Monday, January 22, 2007

தீபக் சோப்ரா : தன் உணர்வு

நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களில் நல்லதல்லாதவற்றில் நம் கவனம் அதிகமாக செல்ல செல்ல, நமக்குத் தெரியமலே நமது உடல் நிலையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை ஏற்படுவதற்கு இதுபோன்ற நிகழ்சிகள் மறைமுக காரணமாக இருக்கிறது.

இதிலிருந்து தப்புவது எப்படி?. நமக்கென ஒரு குறிக்கோளை எடுத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்த வேண்டும். தனக்கென எதோ ஒரு வேலையில் ஒன்றில் கவனம் செலுத்த, அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றமும், புது தெம்பும் ஏற்படுவதை கண்கூடாக உணர்வர்.

ஒருவர் ஒரு செயலை செய்யத் தொடங்கி, அதிலேயே முழு கவனம் செலுத்தி, அதிலேயே மூழ்கி மூழ்கி, அந்த செயலில் அனைத்தும் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் எந்த ஒரு தடங்கல் ஏற்பட்டாலும், அது அவர்களை பாதிப்பதில்லை. அவர்களது மனமானது அமைதியான நீரோடைக்கு ஒப்பான நிலையில் இருக்கும். அவர்களையே தன்னை உணர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.

அதிகாரத்தின் சக்தியை அறிவீர்கள். பணத்தின் சக்தியை அறிவீர்கள். அதுபோலத்தான் தன்னை உணர்ந்தவர்கள் சக்தியும். தன்னை உணர்ந்தவர்களின் செயல்களின் சரியான விளைவுகளை ஏற்படுதுவையாகத்தான் இருக்கும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில்:
It's no good trying to polish stupidity, trying to become clever. First I must know that I am stupid, that I am dull. If you resist what you are, then your dullness becomes more and more.

என்ன நடக்கிறதோ அதை அப்படியே பார்க்க வேண்டும். நமது எண்ணங்களால் அவற்றை பார்க்கக்கூடாது. அப்போதுதான் நமது புரிதல் சரியாக இருக்கும்.

உணர்வுகளில் 'இளம் உணர்வுகள்' என்றொரு வகை. அவற்றிற்கு சக்தி அதிகம். ஆர்வமுடன் விளையாடும் சிறுவர்களிடமும், புதிதாக குழந்தையை ஈந்தெடுத்த தாயிடமும் இதனை நன்றாகப் பார்க்கலாம். வாழ்க்கையின் சக்தி உடலில் பாய்வதை கவனித்து உணர்பவர்களின் உடல் நலம் சிறப்பாகவே இருக்கும்.

நாம் ஒரே காரியத்தை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும்போது, நம் கவனம் அதிலிருந்து அகல்கிறது. கவனம் அகன்றால், நம் அறிவால் அந்த காரியத்திற்கு எந்த உதவியும் செய்ய இயலாது. செய்யும் செயலில் சரியாக கவனம் செலுத்தி, உணர்ச்சி வசப்படாமல், அதிக முயற்சியில்லாமல் தானாக ஒரு செயலை செய்யும்போது, தன் உணர்வு தானக பாய்ந்தோடும். அமைதியான கவனம் செயலில் இருக்கும்போது, அச்சம், கோபம், சந்தேகம், பொறுமையின்மை, மன உளைச்சல் போன்றவற்றிற்கு இடமில்லை. அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

நமது குறைபாடுகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்ற நினைப்பிலேயே நாம் நடந்து கொண்டிருக்கிறோம். நமது குறைபாடுகளோடு சண்டை செய்வதில் பயனில்லை. நமது குறைபாடுகளை பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால், அவை வளர்ந்து கொண்டே இருக்கும். தன் உணர்வை வளர்க்கும் முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம், அதுவே குறைபாடுகளை வேரறுக்க சரியான வழி.

