Tuesday, September 02, 2008

கணேச கானங்கள்



சில சமயங்களில், இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான், என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில், எளிய, இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனதும், இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும், மனது அமைதி அடையும். அகம் ஆதாரமானவனின் அருளில் திளைக்கும். இந்த இடுகையும் ஒரு கணேச சத்சங்கம் தான்!

ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்படித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன். வாயிற் காப்போன். மூலாதாரத்திற்கு கீழே உள்ள சக்கரங்களில் ஆன்ம சக்தி விரைந்தோடாமல், மேலே மேலே மட்டும் எழுப்பிட துணை நிற்பவன்.


கணேசனை, வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத, சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன். இந்த சதுர்த்தி தினத்தில், சங்கர பாலனுக்கு பாடல்கள் பாடி, நன்றி செலுத்துவோம்.

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.

பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல், நமது பாராம்பரிய சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா. அது இன்னமும் மனதை அகலாமல் நிறைந்திருப்பதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.

வாதாபி கணபதிம் - இங்கே எம்.எஸ் அம்மா பாடிடக் கேட்கலாம்:

பாடல் வரிகள் மற்றும் ஸ்வர நோட்ஸ்கள் திரு.சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது. இம்மின்நூலை தரவிறக்கிக் கொண்டு நீங்களும் பாடிப் பழகலாமே!

இந்தப் பாடலில், தீக்ஷிதர் சுவாமிகள், 'ஹம்சத்வனி ஹே பூஷித...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!. எத்தனை சிறப்பு பாருங்கள் இந்த இராகத்திற்கு. எனவேதான், பல கணபதி கிருதிகள், ஹம்சத்வனி இராகத்தில் அமைந்திருக்கின்றன.

தமிழில், பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த கணபதி துதிப் பாடலாகும்.

பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:

கருணை செய்வாய்...


ஹம்சத்வனி ராகம், கல்யாணி ராகத்தைப்போலவே, மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!

கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.

ஒருமணிக்கொருமணி...


அடுத்தாக இந்த ஸ்ரீரஞ்சனி இராகக் கீர்த்தனை - எனக்கு மிகவும் பிடித்த பாடல் -
பத்ம பூஷன் திரு.ஜேசுதாஸ் பாடியுள்ள - "கஜவதனா கருணா சதனா..." பாடல்.
இதுவும் பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்:

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர

தொடுப்பு
அகனமரேந்திரனும் முனிவரும் பணி
பங்கஜ சரணம் சரணம் சரணம்

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வின் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் ஓம்காராப் பொருளே!

கஜவதனா கருணா சதனா


தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதியுங்கள், துயரனைத்தும் அகன்று, அகம் துலங்கிடும், இகமதில் பரம்பெருள் பேரின்பமதைத் தரும்.

9 comments:

  1. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் ஜீவா. இனிமேல்தான் பாடல்களை கேட்க வேண்டும். பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  2. வாங்க கவிநயாக்கா,
    உங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதியுங்கள், துயரனைத்தும் அகன்று, அகம் துலங்கிடும், இகமதில் பரம்பெருள் பேரின்பமதைத் தரும்.//

    உண்மையே.

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
    துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு.

    திரு கபிலர் இயற்றியதைக் காண்போமா !

    வாழைக்கனி பலாவின்கனி
    மாங்கனி தாஞ்சிறந்த‌
    கூழைச் சுருள்குழை அப்பம்
    எள்ளுருண்டை எல்லாம் துறந்தும்
    பேழைப்பெரு வயிற்றோடும்
    புகுந்தென் உளம்பிரியான்
    வேழத்திருமுகத்துச் சொக்கர்
    மேனி விநாய‌க‌னே.

    சேக்கிழார் சொல்வார்:

    எடுக்கும் மாக‌தை அன் த‌மிழ்ச்செய்யுளாய்
    ந‌ட‌க்குமேன்மையும் ந‌ம‌க்க‌ருள் செய்திட‌த்
    த‌ட‌க்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
    க‌ட‌க்க‌னிற்றைக் க‌ருத்துள் இருந்துவாம்.


    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://ceebrospark.blogspot.com
    http://pureaanmeekam.blogspot.com
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  4. தமிழிலக்கிய செய்யுள்களில் நிறைந்த ஆனைமுகத்தான் துதியை அள்ளி தந்திட்ட ஐயா சுப்புரத்தினம் அவர்களுக்கு வணக்கங்கள்!

    ReplyDelete
  5. Anonymous6:04 AM

    jeeva Happy vinayagar chaturthi..Happen to search a site in a google and saw your blog...You have done a great work.. Vasu.

    ReplyDelete
  6. இதோ என்னுடைய contribution :)
    ராகம்: சிவரஞ்சனி
    தாளம்: ரூபகம்

    பல்லவி
    தருணமிதைய்யா
    தயை புரி துதிக்கைய்யா- உரிய (தருணமிதைய்யா)

    அனுபல்லவி
    சரணம் என்றுன் மலரடிபணி
    தமியனை தவிக்க விடாமல்
    (தருணமிதைய்யா)

    சரணம்
    உன் அருளலதோர்
    துணையினி உலகில் இல்லையே
    எந்தன் முன்னவனே
    யானை முகனே
    முருகனுக்கருளும் துதிக்கையனே
    முக்கட்பரன் மகனே
    விக்ன வினாயகனே
    முக்கனி மோதகப்ரியனே
    அபயம் அபயம்
    விரைந்து வந்தருள்
    (தருணமிதைய்யா)

    ReplyDelete
  7. அருமையா வந்திருக்குங்க பாடல்!
    இங்கே சேர்த்தமைக்கு நன்றிகள் ஷ்ருதி!
    தமியேனை ஆளத் தருணமீதய்யா!

    ReplyDelete
  8. மன்னிக்க வேண்டும். அது நான் எழுதிய பாடல் அல்ல.

    ReplyDelete
  9. ஆ, அப்படியா, அதனலென்ன!

    'தருணம் ஈதம்மா' என்று காமாக்ஷி மீது ஷ்யாமா சாஸ்ரிகள் இயற்றிய பாடலை அறிவேன்.

    இது யார் இயற்றிய பாடலாக இருக்கும்?

    ReplyDelete