Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

Wednesday, October 29, 2008

இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?

நரேந்திரனின் பயிற்சிக் களம் - நான்காவது பகுதியினை எட்டியிருக்கிறோம், மெய்யன்பர்களே. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து படிக்கலாமா.
கடந்த பகுதிகளின் சுட்டிகள்:
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
----------------------------------
நரேந்திரனின் கூர்மையான மனது, இராமகிருஷ்ணரின் அறிவுரைகளில் இருந்த மிக நுண்ணிய செய்திகளையும் ஆழ்ந்து கவனித்து, அவற்றின் சாரத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டது.
ஒருநாள், இராமகிருஷ்ணர், வைணவத்தின் மூன்று முக்கிய கூறுகளாக - "இறைநாம அன்பு, இறையடியார் தொண்டு, எல்லா உயிர்களுடத்திலும் அன்பு" என குறிப்பிட்டார். மேலும், அதோடு சேர்த்து, எல்லா உயிர்களுக்குமான தொண்டு எனவும் குறிப்பிட்டார். அன்பு - தொண்டு; இதில் இருந்த வேறுபாட்டை மற்ற மாணவர்களால், அவ்வளவு எளிதாக உணர இயலவில்லை. நரேந்திரனோ, இளம் மாணவர்களை பின்னர் அழைத்து, அவர்களிடம், 'நம் குரு, என்ன அழகாக, அத்வைதத்தின் பற்றற்ற நெறியினையும், த்வைதத்தின் அன்பு நெறியையும், ஒரு சேர இணைத்து விட்டார் பாருங்கள்' என்று சொல்லி விளக்கினார்:
"அத்வைதமும், த்வைதமும் - ஒன்றுக்கு ஒன்று முரணானதே அல்ல. த்வைதம் உரைப்பவன், தன் மனதை கல்லாக்கிக் கொள்ள வேண்டியதில்லை, உலகை விட்டு ஒதுங்க வேண்டியதில்லை. பிரம்மம் எல்லாவிடத்திலும் இருப்பதால், அத்வைதம் உரைப்பவன், எல்லோரிடமும் அன்பு செலுத்தி, தொண்டும் ஆற்றிடத்தானே வேண்டும். எல்லோரிடத்திலும், அன்பு செலுத்த, அவர்களிடத்தில் இருக்கும் இறையைப் பார்த்தால் இயலுமல்லவா.", என்றதுடன் தொடர்ந்து நரேன் சொல்கிறார்:
"இறைவன் விருப்பம் அதுவானால், ஒருநாள், இந்த பேருண்மையை, இந்த உலகம் முழுமைக்கும் பறை சாற்றுவேன். அதனை எல்லோருக்கும் பொதுவான உடமையாக்குவேன்."
சில ஆண்டுகளுக்குப் பின் இதே கருத்தினை கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துவார் - அதன் இறுதி வரிகளில் இருந்து:
இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?:
எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் ,
அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்!
அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.

இராமகிருஷ்ணர், கிட்டத்தட்ட மீண்டும் ஒருமுறை, இந்து மதத்தின் அடிப்படைகளை நரேந்திரனுக்கு கற்றுத்தந்தார் எனச் சொல்லலாம். நரேன், தனது அன்னையின் மடியில் கற்ற அரிச்சுவடிகளெல்லாம், அவரது கல்லூரி வாசத்தில் கரைபுரண்டிருக்க, இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டிற்குப்பின், இந்து மதம், வெறும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டது அல்ல, என உணர்ந்தார். அது ஒரு உள்ளார்ந்த அனுபவம், ஆழ்ந்தது, உள்ளடக்கியது, எல்லார் நம்பிக்கைகளையும் மதிப்பது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் உயர்ந்த குறிக்கோள் எனவும் உணர்ந்தார்.

மதம் என்பது ஒரு இலட்சியப்பாதை என்றும், அது ஜாதி, மற்றும் இனம் போன்ற வேறுபாடுகளைக் கடக்க வேண்டும், காலம், இடம் போன்ற கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்றும் கற்றார். ஒருவர், குறியீடுகள் மூலமாக, தனது இஷ்ட தெய்வத்தை வணங்குதல் மூலமாக, எல்லாமுமாய் இருக்கிற பரம்பொருளை இறுதியில் எட்டிட முடியும் என்பதையும் கற்றார். இராமகிருஷ்ணர், தானே, ஒரு எடுத்துக்காட்டாய், நரேந்திரனுக்கு, எப்படி ஒரு மனிதன், தன் உயரிய உன்னத இலக்கினை எட்டிட இயலும் - என்பதனைக் காட்டினார்.

ஒருநாள் ஆனந்த நிலையில், இராமகிருஷ்ணர், அன்பர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: "பல்வேறு கருத்துக்களும், பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் நானும் கண்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்குப் பிடிப்பதும் இல்லை. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அன்பர்கள் தங்களுக்குள்ளே, வாக்குவாதமும், வீண் சண்டையும், செய்கின்றனர். ஒன்றை உங்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என் மக்கள். இங்கே அன்னியர் யாரும் இல்லை. முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."

நரேந்திரனை ஒப்பிடுகையில் இராமகிருஷ்ணர், "நான் பல அன்பர்கள் இங்கு வருவதைப் பார்க்கிறேன். சிலரைப் பார்க்கும் போது, பத்து இதழ் தாமரை போல் தோன்றும். இன்னும் சிலரை பார்க்கும்போது, நூறு இதழ் தாமரை போல் தோன்றும். ஆனால், நரேந்திரனோ, எல்லா தாமரைகளிலும், ஆயிரம் இதழ் தாமரை. மற்றவர்கள் பானை அல்லது கூஜா போன்றவர்கள், என்றால், நரேந்திரனோ பெரிய தண்ணீர் தொட்டி. மற்றவர்களோ, குளம் அல்லது குட்டை என்றால், நரேந்திரனோ, பெரிய நீர்தேக்கத்தைப் போன்றவன். நரேந்திரன், கூட்டங்களில் என் அருகாமையில் இருக்கும்போது, பெரும் சக்தியை உணர்கிறேன்." என்பார்.

தக்ஷினேஸ்வர் வனத்தின் மரங்களடியில் தியானம் மேற்கொண்டார், நரேன். இதே இடத்தில் தான் முன்பு இராமகிருஷ்ணரும், தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்விடத்தில் தொடர்ந்து, தியான பயிற்சிகளை மேற்கொள்ள, அவரது குண்டலினி சக்தி எழுப்பபெற்றார் என்றும், மேலும் சில ஆன்மீக தரிசனங்களைப் பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஒருமுறை, கிரிஷ் என்னும் சக தொண்டரோடு சேர்ந்து, தியானம் செய்ய அங்கு சென்றார். அன்று அந்த இடத்தில், நிறைய கொசுக்களாக இருந்தது. கிரிஷ் அவர்களால், கொசுகளின் தொந்தரவில் இருந்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறிது கடினமாக இருந்தது. அதே சமயத்தில், அருகில் இருந்த விவேகானந்தரை கவனித்தால், அவரோ, உடனேயே, ஆழ்ந்த தியானத்தில் சென்றிருந்தார் - அவரது உடல் முழுவதும் கொசுக்கள் போர்வையாய் மூடி மொய்த்துக் கொண்டிருப்பினும்!

ஒரு சில நாட்களில், நரேந்திரனுக்கு, தன் இலக்கினை அடையும் தாகம் வெகுவாக உயர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு முழுதும், கொல்கத்தா கோசிப்பூர் தோட்ட வீட்டினை ஓயாமல் சுற்றி வந்தவாறு, இராம நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில், இராமகிருஷ்ணர், நரேனின் குரலைக் கேட்டு, உள்ளே அழைத்து, 'குழந்தாய், ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய், பொறுமை இழப்பதால், என்ன பயன்?.' என்று கேட்கலானார். ஒரு நிமிடம் தாமதித்து விட்டு, இப்படியும் சொன்னார் : " நீ இப்போது செய்வதை, நான் 12 வருடங்களுக்கு செய்து வந்தேன். என் தலையில் அப்போது, பெருத்த புயல் வீசியது போலிருந்தது. ஒரு நாள் இரவில் என்ன இயலும்?' என்றார்.