- சமீபத்தில் தீபக் சேப்ராவின் புத்தகத்தில் படித்தது.

Sunday, January 21, 2007

எங்கே சென்றீர்?

misty mountain


லீ போ என்ற சீனத்துறவி எழுதிய கவிதையின் தமிழாக்கம்.

தன் ஜென் குருவைத் தேடிப்போகையில், அவரை அவர் வீட்டில் காணாமல் திரும்பும்போது:

அந்த நீரோடையின் சலசலப்போடு
நாய் ஒன்று குரைக்கும்
சப்தமும் கேட்கிறது.
மிகுதியான பனிமூட்டம் - ஆதலால்
புதிதாய் மலர்ந்த மலர்கள்
தெளிவாய்த் தெரியவில்லை.

அடர் காடுகளுக்கிடையே
மான்கள் பல தெரிகின்றன.
உச்சிவேளை நெருங்குகையில்
நீரேடையில் கோயில்மணிஓசை
ஏதும் நான் கேட்கவில்லை.

நீள காட்டு மூங்கில்கள்
நீல மேகங்களை
துண்டாடுகின்றன.
நீல சிகரங்களிலிருந்து
நீள நீர்வீழ்சிகள்
ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

எங்கே சென்றீர் என்றியம்ப
என்னால் இயலாது.
மனமுடைந்து - இரண்டு பைன்
மரங்களுக்கிடையே
சாய்ந்து கொள்கிறேன் -
மூன்றாவதாக.

Wednesday, January 10, 2007

கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள்

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:

1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை

2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ

3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே

4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ

5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி

6. எப்போ தொலையும் இந்த துன்பம்

7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா

9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்

10. கட்டை கடைதேறவேணுமே

11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே

13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்

14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு

15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ

17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்

18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்

19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு

20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்

21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்

22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி

23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு

24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்

25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்

26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்

27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது

28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா

29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி

30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்

31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்

32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி

33. மற்றதெல்லாம் பொறுப்பேன்

34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்

35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ

பாடல்களின் முழு வரிகளுக்கு செல்லவும் சைவம்.ஆர்க்

இந்த தொகுப்பினை தமிழ் விக்கிபீடியாவிலும் ஏற்றியுள்ளேன்.

Sunday, January 07, 2007

உண்டு என்போருக்கு உண்டு

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உள்ளதை உள்ளபடி காட்டிடும் கண்ணாடி போன்ற
கன்னங்களுடைய உன் மேனியைக் காண
வாடிடும் என் அருகினில் இன்னும் வராதது ஏனோ?

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உறக்கம் துறந்து, யாழினை மீட்டி,
தூய உள்ளத்தினில் சுத்த ஸ்வரத்துடனும்,
வேளை தவறாமல் பஜனை செய்யும்
உன் தொண்டர்களை நாளும் காப்பாற்றும்
தயையுள்ளம் பெற்றவன் நீயன்றோ?
தியாகராஜனால் போற்றப் பெற்றவனே!

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?



இது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான தியாகராஜர் என்னும் ஏழையின் கீர்த்தனம் - கத்தனு வாரிகி.

அவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இராமனை போற்றிப் பாடாத நாளில்லை.

அவரன்பு இராமனை தூக்கிப்போட்டதில் அவர் கதறியது காவிரி அறியாததில்லை.

அந்த காவிரி பாயும் தமிழகம் மட்டும் மறந்ததேனோ?

சந்தன சர்சித நீல களேபர...

radheshyam07.jpg
சந்தன சர்சித நீல களேபர பீத வசன வனமாலி

கேலி சலன்மணி குண்டல மண்டித கண்டயுகஸ்லித ஸாலி

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிர்ரபய சராகம்

கோப விதுர் அனுகாயதி காசிதுண்சித பஞ்சம ராகம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

காபி விலாசவி லோல விலோசன கேளன ஜனித மனோஜம்

தியாயதி முக்தவ பூரவிபாகம் மது சூதன வதன சரோஜம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

.....

