Thursday, May 01, 2008

மாதர்பிறை கண்ணியானை : கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு,
அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)
--------------------------------------------------
பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

---------------------------------------------------------------------
மாதர்பிறை - அழகியபிறை
கண்ணி - நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய நீர்
பிடி - பெண் யானை; களிறு - ஆண் யானை
---------------------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன் அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:

அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

---------------------------------------------------------------
பாடல் : மாதர்பிறை கண்ணியானை

இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்

தலம் : திருவையாறு

இராகம்: செஞ்சுருட்டி

பாடுபவர் : விஜய் சிவா

26 comments:

  1. சித்திரை சதயம் (கடந்த புதன்) நாவரசரின் குருபூஜை நாள்...அன்று ஒரு பதிவுத் தொடராக எழுத நினைத்தேன். இங்கு இண்டெர் நெட் என்னை பழிவாங்கியது...

    பொருள், மற்றும் பாடல் சூப்பர். நன்றி ஜீவா!

    ReplyDelete
  2. அழகான பாடல். அறிமுகத்திற்கு நன்றி ஜீவா

    ReplyDelete
  3. வாங்க குமரன், நானும் இப்போதுதான் பாடலைக் கற்றுக் கொண்டேன். எளிமையான பாடலாக இருக்கிறது, இராகத்துடன் சேர்த்துப்பாடுவது இனிமையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  4. //கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே.//

    தவழ்ந்தா? அப்பா! இந்த அடியார்களுக்கு இருக்கிற பக்தி! கிட்டே கூட நாம் போக முடியாது போல இருக்கு.
    திருவெண்காட்டில்தானே அன்னை அடியாரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டது? சம்பந்தரையா?

    ReplyDelete
  5. எளிமையான பாடலை அருமையாக சொல்லீவிட்டீர்கள் ஜீவா இந்தப்பதிவினை என் ஆன்மீகசரத்தில் (வலைச்சரம்)கோர்த்துவிடப்போகிறேன்.நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  6. ஜீவா,

    பாடுவதற்கு எளிமையான இந்தப் பாடல்களைக் கற்றுத் தேற வேண்டுமென்ற ஆசை வெகுநாட்களாக உண்டு. இப்போதுதான் அந்த ஆசை நிறைவேறி வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக தேவாரம், திருவாசகம் முதலிய திருமறைகளைக் கற்று வருகின்றேன்.

    விரைவில் வலையில் அரங்கேறுவேன். (சிவன் கோயில்களும், சிமுலேஷன் பாடிய தேவாரங்களும்- தலைப்பு ரிசர்வ்ட்!)

    - சிமுலேஷன்

    >>>>>"நானும் இப்போதுதான் பாடலைக் கற்றுக் கொண்டேன். எளிமையான பாடலாக இருக்கிறது, இராகத்துடன் சேர்த்துப்பாடுவது இனிமையாகவும் இருக்கிறது."<<<<<

    ReplyDelete
  7. ஜீவா,

    ஆன்மீகத்திற்கு வெகு தூரத்திலேயே நான் இருந்திருக்கிறேன். இருப்பினும், பதிவிட்ட உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Anonymous3:37 AM

    வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடி களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக்கின்றேன். திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பாடுப்படும் பாடல். இதன் பண் காந்தாரம். விஜய் சிவா பாடுவது கேட்க அருமை

    ReplyDelete
  9. வருக திவா சார்.
    ஆம், முதலில் நடந்தும், பின்னர் நடக்க இயலாமல், தவழந்தும், பின்னர் உருண்டும், பிரண்டும் - கிட்டத்தட்ட மண்புழுபோல, கொஞ்சம் கொஞ்சம் தன் உடலை வடக்கு நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறார். அவர் உடலில் முழுதும் ரண காயங்கள். அங்கங்கள் சிதைந்து சின்னாபின்னமாய் கிடக்கிறது. இந்த சமயத்தில் ஒரு பெரியவர் வந்து அவரை திருவையாறுக்கு அனுப்புவார். அவரை அருகில் இருக்கும் தடாகத்தில் மூழ்கச் சொல்லுவார். தடாகத்தில் மூழ்கி வெளியே வரும்ஒது, அவர் திருவையாற்றில் இருந்தாராம். உடலோ பளிச்சென்று ஒரு சிதைவும் இல்லாமல் திகழ்கிறாதாம்! யாதொரு சுவடும் இல்லையாம்!

    //இந்த அடியார்களுக்கு இருக்கிற பக்தி! கிட்டே கூட நாம் போக முடியாது போல இருக்கு.//
    பக்தியில் கரை கண்டவர்கள்! எனினும் அவர்கள் வாழ்விலும் இன்பமும் துன்பமும் இரண்டும் இருந்திருக்கு, ஒன்றான சிவனை அடையும் வரை.

    //திருவெண்காட்டில்தானே அன்னை அடியாரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டது? சம்பந்தரையா?//
    ஆம் ஐயா, அது ஞானக்குழந்தை சம்பந்தரே.
    ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் திருவெண்காட்டிலேதான். சம்பந்தர் இந்த தலத்தை அடையும்போது, அந்த ஊரே சிவலோகமாக காட்சியளித்ததாம். குழந்தைதானே மிரண்டு, 'அம்மா' என்றழைக்க, ஓடி வந்து இடுப்பில் தூக்கி எடுத்துக்கொண்டாளாம் அன்னை பிரம்மவித்யாநாயகி. 'பிள்ளை இடுக்கி அம்மன்' என்ற பெயரில் அம்மன் கோயில் பிராகரத்தில் அன்னையை தரிசிக்கலாம்.

    ReplyDelete
  10. வாங்க ஷைலஜா மேடம், தொடுப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க சிமுலேஷன்,
    //ஆசை வெகுநாட்களாக உண்டு. இப்போதுதான் அந்த ஆசை நிறைவேறி வருகின்றது.//
    ஆகா, அருமை.
    //சிவன் கோயில்களும், சிமுலேஷன் பாடிய தேவாரங்களும்//
    சூப்பர்! ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பதிவு கூடப் போடலாம்! :-)

    ReplyDelete
  12. வாங்க சதங்கா,
    //ஆன்மீகத்திற்கு வெகு தூரத்திலேயே நான் இருந்திருக்கிறேன்.//
    இதயத்தை விட்டு எப்படி ஒருவர் வெகுதூரம் செல்ல இயலும்? என்றென்றும் அவரவர் அருகிலேயேதான் உள்ளது!. கண்டறியாதன கண்டேன் என்று நீங்களும் பாடிட வேண்டும்!
    //பதிவிட்ட உங்கள் உழைப்பிற்கு... //
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உழைத்துச் சாப்பிடுதல் என்றும் இன்பம்.

    ReplyDelete
  13. வாங்க சின்ன அம்மணி!
    //வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடி களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக்கின்றேன்.//
    பதிகத்தின் நிறைவுப்பாடலைத் தந்து, பதிவுக்கு நிறைவு தந்தமைக்கு நன்றிகள்.
    //திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பாடுப்படும் பாடல்.//
    அப்படியா, இது நான் அறியாத செய்தி. நன்கு பொருத்தமானது. Marital union is the first step towards Divine Union என்பார்கள் பெரியவர்கள்.

    ReplyDelete
  14. //இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை"//

    உண்மைதான். பஞ்ச நதிகள் சூழ் திருவையாறு க்ஷேத்திரத்திற்கு
    சென்று அங்கு பஞ்ச நதீஸ்வரர் பெருமானை தரிசித்தவர் பாவம்
    எல்லாம் தொலைப்பர். இக்கோவில் வாயிலில் உள்ள அக்கினி
    குண்டத்தில் குங்கிலியம் இடுவர். தீராத வினைகளையும் தீர்த்து
    வைப்பவர் பஞ்ச நதீஸ்வரர் என்ற ஐதீகமும் உண்டு.

    ஜீவா அவர்கள் எப்போதாவது தஞ்சை வந்தால், (இங்கிருந்து
    ஒரு 12 கிலோ மீட்டர் தொலைவு தான்) எங்கள் வீட்டிற்கு வரவும்.
    தங்களுடன் நானும் திருவையாறு சென்று இந்தப் புண்ணிய
    பூமிதனைத் தரிசிக்கும் பாக்கியத்தில் நானும் பங்கு பெறுவேன்.

    ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த ஸ்தலும் இதுவேதான்.
    ஒவ்வொரு மார்கழி மாதம் பகுள பஞ்சமி அன்று ஆராதனை நடக்கிறது.
    இதுவும் இந்த க்ஷேத்திரத்தின் விசேடம்.

    நிற்க. கோவிலில் இந்த பாசுரம் அதிகாலையில் பாடப்பெறுவதைக்
    கேட்டிருக்கிறேன். ஆயினும் ஒதுவார்கள் பைரவிதனைச் சார்ந்த‌ பண்ணில்
    பாடுகிறார்கள்.
    தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் நிகழ்ச்சிகளிலும் இந்தப்பாடல் பாடப்படுகிறது. பிரபல‌ நாதஸ்வர வித்துவான்கள் இதை ரசித்து இசைக்கின்றார்கள். மாங்கல்ய தாரணம் (தாலி கட்டும் நிகழ்ச்சி)
    முடிவடையும் தருணத்தில் இதைப்பாடி சிவமும் சக்தியும் சேர்ந்த ஆனந்த உலகைப் பாடி மகிழ்வர். பிலஹரி
    ராகத்தில் இந்த விருத்தத்தைக் கேட்டதும் உண்டு.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  15. வருக சுப்புரத்தினம் ஐயா,
    //தஞ்சை வந்தால், எங்கள் வீட்டிற்கு வரவும்.//
    ஆகா, அழைப்புக்கு மிக்க நன்றி, பாக்கியம் அடைந்தேன்.
    //பிரபல‌ நாதஸ்வர வித்துவான்கள் இதை ரசித்து இசைக்கின்றார்கள். //
    அப்படியா சேதி.
    //பிலஹரி
    ராகத்தில் இந்த விருத்தத்தைக் கேட்டதும் உண்டு.//
    ஆகா, நல்லது!

    ReplyDelete
  16. 'அடியார் தம் பெருமை சொல்லவும் வேண்டுமோ' என்பார்கள். ஆனால், சொல்லித்தான் பலவிஷயங்கள் 'அப்படியா!' என்று நம்மை வியக்க வைத்துத் தெரிகிறது.
    திருவையாறு--நினைத்தாலே மனம் ம்கிழும் திருத்தலம். ஐயாரப்பனின் கருணை அளவிடற்பாலது. நாவுக்கரசரின் உணர்வும் உள்ளச் சிறப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    மேன்மையான பதிவிட்டு மகிழச் செய்த உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ஜீவி ஐயா!

    ReplyDelete
  18. அருமை!
    இவை போன்ற பாடல்கள்,திருமுறைப்பாடலகள் MP3 வடிவில் கிடைக்கும் வலையின் உரல் இருப்பின் அறியத்தர வேண்டுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  19. வாங்க அறிவன்,
    சங்கீதப்பிரியா தளத்தில் நிறையக் கிடைக்கிறது.
    மற்றும் யூட்யூப் தளத்திலும் கேட்கக் கிடைக்கிறது.

    ReplyDelete
  20. அருமையான பதிவு.

    //இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை //

    இப்படித்தான் இருக்கிறோம் :( என்று அறிவதோ?

    இப்படியெல்லாம் எனக்கு எழுத வராது; ஆனால் படிக்கப் படிக்கப் பரவசமாகும்; கண்கள் பனிக்கும். உங்கள் பணிக்கு நன்றிகள், ஜீவா.

    ReplyDelete
  21. வாங்க கவிநயா. அமரர் கல்கியின் வாசகம் பரவசப்படுத்தவதில் வியப்பில்லை.

    ReplyDelete
  22. அதை மட்டும் சொல்லவில்லை ஜீவா. உங்கள் பதிவையும் நீங்கள் தந்திருக்கும் விதத்தையும் சேர்த்துதான் சொன்னேன் :)

    ReplyDelete
  23. நன்றி கவிநயா,
    எல்லாம் அவன் செயல்.

    ReplyDelete
  24. jeeva can you give a link to "bhakthuni saarithramu" if avbl on net? a thiagaraja kirthanai.

    ReplyDelete
  25. திவா,
    இந்தக் கிருதியின் பாடல் வரிகளை கேட்கிறீர்களா அல்லது பாடல் ஆடியோவா?
    இரண்டுக்கும் சுட்டிகள் இங்கே:
    பாடல் வரிகளைப் பார்க்க இங்கே செல்லவும். இடது பக்கத்தில் ஸ்கிர்ப்டை தமிழில் மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்!
    பாடலை இங்கிருந்து கேட்கவும், தரவிறக்கமும் செய்து கொள்ளவும் செய்யலாம்.

    எதையெல்லாம் செய்ய வேண்டாம் என அழகாக சொல்கிறார் தியாகராஜர்!

    ReplyDelete
  26. நான் படிக்க வேண்டும் என்று நினைத்து இன்று இந்த பாடலை தேடிய போது உங்கள் வலைதளம் வரும் வாய்ப்பு கிடைத்தது
    இந்த பாடலை மிக எளிய நடையில் விளக்கம் கொடுத்து எளிமையாக பொருள் புரிந்து நினைவில் மற்றும் மனதில் பதிய
    வைத்தவிட்டீர்
    மிக்க நன்றி
    உங்கள் பணி தொடராட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete