Showing posts with label திருப்புகழ். Show all posts
Showing posts with label திருப்புகழ். Show all posts

Sunday, June 05, 2011

திருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய!

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

"பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்பார். காளிதாசன் "குமார சம்பவம்" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் "உற்பத்திக் காண்டம்" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க! என்றார்.
-கந்தபுராணம்

தேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி? "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்!”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

முகங்கள் ஆறு:
முருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.
சிவனுக்கும் அறுமுகங்களா? சிவனுக்கு ஐந்து முகங்கள் தானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.
(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)

கரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு
சிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்!
சூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.
முன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.

அப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது

(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் "இது தான் அது" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.
பிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)

சால வுடைய தவர்கண்டு கொண்டது
(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)
மூல நிறைவு குறைவின்றி நின்றது
(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
(சாதி, குலம் போன்றவை அற்றது.)

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,
நின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்
என்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,
சிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,
வெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,
குண்டலினி சக்தியான அம்பிகையாம்)

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்
அன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே)

Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Friday, December 26, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (4)

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

Friday, October 24, 2008

இயல் இசையில் : திருப்புகழ்

இராகம் : ஹூசைனி
தலம் : திருச்செந்தூர்

தன தனன தனன தந்தத் தனதான

இயல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித் துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல்மூழ்கி

உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே


மயில் தகர்கலிடையர் அந்தத் தினைக் காவல்

வனஜகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே

கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.

-----------------------------------
தகர் : ஆடு - முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனஜ : தாமரை/திருமகள் (வனஜம் - தாமரை ; தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்- ஆகுபெயர்) (பூவெனப் படுவது பொறிவாழ் பூவே)
---------------------------
இந்த திருப்புகழ் பாடலை திரு.ஜேசுதாஸ் பாடிட இங்கு கேட்கலாம்: (PopUp விண்டோவில்)
(பிற்சேர்க்கை : இங்கு ஜேசுதாஸ் பாடுவது, ஹிந்தோளம் போல இருக்கிறது)
[play]
இந்தச் சுட்டியில் இருந்து உங்கள் கணிணிக்கு இறக்கிக் கொள்ளலாம்:


---------------------------

அருணகிரியார் சொல்கிறார்:
யலிசையில் சிறந்து விளங்கும் பெண்டிரின் நினைவில், இரவு பகலெல்லாம், வேறொரு நினைவும் இல்லாமல் அலைந்தேனே. அப்படிப்பட்ட எனக்கும், நீயும் கருணை புரிந்தாயே கந்தா. உன் கருணைக்கு நிலையான பாத்திரமாக நான் என் செய்வேன்?. அந்த நிலையான, உண்மையான, பேரின்பம் தரும் கருணைக்கடலில், நான் மூழ்கிடுவேன். அவ்வாறு மூழ்கிடுகையில், அப்பா முருகா, உன்னை, எந்தன் இதயத்தில், அறியும் அன்பைத் தருவாயே.
அன்பு, அன்பு - என்பார் எல்லோரும். இறையை அறிய அன்பு இருக்க வேண்டுமாம். இதயம் முழுதும் நிரம்பி வழியும் அன்பு வேண்டுமாம். முருகைய்யா, அந்த அன்பினை நீயே எனக்குத் தருவாய். உன்னை அறியும் அன்பை, எனக்கு நீயே தருவாய். அதற்காக, உன் நினைவிலே மூழ்குகிறேன். உன்னைப் பாடுகிறேன். நீயன்றி வேறொன்றும் அறியா நிலையில், உன் கருணை என்னும் சாகரத்தில் மூழ்குகிறேன்.
யில்களும், ஆடுகளும் நிறை மலைப்புறத்தில் தினைகள் விளையும் வேடர் நிலைத்தினை காவல் காக்கும், குறத்தி மகளாம் வள்ளி, இலக்குமிபோலவே அழகாக இருக்கிறாள். தாயைப்போலவே பிள்ளை! அவளுக்கு வணக்கம் செலுத்தி (கொடியிடையாள் வள்ளி - கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய வள்ளி எனும் குண்டலினி), அவளை உன்பால் அணைத்தவனே (மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி, உன் நிலைக்கு உயர்த்தியவனே)
கயிலைமலைபோல் புகழ்பெற்று நிற்கும் புனித செந்தில் மாநகர் வாழ் பதியே, வேலா,
கரிமுகத்தான் கணபதிக்கு இளையவனே, கந்தப் பெருமானே.