.....

இஷ்யதி காமபி சும்பதி காமபி ரமயதி கமாபிராம

பஷ்யதி சஸ்மித சாருதராம் அபராமனு கஸ்யதிராம

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

ஸ்ரீஜெயதேவ பணிதம் இதம் அத்புத சேகவ கேளி ரஹஸ்யம்

பிருந்தாவன விபினே லலிதம் விதானோது சுபானி யசஸ்யம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே


இது ஜெயதேவர் எனப்பெயர் பெற்ற ஞானியின் சமஸ்கிருத படைப்பான 'கீத கோவிந்தம்' - அதிலிருத்து நான்காவது பாடல். 24 பாடல்கள் கொண்ட இந்த இசைப்படைப்பில் ஒவ்வொரு பாடலும் 8 சரணங்களை கொண்டிருக்கும். அதனால் இவற்றிற்கு அஷ்டபதி என்று பெயர்.

ஜெயதேவரின் பாடல்களை கேட்ட சோழ மன்னன் (அப்போது கலிங்கமும் சோழ சாம்ராஜியத்தின் ஒரு பகுதி), தான் சிவ பக்தனாயிருந்தும், கண்ணன் பாடல்களை கேட்டு வைணவத்தின்பால் ஈர்ப்பு கொண்டானாம்.

கண்ணனை வர்ணிக்கும் இந்த அஷ்டபதியை கேட்டால் மயங்காதவர் யாருளரோ?
இதில் ராதை தன் தோழியுடன் உரையாடுவதாக அமைந்துள்ளது.

இதை கர்நாடக சங்கீதப்பாடலாக பாடியும் கேட்டிருக்கிறேன்.
பரதமாய் இந்த பாடல் அரங்கேறியபோது, நாட்டியமாடியவர் தன் பரதபாவத்தில் இந்த அஷ்டபதியின் அத்தனை ரசங்களையும் குன்றிடை விளக்காய் காட்டியதில் அதன் பொருள் யாவும் உணர்ந்தேன்.

பொருள்:

சந்தன சர்சித நீல களேபர பீத வசன வனமாலி:
சந்தனம் அணிந்த, நீல நிற வண்ணா, பட்டாடை உடுத்தி, துளசியும் மலர்களையும் அணிந்தவனே!

கேலி சலன்மணி குண்டல மண்டித கண்டயுகஸ்லித ஸாலி:
உன் காதில் ஆடும் குண்டலத்தின் பட்டொளி, உன் கன்னத்தில் மின்னுகிறதே!

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிர்ரபய சராகம்
கோப விதுர் அனுகாயதி காசிதுண்சித பஞ்சம ராகம்

சகியே, அங்கே பார், கோபியரில் ஒருவர் கண்ணனை அணைத்துக் கொண்டிருப்பதைப்பார். கண்ணன் ஐந்தாம் ராகத்தில் பாடுவதைக் கேள். அதைக்கேட்டு, அந்த பேதைக் கோபியும் அதுபோலவே பாடுவதைக்கேள்!

காபி விலாசவி லோல விலோசன கேளன ஜனித மனோஜம்:
அவன் அசைந்தாடும் பெரு வழிகள் காந்தமாய் கோபியரை கவர்ந்திழுக்குதே!

தியாயதி முக்தவ பூரவிபாகம் மது சூதன வதன சரோஜம்:
தாமரை முகம் கொண்ட மதுசூதனனின் அழகால் கோபியரும் அவனைக் கண்டு லயிக்கின்றனரே!

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே:
சாதாரண கோபியர்கள் கண்ணனை கவர்ந்திழுக்கும் கலையேதும் அறியார். அவர்களிடம் இருந்ததெல்லாம் சாதாரண அன்புதான். அந்த அன்பால் கண்ணனை அடைவதே ஒவ்வொருவரின் நோக்கம்.
கண்ணனை சுற்றி கோலாட்டமிடும் கோபியர் ஒவ்வொருவருக்கும், அவனே அவர்களின் உடமையாய் தெரிகிறானே!

