Monday, October 29, 2012

முன்னோ பின்னோ? : அப்பர் பதிகம்

"தொன்று நிகழ்ந்து அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று பாரதி பாரதத்தாய் வாழ்த்துப் பாடி விட்டான். நம் நாட்டில் பண்டைக் காலத்து நிகழ்வுகளோ, சரித்திரங்களோ, எழுதப்பட்ட இலக்கியங்களோ, பலவற்றிற்கும் சரியானதொரு காலகட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். தக்க சான்றுகள் இல்லாத நிலையில் அனுமானங்களையும், பல முரண்பாடன கணிப்புகளையும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் துணைகொண்டு, காலக் கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் சிவ பக்தரும் சோழ அரசருமான கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிதாகக் கற்றளியாக கட்டப்பட்டது. இன்று 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்்துள்ளன. இன்றைக்கு இவ்வளவு பெரிய கோயிலாக இருப்பதற்கு, சோழர்களுக்கு முன்னால் பல்லவர்கள் தொடங்கி, சோழர்களுக்குப் பின்னால், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், மாரத்திய மன்னர்கள் என பல அரசுகளின் ஆதரவு இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுகையில் திருவாரூர் கோயிலை ஒரு முன்மாதிரியாக கொண்டாதகவும் ஒரு செய்தி உண்டு.

இவற்றுக்கெல்லாம் முன்பாக, கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்பர் பெருமான் திருவாரூர் கோயிலைப் பற்றிய காலக் கணிப்பொன்றில் ஈடுபட்டிருக்கிறார். பழமை வாய்ந்த திருத்தலமான ஆரூரில் (திருவாரூர்) கோயில் கொண்ட சிவபெருமானைப் பார்த்து - ஐயா,  நீர் திரு ஆரூரைக் கோயிலாகக் கொண்ட நாள் எதுவோ? என வினவுகிறார். குறிப்பாக, சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என வினவுகிறார்! இதற்கு சிவபெருமானைத் தவிர வேறு யாரால் விடை பகர இயலும்! எனினும், இதுவே திருவாரூர் தலத்தின் தொன்மைக்கு சான்றல்லவோ!


ஆறாம் திருமுறை 
திருநாவுக்கரசர் தேவாரம்
திரு ஆரூர் பதிகம்



*1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
ஓர் உருவே மூஉருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ?
மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*2
மலையார் பொன்பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ?
நினைப்ப(அ)ரிய தழல்பிழம்புஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலைகடல்நஞ்சு உண்ட நாளோ?
அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*3
பாடகம் சேர் மெல்அடி நல் பாவையாளும் நீயும் போய்
பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை
மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*4
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?
ஓர் உகம் போல் ஏழ்உகம்ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலைஆன வானோர் செய்த
தக்கன்தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு
ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*5 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானே!
நீலமாமணிகண்டத்து எண்தோளானே!
நெருநலையாய் இன்றுஆகி நாளைஆகும் சீலமே!
சிவலோகநெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே!
நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?---
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*6
திறம்பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*7
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக்
கற்பகம்ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து,
வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?---
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*8
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பார்அகத்தே பரஞ்சுடர்ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான்உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள்எட்டும், பூதலங்கள்அவைஎட்டும்,
பொழில்கள்எட்டும், கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சிஎட்டும்,
கழல்சேவடி அடைந்தார் களைகண்எட்டும், நகைஎட்டும், நாள்எட்டும்,
நன்மைஎட்டும், நலம் சிறந்தார் மனத்துஅகத்து மலர்கள்எட்டும்,
திகைஎட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*10
ஈசனாய், உலகுஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானைஉரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

Sunday, October 21, 2012

நவராத்ரிப் பாடல்


ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி

வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.

ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================

கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.

அதுபோலவே,

கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,

அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற:

 

Sunday, October 14, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே - 2

சென்ற பகுதியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியொன்று எழுதுவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லைதான் அப்போது. ஆனால், இந்த காணொளிப் படத்தினைப் பார்த்தபின்பு அதன் தொடர்ச்சியாகத் தோன்றத் தான் செய்தது.





காட்சிப் படத்தின் கருவினை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில்:
ஜில் போல்ட் டெய்லர் என்கிற மூளை சம்பந்தபட்ட நோய்கள் பிரிவு மருத்துவர் / ஆராய்சியாளர்  தனக்கே ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாக சுவைபட விவரிக்கிறார்.


நோயாளிக்கு நோய் வருகையில் மருத்துவரைச் சென்று பார்க்கிறார்.
ஆனால் மருத்துவருக்கே நோய் வருங்கால்?
இந்த காட்சிப் படத்தில் அவர் தன்னைத்தானே ஆராய்சி செய்துகொள்ளும் பேறு பெற்றேன் என்கிறார். அப்படியொரு ஆராய்சியில் அவர் என்னதான் சொல்கிறார்?
மூளையில் இரண்டு பகுதிகளான வலது மூளை மற்றும் இடது மூளை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் இருந்து தனித்தனியே செயல்படும் பொழுது:
(காணொளிக் காட்சிப் படத்தின் இறுதியில் 17:09 நிமிடங்கள் கடந்தபின்) 
வலது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நானே அண்ட சராசரங்களையும் இயக்கிடும் சக்தி. என் உடலில் உள்ள 50 டிரில்லியன் மூலக்கூறுகளுக்கும் (molecule) நான் ஆதார சக்தியாகவும், எல்லாப்பொருள்களுடனும் ஒன்றாகவும் தெரிகிறேன்."
இடது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நான் மற்றவர்களில் இருந்து தனிப்பட்டு, நான் என்கிற தனித்துவமானவர். நான் ஒரு மருத்துவர்...என்றெல்லாம்.".
"ஆகவே மக்களே, நமக்குள் இப்படியாக இரண்டு சாய்ஸ்கள் இருந்தால், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? எப்போது?" என்கிற கேள்வியைக் கேட்டதோடு, இவாறு நிறைவு செய்கிறார்: "எந்த அளவிற்கு நாம் வலது மூளையில் அமைதியையும் சாந்தத்தையும் நிலைபெறச் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், உலகத்திலும் அமைதியையும், சாந்தத்தையும் திகழ்ச்செய்வோம்".

---------------------------------------------------------------------------

சென்ற பகுதியில் ஐம்புலன்களும் எப்படி ஆழ்மனதிற்கு "இடையூறு" என்பதைப் பார்த்தோம். அதுபோலவே, நமது வெளி உலக அனுவங்களும், நமது வெளியுலகக் கல்வியும் ஆழ் மனதிற்கு இடையூறாகவே இருக்கின்றன. அது எப்படி? நமது புத்தியில் சேகரிக்கப்படும் அனுபவங்களும், உணர்வுகளும் நம்மை திருப்பி வெளியுலக அனுபவதிற்கே இட்டுச் செல்கிறன.



படத்தில் காட்டியுள்ளபடி, மனதின் செயல்பாட்டுப் பகுதிகளாக, ஆழ்மனம், சித்தம், அகங்காரம், புத்தி எனப் பிரிக்கலாம். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் பகுதியாகும். சித்தம் என்னும் பகுதியில், மனதினால் அறிந்ததை, புத்தி என்னும் சேமிப்பு கிடங்கிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், "முடிவுகளை" எடுக்கிறது. அகங்காரத்தின் உதவியால் எல்லா செயல்களையும, முடிவுகளையும் தன்னோடு (ஜீவனோடு) இணைத்துப்பார்க்க இயல்கிறது.

மேலே குறிப்பிட்ட மனதின் வரை படத்தின் எல்லைகளை ஒரு அமீபா செல்லின் செல் சுவர்களோடு ஒத்து நோக்கவும். ஆமீபாவின் செல் சுவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையுரைக்குள் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக பெருத்தும் சிறுத்துமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு ஒப்பாக, மனதில் சித்தம் விகாரமடைத்து, ஆழ் மனமானது புத்தி, அகங்காரம் மற்றும் ஐம்புலன்களின் ஈடுபாட்டால், தன் வயப்பட இயலாமல் போகிறது.

இதனாலேயே நம்மால், "தன்னை" அறியாமல் போவதற்கு ஏதாகிறது.



Monday, October 01, 2012

அனுமனை அனுதினம் நினை


நேற்று இங்கே திரு. ஓ.எஸ். தியாகராஜன் அவர்களது கச்சேரி நடந்தது.
என்றைக்கு சிவ கிருபை வருமோ
ஓ ரங்க சாயி
போன்ற பாடல்களைப் பாடியதோடு, விருத்தமாக "ஸ்ரீராகவம்" ஸ்லோகத்தினை இராகமாலிகையாக பாடியது இனிமையாக இருந்தது.

விருத்ததைத் தொடர்ந்து என்ன பாட்டு பாடுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "அனுமனை அனுதினம்..." பாடினார்.
அப்பாடலைக் கேட்கையில் தான் உறைத்தது, இதுவரை அனுமன் பாடல் எதுவுமே நமது பதிவில் தரவில்லையே என்பது. இதோ இப்போதே, அக்குறை களைய:

இராகம்: இராகமாலிகை
தாளம்: கண்டசாபு
இயற்றியவர்: குரு சுரஜானந்தர்
பல்லவி:
அனுமனை அனுதினம் நினை மனமே
விதிவினை மறைந்திடும் இது நிஜமே

சரணம் 1:
தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்
மனம் குணம் மாறியே நடக்கின்றோம்
பணம் பணம் என்றே தவிக்கின்றோம்
குணநிதி அனுமனை மறக்கின்றோம்

சரணம் 2:
பக்திக்கு முதலிடம் தந்தவன்
சத்திய ராமனை கவர்ந்தவன்
பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்
பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

சரணம் 3:
ராமா ராமா என பஜிப்பவன்
ராமன் சேவையை இரசிப்பவன்
ராம நாமத்தை புசிப்பவன்
ராமர் பாதத்தில் வசிப்பவன்
-----------------------------------------
ஓ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியிருப்பதை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், இப்பாடலை பரத் சுந்தர் பாடிப் பதிவேற்றியுள்ளது இங்கே கேட்கலாம்: