Showing posts with label நாலடியார். Show all posts
Showing posts with label நாலடியார். Show all posts

Saturday, August 29, 2020

கோபம் நல்லது?

ன்னது, கோபம் நல்லதா? ஆத்திரத்தாலே செய்யக்கூடாததை செஞ்சு ஏடாகூடமா மாட்டிக்கிட்டவங்க எத்தனையோ பேராச்சே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு பழமொழியே உண்டே?

ஒருவர் கோபமா இருக்கார்ன்னு எப்படி தெரிய வருது?

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற ?

 - குறள் : 304

அவருடைய நடவடிக்கையில் மகிழ்ச்சி இருக்காது. அவருடைய முகத்தில் சிரிப்பு இருக்காது. எள்ளும் கொள்ளும் அவர் முகத்தில் வெடிக்கும். அவரது சொற்கள் சுடும்.

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

- நாலடியார் : 63 

சினத்தில் சொன்ன சொற்கள் எதிராளியை மட்டுமல்ல, தன்னையே பின்னர் வந்து வருத்தும்.  அதனால் முதலில் கோபத்தில் கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும். 

இதிலேயும், அன்னியர்களை விட, நமது அருகில் இருப்பவர்களிடம் அதிகமாக நமது கோபத்தைக் காண்பிக்கிறோம். நாம் அவர்களிடம் நாமே ஏற்படுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்புகள் நடைவேறாதபோது, நமக்கு அவர்களிடம் கோபம் அதிகமாக வருகிறது. நமது கோபத்தில் நாகாவாமல் சொல்லும் சொற்களால், அவர்களுக்கு நம்மீது கோபம் வருகிறது.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

- நாலடியார் : 70 


ஒருவரை நாய் கடிக்கும் போது, சினம் கொண்டு, பதிலுக்கு அந்த நாயை அவர்தான் கடிக்கக் கூடுமோ? அப்படியிருக்க சினஞ்சொற்களை கேட்டபின், பதிலுக்கு நாமும் சினஞ்சொற்களை ஏன் திருப்பித் தருகிறோம்?

கோபம் சக்தி வாய்ந்தது. கோபத்தை வெளிப்படுத்தாமலே போனாலும் நாளாடைவில் அதுவே வெறுப்பாக மாறுகிறது. 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 

தன்னையே கொல்லும் சினம். 

- குறள் : 305 

வெறுப்பு ஆழமான உணர்வலைகளால் ஆனது. அதனைக் கொண்டாரையே எரிக்கும் தன்மையுடையது. ஒருவர் இதுகாறும் மகிழ்வுடன் செய்யவதற்றைக்கூட இனி செய்ய இயலாமல் துன்பப்படுவர்.

இத்துணை சக்தி வாய்ந்த கோபத்தை நல்வழியில் பயன்படுத்த முடியுமோ? 

தென் ஆப்ரிக்காவில் முதல் வகுப்பு இரயிலில் பயணம் செய்த மாகாத்மா காந்தியடிகளை கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளப்பட்டபின், அவர் என்செய்தார்? வெளியே தள்ளிய அதிகாரியை கடுஞ்சொற்களால் திட்டினாரா அல்லது அந்த இரயில் மேல் கல்லெடுத்து அடித்தாரா? அல்லது தன் கோபத்தை தன் உற்றாரிடம் திசை திருப்பினாரா? அப்படி செய்திருந்தால் அவருடைய கோபம் தணிந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, இன வேறுபாடு காட்டிய கட்டமைப்பின் மேல் அவரது கோபத்தைத் திருப்பி, அதிலிருந்து விடுதலை பெற உழைத்தார். ஆக, கோபமும் ஒரு வகை சக்தி. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது நமது கையில் தான் இருக்கிறது. 

கோபத்தை அடக்கிக் கொள்வதும் நல்லதல்ல. அதே சமயத்தில், கோபத்தினால் பித்துப் பிடிப்பதும் சரியல்ல. நல்லதற்காகக் கோபத்தைக் காட்டுவதும் தவறல்ல. 

கோபம் ஏற்படுங்கால் செய்யக்கூடிய சில நடைமுறைகள்:

  • நியாயமான கோபம் தானா, இக்கோபம் நற்பலனுக்காகவா என்பதை தீர்மானித்தல் வேண்டும். இதற்கு அனுபவமும், மன முதிர்ச்சியும் துணை செய்யும்.
  • சரியான நபரிடம் தானா நாம் கோபத்தை வெளிக்காட்டுகிறோம் என தீர்மானம் செய்ய வேண்டும். எய்தவன் வேறிடம் இருக்க, அம்பை நொந்து என்ன பயன்?
  • இன்னொருவர் நமது கோபத்தைப் புரிந்து கொள்ளாதபோதோ, அல்லது அலட்சியம் செய்யும் போதோ, அவரிடம் வாதம் வீண் எனத் தெரியுங்கால், அதை அத்துடன் நிறுத்திக் கொள்தல் நலம். இல்லாவிடில், அது தன் கையை வீணில் நிலத்தில் அறைவது போன்றதாகும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 

- குறள் : 307

  • கோபம் ஏற்படும் நபரிடம் இருந்து தற்காலிகமாக அகன்று வேறிடம் செல்வது. மனதை வேறொன்றில் செலுத்திவிட, கோபம் தணிந்து வேறு விதமாய் யோசிப்போம்.


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 

- குறள் : 309

        

Friday, June 12, 2020

நாலும் இரண்டும்

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
- நாலடியார்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்

இந் நாலும் இரண்டும் தரும் நல்வழி தனைப் பாடிடப் புனைந்த பாடல்.

எடுப்பு
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும் - உலகில்
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும்.

தொடுப்பு
நாலும் இரண்டும் கற்றோர்க்கு - பொல்லா
உலகில் இல்லையே பவ பயம்.

முடிப்பு
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
வேலை முடிந்து கோரைப்பாயிற் படுத்தாலும்
நாலும் இரண்டும் தரும் நல்வழிதனைப் பற்றிட
(உலகில் இல்லையே பவ பயம்)

பாலை நிலத்தில் நீர் அதனைத் தேடி
மூலை முடிக்கெங்கும் அலைந்து திரியாமல்
கள்ளிச் செடியிலும் காண்பாரே.
(நாலும் இரண்டும் கற்றோர்க்கு)

காலை மாலை என வேளை எதுவாகிலும்
ஆலும் வேலும் போல் நாலும் இரண்டும் என
நூலைக் கற்று வழி நடந்தார்க்கு
(உலகில் இல்லையே பவ பயம்)