இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.
இராகம் : ஜன சம்மோதினி
எடுப்பு இராம நாமம் நல்ல நாமம் நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும் இராம நாமம் நல்ல நாமம்
தொடுப்பு தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம் தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட இராம நாமம் நல்ல நாமம்
முடிப்பு ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம் ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம் மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம் மாதா பிதா குருவை மதித்த மன்னன் இராம நாமம் நல்ல நாமம்
இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!
தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. 'கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக...' எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: 'நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்' என்று.
ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்! ~~~ அடுத்து வருவது: இராகம் : தேஷ் இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்
எடுப்பு: இராம நாமமே துதி மனமே! க்ஷேமம் உறவே, நீ தினமே, சீதாராம நாமமே துதி மனமே! தொடுப்பு: பூமியை, பொன்னை, பூவையரையும், நீ, பூஜித்து பின் புண்ணாகாமலே சீதாராம நாமமே துதி மனமே! முடிப்பு: சோதனைகள் பல, வாதனைகள் யாவும், நாதனை நினைந்திடில் நாடுமோ? சீதாராம நாமமே துதி மனமே! ~~~ மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
இங்கு, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்து வருகிறோம் அல்லவா? இடையில் நீண்ட இடைவெளியாகி விட்டது. குரு, இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடன் நரேந்திரனின் பயிற்சிக்களம் எப்படி இருந்தது, என்பதை சென்ற நான்கு பகுதிகளில் பார்த்தோம். இங்கு, இறுதிப்பகுதியினை பார்ப்போம்.
இராமகிருஷ்ணருக்கு நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அவருக்கான பணிவிடைகளை நரேந்திரன் செய்துவந்திட, இராமகிருஷ்ணரின் ஆன்ம பலத்தினை நரேன் நன்கு அறிந்திட, அதுவே வழிவகுத்தது. இராமகிருஷ்ணரால், அவரது உடலில் ஏற்பட்டிருந்த நோயின் தீவிரத்திலும், அவரது உடலை விட்டு விலகி நிற்க இயன்றதைக் காண நரேந்திரனுக்கு வியப்பு மேலிட்டது. இராமகிருஷ்ணரின் உடலில் நோயினால் வலி ஏற்பட்டாலும், அவரது ஆன்ம பலத்தின் ஈடால், அவ்வலியைத் தாண்டியும் ஆனந்தக் களிப்பில் மிதந்திட இயன்றது. இரமணரும் இப்படித்தான் என்பது, ஜீவன் முக்தர்களுக்கான இலக்கணம் என்பது போல இருக்குது அல்லவா!
ஒருநாள், இராமகிருஷ்ணரைப் பார்க்க வந்திருந்த பண்டிதர் ஒருவர் ஒரு யோசனை சொன்னார். இராமகிருஷ்ணர் மட்டும், அவரது தொண்டையில் தியானத்தால், அவரது நோய் குணமாகி விடும் என்று. இராமகிருஷ்ணரோ, கடவுளில் இருந்து என் நினைவை அகற்றி, இந்தத் தொண்டையில் தியானிப்பதா, என்று மறுத்து விட்டார். ஆனால், நரேந்திரனோ விடாது, 'நீங்கள் காளி அன்னையிடம், இந்த நோயினைப் பற்றி வேண்ட வேண்டும்' என்று திரும்பத் திரும்ப வற்புறுத்திட, 'சரி, அவ்வாறே செய்கிறேன்' என்றார். சிறிது நேரத்திற்குப் பின் சோகமான குரலில் சொன்னார். 'என் தொண்டை ரணமாகி, என்னால், உணவேதும் விழுங்க இயலவில்லை' என அன்னையிடம் இதுபற்றிக் கேட்டேன். அதற்கு அன்னையோ, 'உனக்குத்தான் அத்தனை சீடர்கள் இருக்கிறார்களே?, அவர்களின் அத்தனை வாயிருந்துமா, உனக்குப் போதவில்லை' என்றாள். 'வெட்கித் தலைகுனிந்தேன், வேறேதும் பேச இயலேன்' என்றார்!. இதைக் காண நரேந்திரனுக்கு, இராமகிருஷ்ணர், இந்த நிலையிலும், எப்படி இறை எங்கும், எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது, என்பதனை நடைமுறைப் படுத்துகிறார் என்பது புலனாயிற்று. மேலும், அந்த உண்மையான ஞானம் ஏற்பட்டால்தான், வலிகளில் இருந்தும், தனிமனித துன்பங்களில் இருந்தும் மீள இயலும் என்பது, தெளிவாயிற்று.
நரேந்திரனுக்கு அவ்வப்போது, ஆன்ம சக்தியும் வெளிப்பாடுகளும், காணற்கரிய காட்சிகளும் கிட்டி வந்தன. இவற்றால், நாளடைவில், அவருக்கு, அலுப்பும் ஏற்படலானது. அத்வைத வேதாந்தம் சொல்லும் உன்னதமான அனுபூதி நிலையான நிர்விகல்பசமாதி நிலையினை எட்டிடும் ஆவலில் அவர் மனது ஏங்கியது. பெயர், உருவ வேறுபாடுகள் மறைந்து, தனி மனித ஆன்மாவும், அண்ட சராசரங்களும், அதுனுள்ள அத்தனையும் இரண்டென்றிலா பிரம்ம சொரூபத்தினை அடைந்திடும் நிலைக்காக அவர் மனம் ஏங்கியது. நரேந்திரன் இந்த ஆவலை தன் குருவிடம் வெளிப்படுத்திட, இராமகிருஷ்ணரோ மௌனம் காத்தார்! இருப்பினும், நரேன் ஏங்கிய அந்த அனுபவம் ஒருநாள் மாலையில் ஏற்படத்தான் செய்தது.
ஒருநாள், விவேகானந்தர், எப்போதும்போல தியானத்தில் அமர்ந்திருக்க, திடீரென, அவரின் தலையின் பின்புறம், விளக்கு ஒன்று எரிந்து கொண்டு இருப்பதுபோல அவருக்குத் தோன்றியதாம். அந்த விளக்கில் இருந்து வெளிச்சம் அதிகமாகிக் கொண்டே இருக்க, இறுதியில் பெரிதாய் வெடித்து முடிந்ததாம். அந்த வெளிச்சத்தில் மயங்கி விழுந்து விட்டார். சிறிது நேரத்திற்குப்பின் சுய உணர்வு மீண்டு வெளியே வந்து, அங்கிருந்த சக மாணவரிடம், 'கோபால், என் உடல் எங்கே, என் உடல் எங்கே?' என்று வினவினார். கோபாலோ, 'ஏன் நரேன், அங்கே தான் இருக்கிறது. உங்களால் உணர முடிய வில்லையோ?' என்று மறுமொழி சொல்லி விட்டு, எங்கே நரேந்திரன் இறந்திவிடப்போகிறாரோ என்ற அச்சத்தில் இராமகிருஷ்ணரிடம் முறையிடச் சென்றார். அங்கே இரமகிருஷ்ணரோ, அமைதியுடன், நடந்தது எல்லாவற்றையும் அறிந்தவராக புன்னகைத்தவாறு சொன்னார்: 'நரேந்திரன் அந்த நிலையிலேயே கொஞ்ச நேரம் இருக்கட்டும், நெடுநாள் ஏக்கத்தின் விளைவை அவ்வளவு சீக்கிரம் கலைக்க வேண்டாம்!' என்றாரே பார்க்கலாம்!. சிறிது நேரத்திற்குப் பின், சாதாரண நிலைக்குத் திரும்பிய நரேன், விவரிக்கமுடியா அமைதியிலும், நிறைவிலும் மூழ்கியவாறு இருந்தார். பின்னர், இராமகிருஷ்ணரின் அறையில் நுழைந்திட்ட நரேனிடம், குரு சொன்னார்: 'இப்போது, அன்னை, உனக்கு எல்லாவற்றையும் காட்டி விட்டாள். ஆனால், இந்த 'அறிதல்', பெட்டி ஒன்றில் வைத்து பூட்டப்பட்ட நகை போல. அதன் சாவியோ என்னிடம். இப்பூவுலகில், நீ வந்த நோக்கம் நிறைவு பெற்றபின், அப்பெட்டியினைத் திறக்கப்பெற்று, சற்றுமுன், நீ அறிந்தவற்றை நிரந்தரமாய் அறிவாய்.' என்றார்! இதுபோன்ற சமாதி உணர்வு, உடலில் சொல்லொணொ துயரங்களைத் தரக்கூடியது. அவதார புருஷர்களால் மட்டுமே, இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றிருப்பார்கள். மேலும், இராமகிருஷ்ணர், நரேனிடம், அவர் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி, மிகவும் தூய்மையான உணவையே உண்ணும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் மற்ற ஆசரம மாணவர்களிடம், 'நரேந்திரன் தன் பூவுடலை அவனாக விட்டு முக்தி அடைவான். அவன் தன் சுய சொருபத்தினை உணர்ந்தபின், இப்பூவுலகில் நில்லான். வெகு விரைவில், தனது ஞானம் மற்றும் ஆன்ம சக்தியால், இந்த உலகத்தையே உலுக்கிடுவான். பிரம்ம ஞானத்தினை, நரேனிடம் இருந்து, மாயை எனும் திரை கொண்டு, மறைத்து வைக்கும்படியாக, அன்னையிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். அவன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. ஆனால், அவனை மறைக்கும் அந்த திரையோ, மிகவும் மெல்லியதாகத் தெரிகிறது. எந்நேரமும், அது கிழிந்து போகக்கூடும்' என்றார்!
பரமஹம்சரின் உடல்நிலை வெறும் எலும்பு தோல் போர்த்திய உடலாக நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. அவரோ உடலில் மிச்சமிருந்த சக்தியினை, தன் மாணவர்களின் பயிற்சிக்காக செலவிடலானார். இப்போதெல்லாம், நரேந்திரனைப் பற்றிய கவலைகள் குறைந்திருந்தன, நரேனுக்கு காளியன்னையின் பரிபூரண நல்லாசிகள் கிடைத்து விட்டமையால். பின்னொரு நாளில் விவேகானந்தர் இவ்வாறு சொன்னார்: 'அவர், என்னை அன்னையிடம் ஒப்படைத்த நாள் முதலாய் - ஒரு ஆறு மாதத்திற்கு அவரால் உடல் சக்தியினை நீட்டிக்க இயன்றது. ஆனால், அதற்குமுன், இரண்டு வருடங்களுக்கு அவர், சிரமப்பட்டார்' என்று.
குருவின் கடைசி மூச்சுக்கு சிலகாலம் முன்னால், சீடன் நரேனை தன் படுக்கைக்கு அருகே அழைத்தார். நரேனை முழுதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார். நரேனின் உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல சூட்சுமசக்தி பாய்வதை உணர்ந்தவாறு, அவர் மூர்ச்சையாகி விட்டார். சற்றுநேரம் சென்ற பின், நரேன் இயல்பு நிலைக்கு திரும்பிட, அங்கே இராமகிருஷ்ணர் அழுது கொண்டிருக்கக் கண்டார். அவர் நரேனிடம், 'அன்பா, இப்போது என்னிடம் இருந்த எல்லாவற்றையும் உனக்குத் தந்து விட்டேன். இப்போது, நான் ஒன்றுமில்லா பக்கிரி போலத்தான். இந்த சக்தியெல்லாம் கொண்டு நீ அரியனவெல்லாம் சாதித்திடுவாய். அதுவரை, நீ புறப்பட்ட இடத்திற்கு திரும்பிடாமல் செயலாற்றுவாய்.' என்றார். கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னால், குருவின் படுக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நரேந்திரனக்கு, திடீரென ஒரு எண்ணம் ஏற்பட்டது. 'தம் குரு உண்மையிலேயே அவதார புருஷரோ?' என்பதுதான் அது. 'ஒருவேளே, குரு தானகவே அதனை ஒப்புக்கொண்டால்தான் என் மனம் தெளிவடையும்' என நரேன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவாறு, இராமகிருஷ்ணரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, மெதுவாக, அவரின் உதடுகள் அசைந்து, தெளிவான குரல் கேட்டது: 'என் அன்பு நரேன், இன்னுமா உன் மனம் ஒப்பவில்லை?. யார், முன் பிறப்புகளில் இராமனாகவும், கிருஷ்ணனாகவும், பிறந்தானோ, அவனேதான் இந்த உடலில், இராமகிருஷ்ணனாக இருக்கிறேன்.' என்று அவருடைய திருவாயினாலேயே மலர்ந்தருளினார்.
1886 ஆம் வருடம், ஆகஸ்ட் 15 இல், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அன்று நள்ளிரவுக்குப்பின், சில நிமிடங்களுக்கு, சிறிது சீரான நிலை ஏற்பட, நரேந்திரனை, தன்னருகே அழைத்து, இறுதி அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, 16ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு, காளியன்னையின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு, இறுதியான சமாதி நிலைக்குள் நுழைந்தார். அதன்பின் அவரது மனம் பூவுலகிற்கு திரும்பிடவில்லை. பின்னர், கங்கை நதிக்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குப்பின், விவேகானந்தர், வழக்கம்போல் சக ஆசரம மாணவருடன், தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், வெளிச்சமான ஒரு உருவம் தென்பட்டது. சந்தேகமில்லாமல், அது இராமகிருஷ்ணரின் உருவம் தான். ஆனால், நரேன், ஒருவேளை தான் எப்பொதும் குருவின் நினைவில் இருப்பதால் ஏற்பட்ட மனபிரம்மையோ என்கிற எண்ணத்தில் அமைதியாய் இருந்தார். ஆனால், அவரது சகாவோ, 'அங்கே பார், நரேன், அங்கே பார்!' என வியப்பில் அந்த உருவத்தினைக் காட்டிட, அது இராமகிருஷ்ணரின் உருவம்தான் என்பது உறுதியானது. ~~~ இராமகிருஷ்ணரிடம் 'இறைவனை எனக்கு காட்ட முடியுமா? என்று கேட்டவாறு, அவரது பயிற்சிக்களத்தில் நுழைந்த நரேந்திரநாத் தத்தா, எப்படி தமது குருவின் ஆத்மார்த்த சீடனாகி, அவர் மூலமாக காளியன்னையின் அருளைப் பெற்று, எல்லாம் வல்ல இறைவன், எப்படி எல்லாமுமாய், எல்லா நம்பிக்கைகளிலும் நிறைந்திருக்கிறான் என்பதினை நேரடியாகக் கண்டறிந்து கொண்டார் என்பதனை, கடந்த ஐந்து பகுதிகளில் பார்த்தோம். உசாத்துணை: (Swami) Vivekananda - A Biography. By Swami Nikhilananda. ~~~ குரு இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு வணக்கங்கள்! ~~~ இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 1:
இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 2:
விவேகானந்தர் இயற்றிய இந்த ஆரத்தி பாடலின் வரிகளும், பொருளும்: