியவனாய் - உருவம் என்று ஒன்று இல்லாதவன் ஆகவும், அதே சமயத்தில் நிலவினையும் நீரினையும் சடைமுடியில் அணிந்தவனாகவும் இருக்கிறான்.

அலகில்(லாத) - அளவிட முடியாத சோதிப் பிழம்பாய் இருக்கிறான். அதே சமயத்தில் - அம்பலத்தில் எப்போதும் ஆடுபவனாகவும் இருக்கிறான்!
---------------------------------------------------------------
இப்போது பாடலை பாடிக் கேட்கலாமா?






--------------------------------------------------------------

இன்ன பிற:
ஜெயமோகன் திண்ணையில் எழுதியது

13 comments:

  1. Anonymous8:52 AM

    அழகான பாடலுக்கு அழகான விளக்கம், நன்றி.
    - சங்கர்

    ReplyDelete
  2. வாங்க சங்கர், அழகான, அருமையான பாடல்!

    ReplyDelete
  3. தமிழின் மிகச் சிறந்த இரண்டு இலக்கியங்கள் 'உலகு' என்கிற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டுள்ளதை நினைத்து பிரமிப்பு தான் ஏற்படுகிறது.

    கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்தும் 'உலகம்' என்கிற வார்த்தையைக் கொண்டு தொடங்குகிறது, பாருங்கள்:

    "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
    நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகிலா விளையாட்டுடை யாரவர்
    தலைவரன்னவர்க்கே சரண் நாங்களே"

    பதிவு சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தமிழின் மிகச் சிறந்த இரண்டு இலக்கியங்கள் 'உலகு' என்கிற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டுள்ளதை நினைத்து பிரமிப்பு தான் ஏற்படுகிறது.

    கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்தும் 'உலகம்' என்கிற வார்த்தையைக் கொண்டு தொடங்குகிறது, பாருங்கள்:

    "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
    நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகிலா விளையாட்டுடை யாரவர்
    தலைவரன்னவர்க்கே சரண் நாங்களே"

    பதிவு சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வருக ஜீவி ஐயா,
    இந்த இரண்டு பாடல்களிலும், உலகு மட்டுமல்லாமல், 'அலகு'ம் இடம் பெற்றிருக்கிறது!
    உலகில் உழலவிட்டு விட்டு
    நம்மை
    அலகிடு கிறானோ அவன்?

    ReplyDelete
  6. what is the meaning of வேணியன்

    ReplyDelete
  7. வேணி - சடைமுடி என்றும் ஆறு என்றும் பொருள்
    இவ்விடத்தில் வேணியன் - சடைமுடியான் எனப்பொருள் கொள்ளலாம்.
    நீர்மலி - நீர் நிறைந்த கங்கை
    நிலவினையும் கங்கை ஆற்றினையும் தன் சடைமுடியில் தரித்தவன்.


    ReplyDelete
    Replies
    1. Very beautiful words. Tamil is awesome.

      Delete
  8. அலகில் சோதியன் என்றால் என்ன?

    ReplyDelete
  9. விளக்கம் கொடுத்தவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. 👌👌👌👌👌 very usefull to TNPSC EXAM Preparation Tamil section

    ReplyDelete
  11. 'நிலவு உலாவிய நீர்மலி வேணியன்' இதன் பொருள் வெறும் தோற்றத்தை மட்டும் குறிப்பாதாக தோன்றவில்லை, interested to see some other different meaning and science behind

    ReplyDelete
  12. ஓம் நமச்சிவாய நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கள்தல்.வாழ்க

    ReplyDelete