Wednesday, March 26, 2008

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே! : தியாகராஜர்

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!

ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!

உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!

உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,

உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,

உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,

ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,

உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!

-----------------------------------------------------------------------
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு

பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக (உபசாரமு...)

சரணம்
வாகிடனே பதிலமுக வாதாத்மஜுடுன்னாடனி
ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு ஜானகி யேர்படியுன்னதனி
ஸ்ரீகாந்த பருலேலனி ஸ்ரீதியாகராஜ வினுத (உபசாரமு...)

------------------------------------------------------------------
வயலினில் பைரவி ஆலாபனை:
upacharamu-violin-...


பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் செவி இனிக்கும் அமுதக் குரலில்:
upacharamu-kjj.mp3



சஞ்சய் சுப்ரமணியம் பாடிட இங்கு கேட்கலாம்.

இந்தப் பாடலின் பைரவி ஆலாபனையை நாதஸ்வர வாசிப்பில் இங்கு கேட்டு நாத மழையினில் நனையலாம்.

Sunday, March 23, 2008

கே ஆர் எஸ் - கேடு கெடுத்தவர்

பதிவர் KRS - கே.ஆர்.எஸ் -
அவரைப் பற்றி நான் சொல்லும் ஏதும் புதிதாய் இருக்காது.
குன்றிலிட்ட விளக்கினை அறியாதவரும் உண்டோ?

கே ஆர் எஸ் - ஆம், கேடு கெடுத்தவர் - இவர்
ஆன்மீகத்திற்கு வரும் கேட்டினைக் கெடுத்தவர்.
எப்படி என்கிறீர்களா, இப்படித்தான்:

அண்ணல் இவர் பதிவில்தான் எத்தனை வகை -
எனினும் எதிலும் குன்றாது சுவை.
தாலாட்டும் பாடுவார் - துயில்
எழுப்பலும்
பாடுவார்.
அரங்கன் பதிவு மட்டுமல்ல ,
சிவராத்திரிப் பதிவும் இவரிடம் உண்டு.
இவர் பதிவுகளில்
ஆழ்வார் பாசுரம் ஏதும்
ஆச்சரியமல்ல - தியாகப் பிரம்மமே
தமிழில்
பாட்டிசைக்கும்போது!
திருமால் பாடல்களை தொகுப்பார் - அவன்
மருகன் முருகன் பாடல்களை வகுப்பார்.

இவர் வாசகர் வட்டத்தினை தன்பக்கம்
வசமாக கவர்ந்திழுக்கும் காந்தம்!
கவர்ச்சியான தலைப்புகளால்
வந்து விழுமே ஒராயிரம் பின்னூட்டம்!

புராணக் கதைகளோடு சேர்த்து
புதிரும் போடுவார் - உடன் வாசகரைத்
தேடவும் வைத்து தன்பக்கமே திருப்பிடுவார்.
இந்தக் கண்ணபிரானும் உன்னைத்
தேடவைத்தது என்னபிரானே?

புராணப்பதிவு மட்டுமல்ல,
புதுமைகளும் படைப்பவர்.
சீர்திருத்தம் தேவையென
சீர்குரல் கொடுப்பவர்.
சமூக விழிப்புணர்வை
சலிக்காமல் சொல்பவர்.
சிகுவையும் நகையும் சிந்தனையும்
சீராய்ப்பெற்ற செம்மல்.

ஆதவனாய் ஒளிவிடும் ரவிசங்கர்,
வாழ்க வளமுடன் - எங்கள்
பதிவுலக நெஞ்சங்களிலெல்லாம்.
சிறப்புகள் பல பெற்று ஒளிர்விட
எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கே!

Friday, March 14, 2008

உயிரிலும் மெய்யில் உருகவா பாப்பா!

ன்பே ருயிரே

மைக்கும் சனருளே

வகையே னே உயிரே

னதுயிரே காந்தச்சிரிப்பே

ம்புலன் ஆள்வாயே

ருமையே ம்காரமே

வையின் தமிழே

ட்டிக் கரும்பே கனிமுத்துப் பாப்பா,

செல்வமே உனை சீராட்டிடுவேனே!

ங்கச் சுடரே தங்கமே தங்கம்

பிஞ்சுக் கிள்ளையின் பூந்தளிர் மேனியே

வெற்றி முரசே

யாதும் உனதே யாவையும் நீயே

ம்மிய இசையே ரீங்கராத் தென்றலே

விடியலின் புதுமையே விந்தையின் முந்தையே

லை மொழியே மாசறு ஒளியே

ஞாமாய் எங்கும் நிறையும்

நான் அருளில் பூரமாய் திகழ்வாயே!

உனக்காக இங்கே நிலாப்பாட்டு ஒன்றினை, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினார் உருவாக்கியுள்ளனர்.

இன்னும் பல பாடல்களும், கதைகளும், பயிற்சிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது, பார்க்கவும்!

Wednesday, March 12, 2008

இன்னும் இரண்டு மாதத்தில் இறக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

என்னங்க, கேள்வியே ஒரு மாதிரி பண்ணுதா? நீங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இறக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ரேண்டி பாஷ் - பல்கலைக்கழக பேராசிரியர் - ஜீரண உறுப்புகளில் புற்று நோயினால் தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர் - தனது கடைசி பல்கலை உரையில் என்ன சொல்கிறார் பார்ப்போமா?



கேள்விக்கான விடையை படத்தில் 4:10 முதல் 4:18 வரை கேட்டீங்களா?

உரையின் முழுநீளக் காட்சிப்படம் (முழுநீளம் : 76 நிமிடம் 26 நொடி)



நன்றே செய், அதையும் இன்றே செய்!

பின்குறிப்பு:
ரேண்டி பாஷின் தற்போதைய உடல்நிலை

Sunday, March 09, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சென்ற பகுதியில் சக்தி சிவனிடம் இராமனைப் பற்றி விளக்கங்கள் கேட்கிறதாகப் பார்த்தோம். மகேஸ்வரன் உண்மையில் இராமன் யாரெனச் சொன்னதுடன், அதை மேலும் விளக்கும் பொருட்டு, சீதை அனுமனுக்குச் சொன்ன விளக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் சீதா பிராட்டியின் உரையினைப் பார்ப்போமா?

தேவி சீதை: ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி சாட்சாத் பரப்பிரம்மமே. அவனே சத்-சித்-ஆனந்தம். ஒன்றென ஒன்றேயானவன். அவனைப் புலன்களால் ஒரு பொருளென உணர இயலாது, எனெனில் அவன் எந்த குணங்களும் அற்றவன். இராமன் மாசற்ற தூய ஆனந்தம். அவன் மாறுதலற்றவன். அறியாமையின் அறிகுறிகள் அற்றவன். எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
சீதையாகிய நானோ பிரகிருதி. எல்லாப் பொருட்களும் உருவாகுவதற்கான இயக்கப்பொருளாகவும், உருப் பொருளாகவும் இருக்கிறேன். அந்த பிரம்மாகிய இராமனின் 'இருப்பினால்' என்னால், அதாவது அவன் சக்தியான பிரகிருதியானால், இந்த அண்ட சராசரங்களை நான் படைத்தது.
(தொடர்ந்து, அயோத்தி நகரில், ரகுகுலத்தில் தசரதநந்தனன் இராமன் பிறந்தது முதல் தொடங்கி, தனக்கு அவனுடன் திருமணம் நடந்ததையும், இராவணன் மாயசீதையை அபகரித்ததையும், போரில் இராவணனை வதைத்து, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகம் நிறைவுற்றது வரை விவரமாக விவரித்தார்.)
இராமன் மேலே செய்தவை யாவும் பிரகிருதி ஆகிய என் மூலமாக நிறைவேற்றியவை. ஆனால் இராமனோ எந்த மாற்றங்களும் அற்றவன்.
மேலும், இராமன் நடப்பதுமில்லை, உட்காருவதும் இல்லை. சோகப்படுவதும் இல்லை. எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை. எதையும் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மொத்தத்தில் அவனிடம் எந்த ஒரு செயலும் நிகழ்வதற்கான தடையம் கூட ஒன்றுமில்லை. அவன் சுத்த ஆனந்தமாக நிறைந்திருப்பதால், அவனில் அசைவேதும் இல்லை, யாதொரு மாறுதலும் அவனில் இல்லை.
அதே சமயத்தில், இராமனை அவன் மாயையில் இருந்து பிரித்தறியும் உயர்ஞானம் இல்லாதவர்களுக்கு, மேற்சொன்ன மாறுதல்கள் யாவும் அவனில் நிகழ்வாதாக தவறாகக் கொள்வர். ஆனால் உண்மையில் மாயையின் உள்ளுக்குள் தான் மாறுதல்கள் எல்லாம் நிகழ்கின்றன.

இவ்வாறாக இராமனின் உண்மை சொரூபத்தினை பிராட்டியார் இயம்பி முடித்தார்.

---------------------- அத்யாத்ம ராமாயணம் : பின் குறிப்புகள் ----------------
மேலே தேவி சீதையின் உரையினைப் பார்க்கையில் அத்யாத்ம ராமாயணத்தின் இலக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இராம காதையினைக் கொண்டு ஆன்ம உபதேசத்தினை தருவது என்பதே அந்த இலக்காகும். இராமனை பரப்பிரம்மாக பார்க்கும் இந்நூல் - இப்படித்தான் என்று நேரடியாக விளக்க இயலாத பிரம்மத்தினை இக்காதை மூலம் விளக்குகிறது. அதே சமயத்தில் பரமன் ஒருவனாக காட்டப்படுவதுடன், அவனே இஷ்ட தெய்வமாக - ஈஸ்வரனாகவும் பார்க்கப்படுகிறான்.
இராமன் காட்டுக்குச் செல்வதும், கைகேயி மற்றும் மந்திரை மூலமாக நிகழும் சம்பங்கள் அனைத்தும் அவன் மாயையின் திருவிளையாடலே என்று விளக்குகிறது அத்யாத்ம ராமாயணம்.
மேலும்: இராவணனால் கவரப்பட்ட சீதையும் உண்மையான சீதையல்ல. இராமனின் மாயசக்தியால் உருவாக்கப்பட்ட மாயசீதை. உண்மையான சீதையோ அக்னி தேவதைக்குள் ஒளித்து வைக்கப்படுகிறார். யுத்த காண்டத்தின் நிறைவில், மாயசீதை அக்னிப்பிரவேசம் செய்ய, இராமன் தன் சீதையை அக்னியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் போன்றோரோ, வன் கையாலேயே முக்தி அடைய விரும்பியதால், போரும் மூண்டு, அதில் தங்கள் அஞ்ஞானத்தை முடித்துக் கொள்கின்றனர். அவர்கள் விபீடனனைப்போல் பக்தி மார்கத்தில் செல்லாமல், இராமனுடன் சண்டை இடுவதே தங்களுக்கு எளிதாக முக்தி அடைவதற்கான வழியாகக் கொண்டனர்.
-----------------------------------------------------------------
கம்பராமாயணத்திலும்:

போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

முன்பு தன் அண்ணன் விபீடனனார் சொன்னதுபோல்,

'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

சிவன், பிரம்மன், திருமால் - இவர்களில் யாருமல்லன் இராமன் - இவர்களுக்கெல்லாம் மேலான பரமன் - வேதமுதல்வனோ என்கிறான்.

Friday, March 07, 2008

இராமனைப்பற்றி சக்தி சிவனிடம் கேட்ட விளக்கம்

இடம் : கைலாயம்
சக்தியும், சிவனும் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் பேசுகிறார்கள் என்று கொஞ்சம் கேட்டுப்பார்ப்போமா?

சக்தி : உலகில் ராம பக்தி என்பது பிறவிக் கடலைக் கடக்க உதவும் உன்னதக் கப்பல் என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் இராமனைப் பற்றி எனக்கு சில ஐயங்கள் உண்டு, தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும், மகேசனே!

சிவன், புன்னகைத்தவாறு: கேள், சக்தி.

சக்தி: ஸ்ரீராமன், பரமனின் உருவமாக கருதப்படுவது அனைவரும் அறிந்ததே. உலகில் பலரும், அப்படிப்பட்ட புனிதனை அல்லும் பகலும் வணங்கி, வேண்டி, உருகி, அவனே பரமனாக, அவனை அடைய முயலுகின்றனர்.
ஆனால், வேறு சிலரோ, பிரம்மா சொன்ன பின்னர்தான், இராமனுக்கே தன் பரம சொரூபம் தெரிந்தாக சொல்கின்றனர். இன்னொருவர் சொல்லி எப்படி ஒரு ஆன்மா தன் பரம சொரூபத்தினை உணர இயலும்?

எல்லா உண்மையும் அறிந்த பரமனாக இருப்பின், சீதையை ராவணன் கவர்ந்த பின் எதற்காக அழுது புலம்ப வேண்டும்?

இராமன் பரமனை அறிந்திராமல், சாதரண மானுடனாகவே வாழ்ந்ததாகக் கொண்டாலோ, எல்லோராலும் போற்றத்தக்கதாகவோ, துதிக்கத்தக்கதாகவோ ஏற்றவன் என எப்படிக் கொள்ள இயலும்?

இந்த கேள்விகளுக்கான தக்க விளக்கங்களைக் கூறி என் சந்தேகங்களை களைவீர்களாக.

(இதைக்கேட்ட நமக்கு, சரிதான், நாரதர் இல்லாமலேயே நன்றாக கலகம் நேர்கிறது என்று நினைத்துக்கொண்டு, சற்றே உற்றுக் கேட்கலானோம்... சிவன் என்னதான் விளக்கம் தரப் போகிறார் என்ற ஆவலுடன்...)

சிவன் : சக்தி, உன்னுடைய அருமையான கேள்விகளுக்கான விளக்கங்களைச் சொல்லத் துவங்குமுன், ரகுகுலத் திலகன் இராமனுக்கு என் வணக்கங்கள்.
இராமன் எல்லாவற்றிலும் மேலானவன். அவன் பிரகிருதி அல்ல. அவனில் எல்லாமே உண்டு. தூய்மையான ஆனந்தமயமானவன் அவன்.
அண்ட சராசரங்களிலும், அனைத்து உயிர்களிலும் அவன் நிறைந்திருந்தாலும்,
அவன் இருப்பதை அவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கிறான். அவித்தையினால், அவர்களும் அதை அறியாமல் இருக்கிறார்கள். தங்கள் அறியாமையினால், தங்கள் பொன்,பொருள், பந்தம் போன்ற தளைகளோடு கட்டுண்டு, தங்கள் இருதயத்திலேயே மிளிரும் ஸ்ரீராமனைக் கண்டுகொள்ளாக் குருடராய் உள்ளனர் - கழுத்தில் ஆபரணம் இருந்தும் அதை மறந்து எங்கெங்கோ தேடுபவர் போல.
நான், எனது என்கிற அகங்காரத்தின் மமதை தலைக்கேற, ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில், செயல்கள் நிகழ்வதெல்லாமும் தன்னால்தான் எனக் கொள்வர்.
இந்த அறியாமைகளுக்கு எதிரே வன் ஒரு பார்வையாளனாகத்தான் இருக்கிறானே தவிர, அதனால் அவனுக்கு பாதிப்பேதும் கிடையாது. அறியாமையின் சக்தியான மாயையும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதோ தவிர, அதனால் அவனுக்கேதும் தாழ்வோ, குறைவோ கடுகளவும் கிடையாது.

என்னில் சரிபாதி கொண்ட உமையே, இதுபற்றி மேலும் விளக்க, முன்பொரு முறை நடந்த சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறேன். இது மோட்சம் அடைதல் பற்றியானதும் கூடவாகும்.
இராவணனை வென்று, சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகமும் இனிதே நிறைவேறிய பின்னர், இராமனும் சீதையும் அரியாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது அனுமனோ, ஒரு ஓரத்தில், அமைதியாக, இருகையையும் கூப்பியவாறு, தன் கடமைகளை நிறைவேற்றிய திருப்தியில், ஆசைகள் அற்று, உயர் ஞானம் ஒன்றே வேண்டி நிற்கிறான். இதைக் கண்ட இராமனும், சீதையைப் பார்த்து,
"என் அன்பின் சீதை, நம் பிரிய அனுமனுக்கு உயர் மெய்ஞானத்தை உபதேசித்தருள்வாயாக. அகத்தில் அப்பழுக்கற்ற அன்பன் அனுமன், பக்தியில் கரை கண்டவன். ஆக, ஞான ஒளி பெற ஏற்ற தகுதிகள் அவனுக்குண்டு." என்றான்.

அன்னை சீதா பிராட்டி - உலகெங்கும் அவள் ஆன்மாவின் உண்மையான சொரூபம் பற்றியான குழப்பங்களை தீர்த்து வைப்பவள். இராம பக்தன் அனுமனுக்கு, இராமன் உண்மையில் யாரென்பதை தெள்ளத் தெளிவாக உபதேசிக்கத் துவங்கினாள்.

(வளரும்...)

---------------- அத்யாத்ம இராமயணம் - ஒரு சிறு பின் குறிப்பு ------
இந்திய இதிகாசம் வால்மீகி இராமயணத்தை தழுவி பல்வேறு இராமயணங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்று அத்யாத்ம இராமயணம். இந்நூல் முழுவதும் சிவன் - சக்தி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வால்மீகி, இராமனின் இறைத்தன்மையை பின்புலத்தில் வைத்து, பொதுவாக மானுடனாக, காட்டியிருப்பார். ஆனால் அத்யாத்ம இராமயணத்தில் இராமன் பரமனாகவே காட்சி தருகிறான். இந்நூல் முழுதும், காவியப் பாத்திரங்கள் மூலமாக நீளமான தத்துவப் பாடல்களும், உரைகளும் படிக்கப்படுவது, இதன் சிறப்பம்சமாகும்.
சுவேதஸ்வதார உபநிடதம் சொல்லுவதுபோல், "பக்தியில்லாமல், எவ்வளவுதான் நூல்களைத் கற்றுத் தேர்ந்தாலும், எள் அளவும் ஞானம் கிட்டாது. பக்தியால் மட்டுமே ஞானம் சித்தியாகும்." என்பதனை இராமகாதை மூலமாக ஆன்ம ஞானத்தினை போதிக்கும் காவியமாக மிளிர்கிறது. பிற்காலத்தில், துளசிதாசரின் ராமயணத்திலும், அத்யாத்ம ராமயணத்தின் ஈடுபாட்டினைப் பார்க்கலாம்.

Wednesday, March 05, 2008

திருவெண்காட்டில் தேவாரம் பாடுவோம் வாங்க!

திருவெண்காடு - இத்திருத்தலம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு இடையே உள்ளது.
சுவாமி - சுவேதாரண்யேஸ்வரர், அம்பாள் - பிரம்மவித்யாநாயகி
திருவெண்காட்டீசனை திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறையான தேவாரப் பதிகத்தில் பாடும் செய்யுள்களை இங்கு பார்க்கலாம். இந்தப் பத்துப் பாடல்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்பதோடு, பாடலைக் கேட்டுப் பாடுவோம்.
பண் : சீகாமரம்; பாடுபவர் : திருமதி. விஜயலக்ஷ்மி ராஜாராம்
1.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
நெற்றியில் இமைக்கும் கண் பொருந்தியவன்,
எரிகனலை கையில் காட்டுபவன்,
தன்னில் பாதியைப் பெண்ணுருவாய் காட்டுபவன்,
விரிசடையில் பிறைச்சந்திரனைக் கொண்டவன்,
பாடல்களின் பண் வடிவான இசைப்பிரியன்,
பயிர்களின் உயிரான மழை மேகமாய் இருப்பவன்,
நந்தியினை கொடியில் காட்டுபவன்,

இப்படியெல்லாம் இருப்பவன் திருவெண்காட்டில் உறையும் ஈசன்.

2.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவெண்காட்டின் முக்குள நீரில் மூழ்கி எழுந்தால், பேயெனச் சொல்லப்படும் தீயவை எல்லாம் மடியும். பிள்ளைச்செல்லவம் இல்லாதவர்க்கு அந்தப் பேறு கிட்டும். மனதால் நினைத்த வேறு யாவும் உமை ஒரு பாகமாய் கொண்டவனின் அருளால் கிட்டும்.
இந்தப் பாடலே, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஈசனின் அருள் நிறைந்த அருளாளரான மெய்கண்ட தேவர் குழந்தையாய் பிறக்கும் அருள் பாலித்ததாக வரலாறும் உண்டு.

3.
மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி
எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். இப்பிறப்பாகவும், இதற்கு அடுத்த பிறப்பாகவும், எண் திசையாகவும், ஆணாகவும், பெண்ணாகவும், பெரியனவற்றுள் பெருமையாகவும், சிறியனவற்றுள் சிறுமையாகவும் இருக்கிற சிவபெருமான், விண்ணவர் தலைவன் இந்திரன் வழிபட திருவெண்காட்டினை உறைவிடமாய் கொண்டானே.

4.
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
நஞ்சினை உண்ட அண்ணல் உறையும் வெண்காட்டின் அருகே உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் உள்ள நீர் நிலையில் மலர்ந்த கடல் தாழைகள் வளைந்து இருக்க, தாழை மலரின் பிம்பம் நீரில் தெரிய, அது தம்மை உண்ணக் காத்திருக்கும் குருகு(பறவை) தானோ என நீர்நிலையில் இருக்கும் கெண்டை மீன்கள் ஐயுற்று, தாமரை மலரின் அடியில் மறைந்து கொள்ளவும், இதைப் பார்த்து நீர்நிலையில் இருந்த வெண்முத்துக்கள் நகைத்தனவாம்.
இந்தச் செய்யுளில் தற்குறிப்பேற்றம் தனை கவனிக்கவும். இது நாம் செய்யும் செயலுக்கெல்லாம் தானே காரணம் என அறியாமையினால் கொள்ளும் கலக்கத்தை ஒத்தது. அந்த கெண்டை மீன்கள் போல தாமரையிடம் - அனகதத்தில் அவனிடன் சரணடவதே கலக்கத்தை கலைக்க வழி.

5.
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
நீர்நிலைகள் சூழ்ந்த குளுமையான வெண்காட்டீசன் திருவடிகளை மாலைகள் மற்றும் சந்தனத்தாலும் வழிபட்ட சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த காலனை சிவன் காலால் மிதித்ததை அந்த எமதூததர்கள் அறிவார்கள். அதனால் சிவபிரான் அடியவர் என்றாலே அவர்கள் அஞ்சுவர்.

6.
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
தன் சடையில் ஒரே சமயத்தில் குளுமையான மதியையும், வெம்மையான பாம்பினையும் தாங்குபவன். ஒளி வீசும் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய உமையன்னையை ஒருபாகமாய்க் கொண்டவன். அப்படிப்பட்ட ஈசன் உறையும் வெண்காட்டுக்கோயிலில், இசைமொழியில் அவன் திருப்பெயர்கள் பலவும் ஓதக்கேட்ட பச்சை நிறக் கிளிகள், அவற்றை திருப்பி ஓதியவாறு, வெள்ளைநிற மேகங்களைத் தொட்டிடும் அளவற்கு உயர்ந்து வளர்ந்த பனை மரங்களில் வீற்றிருக்குமாம்.
அந்தக் கிளிகளுக்குத்தான் என்னப்பேறு, வானத்தை எட்டிட வைத்தது யாரு?

7.
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிராவதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
திருமாலுக்குச் சக்கராயுதம் ஈந்தவனும், சலந்தராசுரனைப் பிளந்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் (வெண் யானை - வெண்ஆனைக்காடு - திருவெண்காடு) பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், தீவினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய என் இறையவனே.

8.
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
இசையின் பண் கூடிய இனிய மொழியினளாகிய உமையன்னையே அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தான் - பித்தனாகிய இராவணன். அவன் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவனுறையும் கோயில் இங்கு. அவ்விடம், தம் தோகையில் அழகிய கண்கள் பொருந்திய நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வரிவண்டுகள் இசை ஒலியும் கேட்கும் திருவெண்காடெனும் திருத்தலம்.

9.
கள்ளார் செங்கமலத்தான் கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்று
உள்ளாடி யுருகாதார் உணர்வுடைமை யுணரோமே.
தேன் நிறைந்த செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் மற்றும் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவனைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான் வெள்ளானையும் தவஞ் செய்து வழிபடும் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று உருகாதவரும் உண்டோ?

10.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்றுணருமினே.
புத்த மதத்தவர்களும், சமணர்களும் வலிந்து கூறும் உரைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களை பேதையர்களாகக் கொண்டு, அவர்களைப் பிரிவீர்களாக.
அறிவுடையவர்களே, இதனைக் கேளுங்கள்.
வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் திருப்பெயர்களை
ஓதியவர்களுக்கு யாதொரு தீங்கும் வாராது என உணர்வீர்களாக.

11.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.
குளிர் சோலைகளால் சூழப்பட்ட சண்பை(சீர்காழி) நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தனாகிய யான், விண்ணில் பொலியும் வெண்பிறை சேர்ந்த தலையினை உடைய சிவன் உறையும் திருவெண்காட்டைப் பண் மீட்டிய ஒலிப் பாட்டு பத்தினையும் பாடிடுபவர், மண்ணில் சிறப்புற வாழ்வதோடு வான் சென்ற பின்னும் சிறப்போடு வாழ்வர்.

திருசிற்றம்பலம்.