தானென்று சொல்லி தனக்கு ஒப்பிலா
வானதன் வன்னமது காண்!
வானதன் வன்னமது காண்!
தான், நான், எனக்கு... - என்னும் கூற்றுகளில் சிக்கிட, தனக்கு ஒப்பிலா வானம் போல், எங்கும் நிறைந்திருக்கும் இறையையும் கண்டு கொள்ள இயலுவதில்லை. வானத்தில் எப்போதும் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பினும், அவை யாவையென கண்டும் காணமல் இருப்பது போல. ஒப்பிலாதவனின் ஒருதுளியாய் இருப்பினும், அவனின் பூரண ஒளியினைக் காண்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், அவன்/அது எவ்வாறெல்லாம் சமைந்திருக்கிறான்/றது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறியலாம் அல்லவா!
எங்கெங்கும் நிறையும் இறை, எத்தனை எத்தனை விந்தைகளில் சமைகிறான்!
அவற்றில் சில துளிகளை இங்கே படங்களில் பார்த்து பரம் வசப் படலாமா?
வானத்தில் தெரியும் விண்மீன் கூட்டங்களுக்கு பலவாறான உருவங்களைக் கொடுத்து, அவற்றைப் பற்பல பெயர்களில் வழங்குவது நமக்குத் தெரிந்ததுதான் அல்லவா. இங்கே 'ரிஷபம்' என்னும் மாடு வடிவிலான விண்மீன் தொகுதியினைப் பார்ப்போமா!
Stellarium எனும் மென்பொருள் மூலமாக கீழே இருக்கும் படங்கள், பிப்ரவரி மூன்றாம் தேதி எடுத்தவை. இவற்றில் சந்திரன், ரிஷப விண்மீன் தொகுதியினுள் இருப்பதைக் காணலாம்.
ரிஷபம்
மேலே இருக்கும் இரண்டு படங்களும் இந்த ரிஷப நட்சத்திரத் தொகுதியினைக் தொகுத்துக் காட்டுதல்லவா.
இத் தொகுதியில், அந்த மாட்டின் வலது கண் பக்கத்தில், பெரிதாய்த் தெரியும் நட்சத்திரம் தான் ரோகிணி. இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் Aldebaran (87 Alpha Tauri). நமக்கு, 65 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது.
அடுத்த படத்தில், ரோகிணி பற்றிய தகவல்களையும், அதன் அருகே உள்ள நட்சத்திரங்களையும் பற்றி விவரமாகக் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்.
முதல் இரண்டு படங்களில், மாட்டின் வயிற்றுப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில், புள்ளி புள்ளியாக சில நட்சத்திரங்கள் தெரிகிறதல்லவா. அவற்றை அருகில் சென்று பார்ப்போம், அடுத்த படத்தில்:
அட, ஆறு நட்சத்திரங்கள் எளிதாகத் தெரியுது!. இவை தான் கார்த்திகை நட்சத்திரம்(ங்கள்!). இவற்றோடு அங்கிருக்கும் ஏழாவது நட்சத்திரத்தினையும் சேர்த்து ஆங்கிலத்தில், இவற்றின் தொகுதியை Pleiadas என வழங்குவர். கிரேக்கக் கதைகளில், இவற்றை, 'Seven sisters'(Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno மற்றும் Asterope) என்பர். ஆறேழு மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. கீழே இருக்கும் படத்தில் பாருங்கள், நட்சத்திரப் படலமாகத் தெரியும் இவை:
ஜப்பானியர்கள், இந்நட்சத்திரத் தொகுதியினை 'Subaru' எனவும், ஈரானியர்கள் 'Soraya' எனவும் பெயரிட்டனர்!.
அடுத்து நாம பார்க்கப்போகிறது ஒரு நெபுலா.(Nebula). இது ஒரு நடசத்திரத் துகள் படலம். தூசிபோல, ஒரே நட்சத்திரத் துகள்களாப் படிந்து இருப்பது. இந்த ரிஷப தொகுதிக்குள்ளே, மாட்டின் முதல் கொம்புக்கு அருகே (முதல் படத்தில் சதுரக் கட்டத்தினுள் இருப்பது), இதுபோல ஒன்றைப் பார்க்கலாம்.
அடுத்த படத்தில், இதே நெபுலாவினை, நமது தொலைநோக்கியை உற்று நோக்கச் செய்து, பக்கத்தில் போய் பார்க்கலாமா?
வாவ்!
இதற்குப் பெயர் Crab Nebula. நமக்கு 6,500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 1054ஆம் வருடம், இந்த நெபுலா ரொம்ப பிரகாசமாக இருந்ததாம், பகலிலேயே தெரிகிற அளவிற்கு!. பெரிய நட்சத்திரங்கள் வெடித்துப் போகும்போது, அதன் மீதமே, இதுபோன்ற படலங்கள். இந்த நெபுலாவுக்கு நடுவிலே, pulsar எனும், அந்த வெடித்துப்போன நட்சத்திரத்தின் கரு, இன்னமும் விட்டு விட்டு எரிந்துகொண்டே இருக்கிறதாம்!