இஷ்யதி காமபி சும்பதி காமபி ரம்யதி கமாபிராம
பஷ்யதி சஸ்மித சாருதராம் அபராமனு கஸ்யதிராம

கோபியரில் ஒருவர் கண்ணன் தனக்கு முத்தமிடுவதாக கொள்கின்றனர். இன்னொருவரோ கண்ணனை தங்கள் மார்பகத்தில் காண்கின்றனர். இன்னொருவரோ அவன் அழகு முழுதும் கண்டு இன்புறுகின்றார்.

இப்படி கோபியரில் ஒவ்வொருவரும் அவனை அடைய முயல்கின்றனர். ஒவ்வொருவரும் அதில் வெற்றியும் பெருகின்றனர். ஒவ்வொருவரையும் மகிழ வைக்கும் அவன் பெருந்தன்மை தான் என்னே!

ஸ்ரீஜெயதேவ பணிதம் இதம் அத்புத சேகவ கேளி ரஹஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் விதானோது சுபானி யசஸ்யம்


இவ்வாறாக ஜெயதேவர், இந்த பாடலை முடிக்கிறார். இதோ இந்த பாடலில் பாருங்கள் கேசவனின் அற்புத லீலைகளை!. எப்படி ஒரு கண்ணன், பல நூறு கண்ணன்களாக மாறி ஒவ்வொரு கோபியருக்கும் 'அவர்களுக்கு மட்டுமே உரித்தானவன் கண்ணன்' என்று நினைக்கும்படி செய்கிறான்!. அவரவர் மன ஆசைகளை தீர்ப்பவன் அல்லவா அந்த மாயன்!

1956 இல் வெளிவந்த தெலு(ங்)கு படம் 'தெனாலி ராமகிருஷ்ணா' வில் இந்த பாடலை P.சுசீலா பாடியிருக்கிறார்!
இந்த பாடலின் பரத விளக்கம் ஜப்பானிய மொழியில். அதன் ஆங்கில மொழியாக்கம்.

Saturday, January 06, 2007

2006 டாப் டென் தமிழ்த்திரைப்பாடல்கள்

2006 அதற்குள் நிறைவடைந்து விட்டது. தமிழ்த் திரை இசையில் சொல்லிக் கொள்ளும்படியாக ஏதும் சிறப்பான பாடல்கள் வருவதற்கு முன்பாகவே 2006 சொல்லாமலே சொன்றுவிட்டது.

2006 இல் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹேரிஸ் ஜெயராஜ் ஆகியோரிடமிருந்து தலா இரண்டே படங்கள்தான். யுவன் சங்கர் ராஜா, டி. இமாம் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களாக வலம் வரும் கனவில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். வித்யாசாகர், பரத்வாஜ், ஜோஷ் ஸ்ரீதர், ரமேஷ் விநாயகம், கார்த்திக் ராஜா ஆகியோர் ஏனைய இசையமைப்பாளர்கள். தரண்(பாரிஜாதம்), ஜீ.வி. பிரகாஷ்(வெயில்), சுந்தர் சி.பாபு (சித்திரம் பேசுதடி), பால் ஜே போன்ற புதியவர்களின் வரவையும் இந்த வருடம் கண்டது.

