Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.