Showing posts with label உபநிடதம். Show all posts
Showing posts with label உபநிடதம். Show all posts

Friday, September 30, 2011

மாயா யாமா

மாயை? இச்சொல்லின் பொருள்தான் என்ன?
மாயை என்பது காட்சிப்பிழையா அல்லது கானல் நீரா?

தொடக்கக் காலத்தில் மாயை என்றால் மகேசனின் ஜாலமென்றுதான் பொருள்.
காலப்போக்கில், அப்பொருள் மறைந்து போய், மனமயக்கமே மாயை என்று பொதுவாக பொருள் கொள்ளப்பட்டது. இந்த உலகமே பொய். காண்பதெல்லாம் வெறும் மாயை என்று பொருள் சொல்லப்பட்டது. நிலையாமை என்பதுதான் மாயை என்பதாகக் கொள்ளப்பட்டது.
 
சுவேதஸ்வதர உபநிடதம் சொல்லுவதை சற்று நோக்கினால்:
"இயற்கையே மாயை என்பதறிவோம்.
மனமே மாயையின் அரசன் என்பதை அறிவோம்.
அவ்வரசனே இறைவன் என்பதறிவோம்."


கிட்டத்தட்ட  கனவில் நடப்பது போல, பாதி உறக்கத்தில், பாதி விழிப்பில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்க, நமது புலன்களால் உணரப்படக்கூடயதை மட்டுமே உலகமாக, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவாய் நாம் கொள்வதால் - நம்மைப் பொறுத்த வரையில் பிரபஞ்சம் என்பதுஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

1. ஒரு பக்கம் மாயை என்றால் "கனவுக் காலம், வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என்பது போன்ற நிலையின்மையாகவும், புலன்களால் உணரப்படுவதாகவும், அதனால் மனமும் அதே மயக்கத்தில் அமிழ்ந்து போவதாகக் கொள்ளப்பட்டாலும்,

2. அதே மாயையினால்தான் எங்கெங்கும் வியாபித்து, எல்லாப் பொருளிலும் இருக்கிறான் இறைவன்.


மேலே சொல்லப்பட்ட இரண்டு கூற்றுகளும் இந்து சமயத்தின் தத்துவ அடித்தளமாகும்.
மற்ற எல்லா கூற்றுகளும் இவற்றில் இருந்து வந்தவைதான்.

-சுவாமி விவேகானந்தரின் "மாயை" பற்றிய சொற்பொழிவுகளில் இருந்து
சகோதரி நிவேதிதையின் குறிப்புகள் (The Master as I saw Him)


Thursday, February 05, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு

இந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.
முதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.

பா 57:
எதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
வேத முடிவு விளக்கடும் - யாதொன்
றகண்டவின் பாகி யமருமது தானே
திகழும் பிரமன் தெளி.

சீர்களைப் பிரித்து:
எது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் - யாதொன்று
அகண்ட இன்பாகி யமரும் அதுதானே
திகழும் பிரமன் தெளி.

பொருள்:
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,
ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.

விளக்கம்:
அழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்?
அப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.

இது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல."
- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6

நேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.

தெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.
அப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்? அடுத்த பா சொல்கிறது:

பா 58:
அகண்ட சுகமய வான்மாவி லற்ப
சுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்
தராதர மாகத் தரி.

சீர்களைப் பிரித்து:
அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரம் ஆகத் தரி.
(பிறங்குவர்: உயர்வடைவர்/சிறப்படைவர்;
அடுத்தே: பின் தொடர்ந்தே;
தரி: கொள்)
பொருள்:
எங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே
பிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,
அதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.
விளக்கம்:
எல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.
"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்."
- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.

Saturday, June 21, 2008

அப்படியே ஆகட்டும்!

"அம்மா" என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்!

"அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா..." என வினாவெழுப்பினான், சத்யகாமன்.

"தெரியாது அன்ப" என்பதுடன் அவள் சொல்கிறாள் - "என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் "சத்யகாமன் ஜபலை" என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது" என்றாளே பார்க்கலாம்!

"அப்படியே ஆகட்டும்" எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து "மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்" என்றான்.

அவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.

அதைக்கேட்ட மகரிஷியோ, "உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்." என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்" என மனதில் சொல்லிக் கொண்டான்!

பல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.

பின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, "நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே?.". பின்னர், "இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்" என்றது.

"அப்படியே ஆகட்டும் மாடு ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் "திகழ்ஒளி". இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது மாடு.

மறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அக்னி.

"அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் "அந்தமில்லா". இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்" என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.

மறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அன்னம்.

"அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் "முழுஒளி". ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது.

அடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது பறவை.

"அப்படியே ஆகட்டும் பறவை ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் "நிறுவப்ப்பட்டது". இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்." என்றது.

இப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.

அவனை அருகில் அழைத்த குரு, "சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே - உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ?" என்றாரே பார்க்கலாம்!

அதற்கு சத்யகாமன், "பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்." என்றான்.

பின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.


- சந்தோக்ய உபநிடதம்