2005 ஆம் ஆண்டைப்போலவே, இந்த வருடமும் பார்முலா படங்களில் கானா பாடல் கண்டிப்பாக திணிக்கப்படுவது தொடர்ந்தது. அவற்றில் சில ஹிட்டாகவும் செய்தது!. சில இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் பாடல்களை முயற்சித்துள்ளார்கள். ரீமிக்ஸ் பாடல்கள் இதுவரை தனி ஆல்பங்களாக மட்டும் வெளிவந்தது, இப்போது வெள்ளித் திரையிலும்! வழக்கமாக பாடல்கள் வெளிவரும்போது பாடல்களை கேட்டு, பிடித்த பாடல்களை தரவிறக்கம் செய்து சி.டி யில் சேமித்து வைப்பது வழக்கம். 2000 ஆம் ஆண்டில் இந்த பழக்கத்தை தொடங்கியபோது, முதல் இரண்டு ஆண்டுகளின் வருடத்திற்கு 6 சி.டி என கருக்குவதுண்டு (burn CD!). இப்போது கழுதை தேய்ந்து கட்டெரும்பாய் ஆகி விட்டது. சென்ற வருடக் கருக்கல் கணக்கு - 2. இந்த வருடம் அதுவும்போய் - ஒன்றே ஒன்று. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று இப்போது வரும் பாடல்கள் ஏதும் நல்ல பாடல்களாக இல்லாமல் இருக்கலாம். அல்லது இப்போது வரும் பாடல்கள் என்னுடைய ரசனைக்கு ஒவ்வாதவையாய் இருக்கலாம். For the sake of the Benefit of the doubt, Let's assume the later!. இந்த வருடம் சிறப்பானதொரு பட ஆல்பம் வராமைக்கு இன்னொரு காரணம், சிறப்பானதொரு திரைப்படமோ/இயக்குனரோ இல்லாமையும் சொல்லலாம். We miss you Manirathnam!

இவ்வளவு முன்னுரை போதும், பதிவின் கருவிற்கு நகர்வோம். இது என் ரசனையில் 2006 இன் டாப் டென் பாடல்கள். இதில் கானா பாடல்கள் ஏதும் இருக்காது, அவற்றை ஹிட்லிஸ்டில் தேடவும், என் லிஸ்டில் அல்ல. பாடலின் இசை மட்டுமே இங்கு முக்கியாமாக கணக்கில் கொண்டுள்ளேன், பாடலின் ஒளிப்பதிவை அல்ல.

* முன்பே வா என் அன்பே வா (ஷ்ரேயா கோஷல், நரேஷ்) / சில்லென்று ஒரு காதல் / ஏ.ஆர்.ரஹ்மான்

துவக்கத்தில் வரும் கிடார் முன்னீடு மனதை கொள்ளைபோகச் செய்யும், அப்புறம் என்ன ஷ்ரேயா கோஷலின் உச்சரிப்பு எப்படி இருந்தால் என்ன! ஆனாலும் அவர் நன்றாக பாடியுள்ளார். 'ரங்கோலி ரங்கோலி' என்று ஒரு கோலாட்டத்தின் கலப்பும் உள்ளது. நரேஷ் குரலும் இனிமை. பாடல் வரிகளில் புதுமை ஏதும் இல்லாவிட்டாலும், இசையின் அழகான வரிசைகளில் கார்த்திகை தீபமாய் மின்னுகிறது இந்த பாடல். இரண்டாவது இடையூட்டில் வரும் பியானோ/வயலின் பாடலோடு இரண்டற கலந்துபோவதும் அழகு. பின்னணியில் வரும் ஹம்மிங் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகிறது.

* மஞ்சள் வெயில் (ஹரிஹரன், நகுல், விஜய்) / வேட்டையாடு விளையாடு / ஹேரிஸ் ஜெயராஜ்

ஹேரிஸ் ஜெயராஜின் வழக்கமான துள்ளல் ரிதம் நிறைந்த பாடல். எளிதான ட்யூனாக இருந்தாலும் ஹரிஹரனின் குரல் பாடலை எங்கேயோ கொண்டு செல்கிறது!. பாடலில் சரணத்திற்கு பின் பல்லவியை திருப்பிப்பாடும்போது முதன்மை பாடகர் (lead vocalist) பாடாமல் கோரஸாக (நகுல், விஜய்) பாடுவது வித்யாசம் தருகிறது. இரண்டாவது இடையூட்டில் ஹெவி மெட்டல் ஒலிகளைத்தொடர்ந்து சேக்ஸ் வாசிப்பது, மிருதுவாக இதமளிக்கிறது. கடைசியில் 'ஹூஹூ' என்ற குரலோடு இசைப்பதும் நன்று.

இதே படத்தில் இன்னொரு பாடல் "பார்த்த முதல் நாளே". இந்த பாடலும் அழகான மெலடி - உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ சிறப்பாக செய்துள்ளார்கள் - சென்ற வருடத்தின் 'சுட்டும் விழிச்சுடரே' வை நினைவுபடுத்தும் பாடல். இந்த ஆண்டின் சிறந்த ஆல்பம் எதுவென்றால் 'வேட்டையாடு விளையாடு' - ஐயமில்லாமல்.

* தென்றல் என்னும் (மது பாலகிருஷ்ணா) / பாசக் கிளிகள் / வித்யாசாகர்

தொடக்க ஆலாபனையில் பாரதி பாடல் 'எதிலும்...' நினைவு படுத்தும். அழகான பாடல் வரிகள் கொண்டு மண்ணின் மணம் வீசும் இனிமையான பாடல். தமிழருக்கு தனிப்பெருமை தரும் நாதஸ்வர முழக்கங்கள் கேட்க இனிமை. தில்லானா சங்கதிகளைக் கேட்கும் போது 'சீரோங்கும் தென் பழனி மலை மேவும் கோவலா...' என்று பாடத் தோன்றுகிறது!

"தென்றல் என்னும் தேரேறி தமிழ் மன்றம் வந்த முல்லை மலரே..." என்பதே பல்லவி.

* உன்னைக்கண்டேனே முதல் (ஷ்ருதி, ஹரிசரண்) / பாரிஜாதம் / தரண்

மழையில் நனைந்து பாடும் பாடல்களுக்குத் தான் தமிழ்திரையில் பஞ்சமுண்டோ? இந்த பாடல் இசையில் இடி, மழையுடன் துவங்குகிறது. ஷ்ருதியின் குரல் இனிமையாகவும், இளமையான கீச்சுக்குரலாகவும் இருக்கிறது. ஹரிசரண் காதல் படத்திற்குபின் அதே இனிமையில் இன்னமும்!. ஹரிஷ் ராகவேந்திரா போல, ஹரிசரண் நிறைய பாடல்கள் பாடி புகழ்பெற அவருக்கு வாழ்த்துக்கள்.

* சரிகமபதநி சொல்லி (மதுமிதா, எஸ்.சரோஜா, அமீர்) / பருத்தி வீரன் / யுவன் சங்கர் ராஜா

சிறிய பாடலானாலும், மதுமிதாவின் குரல் காதுக்கு தேன். யுவன் கிராமியப் பாடலுக்கு இனிதாய் இசை அமைத்திருக்கிறார்.

வரிகளில் இருந்து:
ஏகப்பட்ட சரக்கிருக்குது வாய்வசந்தான் எங்கிட்ட,
வாங்கி நல்லா ஏத்துகுற காதிருக்கா உங்கிட்ட?


யுவன், காத்திருக்கும் காதிருக்கு எங்ககிட்ட, நல்ல இசையா போடுங்க அடுத்த வருடம்!

* ஏனோ இது ஏனோ (ஜெய்தேவ்) / கிழக்கு கடற்கரைச்சாலை / பால் ஜே

மழைத்துளிகளாய் விழும் இசையுடன் தொடக்கமே இனிமை. மூன்று நிமிடத்திற்கு குறைவான பாடலானாலும், பாடலில் உயிரோட்டத்திற்கு குறைவில்லை. இசையும், குரலும் ஜோடி சேர்ந்து நம் காதுகளில் தேனைத் தூவுகின்றன. ஜெய்தேவின் குரலை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. சில இடங்களில் இளையராஜாவின் குரலைப்போல் உள்ளது. பால் ஜே, புதியவர் - புதுமைகள் பல செய்ய வாழ்த்துக்கள்.

* முகிலே முகிலே (ஸ்ரீநிவாஸ்) / அரண் / ஜோஷ் ஸ்ரீதர்

ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் கேட்பது, மயிலிறகில் தடவுவதுபோன்று இதமானது என்று சொன்னால் அதில் எள் அளவும் மிகை இருக்காது. நீங்களே கேட்டுப்பாருங்களேன். இந்த பாடலில் ஸ்ரீநிவாஸின் இரண்டாவது அவதாரமும் அவரோடு சேர்ந்து ட்யூட் பாடுகிறது - அதன் பெயர் புல்லாங்குழல்! ஜோஷ் ஸ்ரீதர் இந்த பாடலில் கொஞ்சமாவது வேறுபாடு காட்டியிருக்கிறார், அதனால் அவருக்கும் ஒரு சபாஷ்!

* சுடும் நிலவு சுடாத சூரியன் (உன்னி கிருஷ்ணன், ஹரிணி) / தம்பி / வித்யாசாகர்

ஹம் செய்ய வைத்து பல்லவியை திரும்ப திரும்ப நினைவில் நிறுத்தும் பாடல். இரு சிறப்பான பாடகர்களிடம் இருந்து சிறப்பானதொரு பாடல். முதல் இடையூட்டில் வயலின் வரிசையை மட்டும் கவனித்துப் பாருங்கள். உங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் வாசித்தது போலும் தோன்றும்!. இரண்டாவது இடையூட்டில் ஹம்மிங் மட்டுமே!

* நெஞ்சில் வாழ்கிற / ஒரு பொண்ணு ஒரு பையன் / கார்த்திக் ராஜா

அழகான கவிதையை அழகான இசையுடன் சேர்த்து படித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். கார்த்திக் ராஜா இசையில் அழகாக மலர்ந்திருக்கிறது இந்த குறிஞ்சி மலர். பாடகி (யாரது?!) குரலும் இனிமை.

* என் ஸ்வாசத்தில் காதலின் (கல்யாணி, மது பாலகிருஷ்ணா) / ஜெர்ரி / ரமேஷ் விநாயகம்

இன்னுமொரு ட்யூட்தான் என்றாலும், இந்த பாடலின் இசையில் ரமேஷ் விநாயகம் புல்லாங்குழலை துள்ளிக்குதிக்க வைத்திருப்பது அழகு. இசையின் எளிமைக்கும், அழகிற்கும் இந்த பாடலை எடுத்துக்காட்டாக சொல்லலாம்!

ஆண்: " இங்கு காதல் என்பது கடவுள் என்றால் இதுவரை நானொரு நாத்திகனே..."

பெண்: " நம் மனமே கோவில், முத்தம் - திருநீர், பக்தன் - நீயே காதலனே..."
ஒரு உவமைக்கு, மூன்று உவமை பதிலாக வருகிறது!

Tuesday, January 02, 2007

நந்தனார் சரிதம் - இசைச்சொற்பொழிவு கேட்டீரோ

அன்பால் உருகி மருகியவனுக்கு
தன்பால் ஓடிவர வழிசெய்து
தடைகள் யாவையும் தவிர்த்த
எம்பிரானே, உன்பாதம் சரணம்.

நந்தனார் சரிதம் - இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அதுவும் பாலு சாஸ்திரிகள் காலக்ஷேபம் பண்ணினால், அதைவிட சிறப்பு வேறு என்ன?

நான்கு பகுதிகளாக இங்கு கேட்க கிடைக்கிறது.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

இந்த பகுதிகளை அனைவரும் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிசெய்துள்ள சங்கீதபிரியா.ஆர்க் தளத்திற்கு நன்றிகள்.
(திரு.ஆர்.ஸ்ரீநிவாசன், திரு.டி.என்.பாலா அவர்களுக்கு நன்றிகள்)