இப்படிச் சொன்னாலும், இராமகிருஷ்ணருக்கு உள்ளூர, விவேகானந்தரின் ஈடுபாட்டில் மகிழ்ச்சியே. தனக்குப்பின் தன் சீடர்களை, நரேந்திரனே தலமையேற்று, வழிநடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை. "அவர்களை உன்னுடைய கவனிப்பில் விட்டுப்போகிறேன். அவர்களிடம், ஆழ்ந்த அன்பு செலுத்தி, அவர்கள் ஆன்ம நெறியில், என் இறப்புக்குப்பின்னரும் நடந்திட பார்த்துக்கொள்" என்றார் நரேந்திரனிடம். இளம் சீடர்களிடம், நரேந்திரனை தங்கள் தலைவராகக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருநாள், இராமகிருஷ்ணர், அவராகவே, இளம் சீடர்களுக்கு, துறவறத்தினை தொடங்கி வைக்க, பின்னாளில் விவேகானந்தரால் தொடங்கப்பட இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு, அன்று அவரே பிள்ளையார் சுழியும் இட்டார்.

Monday, August 25, 2008

நம் சமயம் - நோக்கமென்ன?

சமயத்தின் நோக்கம் மனிதனை சமைப்பது - மனிதனைப் பக்குவப்படுத்துவது - இப்படிச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
நிறைவேறிக் கொண்டிருக்கிறதா?
அல்லது இனிதான் நிறைவேறுமா?

இந்த அறிவியல், தொழில் நுட்ப உலகில் சமயத்தால் எதையும் சமைக்க முடியுமா என்ன?

இந்த எல்லா கேள்விகளுக்கும் எளியதொரு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுகிறேன். சில நாட்களுக்குமுன் இங்கே வானொலியில் காதில் கேட்ட கதைதான் இது:

அமெரிக்காவில் பெரும்பாலானோர் அன்றாடம் காய்ச்சிகள். நன்றாக உழைத்து பணம் சம்பாதிப்பது, அவற்றை நன்றாக அனுபவித்து செலவழிப்பது, இதுவே அவர்களின் தாரக மந்திரம். சேமிப்பது வெகு குறைவான பணமே. அப்படிப்பட்ட ஒருவர், வானொலியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரை தொலைபேசியில் அழைத்து தன்னைப்பற்றிய செய்தியை அவரே சொல்கிறார்:

"எனக்கு இரண்டு குழந்தைகள். அன்றைக்கு குடும்பமாக சர்ச்சுக்குப் போயிருந்தோம். அன்றைக்கு சிறப்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்து கொள்வதாக நானும், என் மனைவியும், மற்ற குடும்ப நண்பர்களும் பேசிக்கொண்டோம். இதை குழந்தைகளும் கேட்டு அவர்களும் ப்ரார்த்தனை செய்து கொண்டார்கள் போலும். ப்ரார்த்தனை முடிந்தவுடன், நான் குழந்தைகளிடம் ஆவலுடன் கேட்டேன், அவர்களின் ப்ரார்த்தனை என்னவென்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் - 'நம் மாமா அவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைத்து அவரது துயர்கள் எல்லாம் தீர வேண்டும்' என்று. அவர்கள் சொல்வது உண்மைதான். அவரோ சென்ற சில மாதங்களாக வேலை இழந்து, பல கடன்கள் கழுத்தை நெறிக்க, படும் துன்பங்களை சொல்லி மாளாது. அவரின் குழந்தைகள் பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் தற்காலிக தஞ்சம். இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு, இப்படி இன்னொருவர் துன்பம் தீர வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே, மிக்க நன்றி இறைவா, என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொரு உண்மையும் என்னை இடித்து உறைக்கத் துவங்கியது. எங்கள் குடும்பத்தைப் பற்றியான பயம் தான் அது. எங்களுக்கும் கிட்டத்தட்ட 36,000 டாலர்கள் வீட்டுக் கடன்கள் இருக்கின்றன. நாங்கள் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், ஏதோ கடனின் வட்டியையாவது அடைக்க முடிகிறது. இதுவே ஒருவராவது, வேலை இழக்கும் படி நேர்ந்தால், என்னவாகும் என நினைத்துப் பார்த்தேன். என் குழந்தைகள் முகத்தையும் ஒருமுறை பார்த்தேன். உடனே முடிவுக்கு வந்தேன். இந்தக் கடன்களையெல்லாம் எப்படியாவது அடைத்துவிடுவது என்று. வீட்டுக்கு வந்தவுடன், மனைவியுடன் கலந்து பேசி, இதற்கான திட்டத்தை தயார் செய்தோம். இருவரும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலை செய்வதாக முடிவு செய்தோம். வீண் செலவுகளையும் குறைத்துக் கொண்டோம். மாதத்திற்கு 2,000 டாலர்கள் என சேமிக்க, சென்ற 18 மாதங்களில் சேமித்ததை நேற்றுதான் வங்கியில் செலுத்தி, எல்லா கடன்களையும் அடைத்து விட்டோம். இன்றில் இருந்து நாங்கள் Debt Free!."
என்ற மகிழ்ச்சியான கூதுகலத்துடன் சொல்லி முடித்தார் அவர்.