Sunday, February 17, 2008

மூன்றாம் படை வீடு, பழநி - திருப்புகழில்...

திமிர வுததி அனைய நரக

செனன மதனில், விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே


அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவேநின்


அருள தருளி யெனையு மனதோடு

அடிமை கொளவும் வரவேணும்


சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே


வெம் அரவணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே.

-------------------------------
அருஞ்சொற் பொருள்:

திமிர - இருண்ட

உததி - கடல்

சமரம் - போர்

சலதி - கடல்

பதலை - மலை

அயில் - வேல்

மிடறு - தொண்டை

-------------------------------------------------------------

பிறப்பின் தொடக்கமே இருளில் தானே, என் இறைவா,

கருவின் இருளில் தானே, இருண்ட கடலாய், இருளில் தானோ?

நிரந்தரம் இல்லா இவ்வுலகில் பிறப்பதும் நரகம் தானே?

இறைவா, இவ்வுலகம் எனக்கு நரகம் தானே?


இந்நரகம் தனில் உழலச் செய்தாலும், நீ எனைச் செய்தாலும்,

செவிடு, குருடு, ஊனம் அல்லது வறுமை,

பிறக்கும்போதே பிணித்திடும் மரபணு நோய்கள்,

என பலவும் எனை வாட்டி வருத்தாமல்,

அமரர் அழகும், நிறைந்த குலமும், அறிவின் நிறைவும்

பெற்றிட தருவாய் உனது திருவருளை.


சிறுபதரென என்னைப் புறம் தள்ளாது,

என்னையும் உன்மனதில் பொருட்படுத்தி

என்னையும் அடிமையென ஆட்கொள்ள வரவேண்டும்.


போர் முனையில், அசுரர் தலைகள் சிதறிட

அலறலில் ஓயாக் கடலலை போல் ஒலிகள் எழ,

நீண்ட மலையாக எழுந்து நின்ற அசுரனும் பொடிப்பொடியாக,

நெடிய வேலாயுதத்தினை செலுத்திய என் இறையே,


நீ யாரென என்று யாரேனும் கேட்டால் நான் இவ்வாறு சொல்வேன்:

அரவணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் மருகனும்

கருநீலகண்டம் கொண்ட சிவனாரின் குமாரனுமான

பழனி மலையில் தண்டம் தனைத் தரித்து

அமரர்கள் அருகில் வந்து தொழுதிடும் குமரன் என்று.

Sunday, November 19, 2006

பாதி மதி நதி...

சமீபத்தில் கேட்ட திருப்புகழ் பாட்ல்.

கேட்ட பொழுது முதல் நெஞ்சை விட்டு நீங்கா பாடல்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

பாடல் வரிகள்:

(பாடல் வரிகள் சீர்களாக அல்லாமல் படிப்பதற்கு எளிதான சொற்களாக)

பாதி மதி நதி போதும் அணி சடை

நாதன் அருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா

காதும் ஒருவிழி காகம் உற

அருள் மாயன் அரி(ஹரி) திரு மருகோனே

காலன் எனை அணுகாமல்

உனதிரு காலில் வழிபட அருளாயே

ஆதி அயனோடு தேவர்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி

அமரர்கள் சூழவலம்வர வரும் இளையோனே

சூத மிகவளர் சோலை மருவும்

சுவாமிமலைதனில் உறைவோனே

சூரன் உடல் உற வாரி சுவரிட

வேலை விடவல பெருமாளே.

பாடலைக் கேட்க