இந்த கதைச்செய்தியில், ப்ரார்த்தனை, குழந்தைகளிடம் ஆன்மிகம் போன்ற அருஞ்செய்திகள் இருந்தாலும், நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது வேறு ஒன்றை. இந்தச் சம்பவம் நடந்த இடமான சர்ச் வளாகத்தை. சர்ச் என்னும் 'ஆலயம்' எப்படிப் பட்ட இடம்? எல்லோரும் ஒருவர் மத்தியில் ஒருவர் கூடி தங்கள் துயர் தீர இறைவனை வேண்டும் இடம். 'வேண்டுதல்' எப்போது நடக்கும். ஒருவர் மனமுருக நடக்கும். இந்த சம்பவக் கதையில், அந்த குழந்தைகள் அந்த சர்ச்சில், அந்த சூழ்நிலையில், இதைச் சுட்டிக் காட்டாமல், வீட்டீலேயோ, மற்ற இடத்திலேயோ விளையாட்டாக சொல்லி இருந்திருந்தால், அந்த நபர் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, பாடுபட்டுக் கடனை அடைத்திருப்பாரா என்பது சந்தேகத்திற்கு உரியதே. அப்படிப் பார்க்கையில் சர்ச் என்னும் நிறுவனமும், அது சார்ந்த சமயமும் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு துணை புரிகிறது என்பதனை உணர இயலும்.

சமயத்தின் பங்கு ஒருபுறம் இருக்கட்டும். அதை நமக்கு சாதகமாக நாம் பயன்படுத்திக் கொண்டால் தானே அதன் பயன் நமக்குத் தெரியும். ஒரு மாம்பழம் காய்வாட்டாக இருக்கிறது. அது இன்னமும் நன்றாக பழுக்கட்டுமே எனக் காத்திருக்கிறோம். மாம்பழம் மிகவும் கனிந்து அழுகி விடுவதற்கு முன் தக்க சமயத்தில் உண்டால்தானே சுவைக்க முடியும். அதுபோலத்தான், சமயத்தில் இருந்து நாம் சமைவதற்கு தேவையானவற்றை தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அழுகிய பழம், என மாம்பழத்தைக் குறை சொல்வதில் பயனென்ன? சமயத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பயன் தராமல் போகலாம். ஒருவருக்கு பயன் தருவது, இன்னொருவருக்கு உதவாமல் போகலாம். அதனால், சமயத்தை குறை சொல்வதை விடுத்து, பயன் பெறப் பார்ப்பதே நல்லது.

எப்படிப்பட்ட பயனைப் பெற நாம் முயல வேண்டும்? தம்மை சமைக்கத் தக்க பயனைப் பெற முயல வேண்டும். அவரது அகத்தினை, அகத்தினில் நிறையும் மனத்தினை இசை போல உருக்கி கனிந்திடச்செய்ய வேண்டும். அவ்வாறு மனதில் தூய உருக்கத்தில் ஏற்படும் உணர்வினையே திருமூலர் 'அன்பு' என்கிறார். அந்த அன்பே சிவம் என்கிறார். அன்பும் சிவமும் இரண்டல்ல என்கிறார், ஏனெனில் அந்த அன்பே, சிவமதைக் காண விசுதத்தில் வித்திடுகிறது. இந்த இறை அன்பு ஏற்பட, மனதளவில் பலவாறு பண் பட வேண்டும். அவரவர் மனமுதிர்ச்சிக்கு ஏற்றாற்போல, பல காலமும் ஆகலாம், சில நாட்களும் ஆகலாம். அதுவரை, அகமுருகி, அவன் தாள் பணிவதே அகத்தால் செய்ய வல்லது.