குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி
குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு
கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்!
மணிகள் முழங்கட்டும்,
மங்களம் பெருகட்டும்,
கலியுக வரதன் கார்மேக வண்ணன்
கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே!
ஸ்ரீமந் நாரயணீயம் சுலோகத் தொகுதிகளை இங்கே படிக்கலாம். அவற்றில் இருந்து முதல் தசகத்தினை இங்கே தமிழில் படித்துப் பார்க்கலாமா?
தசகம் 1: சுலோகம் 1
எல்லா இடத்திலும் நிறைந்தது,
காலம் மற்றும் இடத்தினில் குறுகாதது,
மெய்யான, எல்லையில்லா ஆனந்தம்,
தூய மெய்ஞானம் பரப்பிரம்மம்!
கணக்கிலா மறைகள் உரைசெய்திட்டினும்,
கண்டு தெளிந்திட கடினமானதும், தெளிந்திட
உன்னதக் குறிக்கோளான வீடுபேறாகவே விளைந்தது!
அதுவே, இதோ, நம்கண் முன்னே குருவாயூரினில் திகழ்வது,
ஆகா, என்ன அற்புதம்! இஃதே மனிதரின் பாக்கியமன்றோ!
~~~~
கேட்டதைக் கொடுப்பவனாம் கீதையின் நாயகன் குருவாயூர் கண்ணனை பரப்பிரம்மம் என இப்பாடல் சொல்கிறது. பிரம்மமானது உருவம் என்ற வரையறைக்கு உட்பட்டதா என்கிற கேள்வி எழலாம். பிரம்மம், அதாவது குணங்கள் இல்லாத நிர்குண பிரம்மம், எப்படி நம் கண்முன்னே திகழ முடியும்?
மேலே எப்படி என்கிற கேள்வியினை சற்றே மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். கண் முதலான புலன்களால் துயத்திடும் பொருளனுபவம், எப்போதும் வரையறைக்கு உட்பட்ட பொருட்களையே துய்த்திட இயலும். இவை சாதாரண, நிலையிலா இன்பத்தினையே தந்திட இயலும். அப்பொருள் இல்லையேல் அவ்வின்பம் இல்லை. நிலையான பேரின்பத்தினைத் தருவது பரப்பிரம்மமாக மட்டுமே இருக்க இயலும். அப்படிப்பட்ட பிரம்மம் குருவாயூரினில் திகழ்ந்திட, அப்பேரின்பத்தினைக் கண்டு களித்திட இவ்விரு கண்களால் மட்டுமே இயன்றிடுமா?
உபநிடதமும் சொல்லும்:
குருவின் துணையுடன் மனதால் மட்டுமே காணக்கூடியது பிரம்மம். அதில் வேற்றுமை என்பதே இல்லை. - பிரஹதாரண்யக உபநிடதம் 4.4.19~~~~ தசகம் 1: சுலோகம் 2 பிரம்மம், மானிடப்பிறப்பு, பக்தியோகம் மற்றும் ஸ்ரீமத் பாகவதமென, கிடைத்தற்கரிய பொருட்கள் நான்கிருப்பினும் நெய்யிருக்க வெண்ணையைத் தேடி அலைபவர் ஆயிரம்! தந்திரங்களையும் மந்திரங்களையும் தரிசனங்களையும் நம்பித் தம்பொழுதை வீணாக்கியவரே அவரெல்லாம்! நாமெல்லாம் இங்கே திடமாய் மனதில் முழுதாய் குருவாயூரப்பனையே நாடிடுவோம்! - அவனே, எல்லாப் பொருட்களிலும் உறைபவன், எல்லாக் குறைகளையும் களைபவன். ~~~~ இப்படியாகச் சொல்லி, அடுத்த வரும் சுலோகம் குருவாயூரப்பனின் திருஉருவத்தினை எடுத்தியம்புகிறது. ~~~~
தசகம் 1: சுலோகம் 3
சாத்வ குணத்தின் தூய வெளிப்பாடே நின்
திருவுருவமென வேதவியாசரின் சொற்களும்
பலமுறை ஒலித்திடுமே.
சச்சிதானந்தப் பேரொளியில் திகழும் பரமன்
செவிக்கும் மனதுக்கும் இன் அமுதமேயாம்.
கைக்கொள்ள எளிதாய் கிடைத்ததென்றே
அருள்பெற்ற அடியார் யாரும் உரைப்பரே.
~~~~
ஒப்பிலா பிரம்மத்தினைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது, அடுத்த சுலோகம்!
இரண்டுக்கும் பொதுவானதை, அழகாகப் பட்டியலிடுகிறது:
தசகம் 1: சுலோகம் 4
பிரம்மம் எனும் ஆழமான பெருங்கடல் செயலற்றதாம்,
எப்போதும் 'நிறை'ந்தாம்,
ஆனந்தம் தரும் அமுதினைக் கொண்டதாம்,
எண்ணிடலடங்கா விடுபெற்ற ஆன்மாக்களை
தன்னிடத்தே முத்துக்களாய் கொண்டதாம்,
தூய சாத்வகுணமே வெள்ளை அலைகளாய் வீச,
எல்லையிலாமல் எல்லாமுமாய் ஆனவனே
தனித்தனியென இல்லாமல்
முழுமையாய் இருப்பதென்னே!
~~~~
தசகம் 1: சுலோகம் 5
ஆதி அந்தமில்லாதவனே,
செயலற்றதாய், பிரம்மமாய் இருப்பினும்,
மாயைதனை எம்மேல் வீசும்
தொழில்கொண்டதேனோ வைகுந்தனே!
தூய அறிவால் இடரேதும் இலாது,
சத்வகுணமே நிறைந்திட, தூய தெளி தேனே!
~~~~~~~~~~~~
செயலே இலாமால் மாயைதனை எப்படி விளைவிக்க இயலும்?
காந்தம் போலவோ? தன்னிடம் எந்த அசைவும் இல்லாமல், தன் வசம் இரும்பை இழுப்பதுபோலவோ!
உபநிடதமும் சொல்லும்:
பிரகிருதி அல்லது இயற்கையினை மாயை அல்லது தோற்றமயக்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதனை நடத்தி வைக்கும் மாயாவி பரம்பொருளேயாம். - ஸ்வேதஷ்வதார உபநிடதம் 4/10.எனினும் இந்த மாயையினால் பரமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவன் சத்வ குணத்தினால் நிறைந்தவன். அவனிடம் 'நான், எனது' எனும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. அவனிடத்தில் இருந்து பிரம்ம சைதன்யம் மறைவுபடாமல் திகழ்கிறது. ~~~~~~~~~~~~~ நாம் தியானிப்பதற்காக குருவாயூரப்பனின் வடிவழகை எடுத்தியம்புகிறது அடுத்த வரும் சுலோகங்கள்:
தசகம் 1: சுலோகம் 6
புதிய மழை மேகங்கள் போலும்
புதிதாய் பூத்த காசாம்பூ மலர்கள் போலும்
அழகாய்த் திகழும் குருவாயூரப்பனே,
நல்லவைகளின் முழுவடிவமாம்,
இலக்குமியின் இருப்பிடமாம்.
அழிபொழியாய் இதயமதில் அருள்பொழிபவனே,
நின்னுருவை எப்போதும் தியானித்திடுவோமே.
தசகம் 1: சுலோகம் 7
மாயைகளைத் தாண்டிய மாயவனே,
முன்னம் நினைத்தேன் புரியாத புதிர் உன் செயலென்று.
மாந்தர் மாயையில் சிக்க துயர் பல ஏன்பட வேண்டும்?
மானிடராய் பிறப்பதன் பயன் இப்போது அறிந்தேன்.
இல்லாமல் எப்படி எல்லையில்லா இன்பத்தைப் பருகிப்பின் அவ்வின்பத்தினை வெளிப்படுத்ததான் இயலும்?
இத்தலத்தில் இவ்வடிவில் அந்த பிரம்மானந்தம் இருப்பது,
இனி எல்லாம் இன்பமயமன்றோ!
தசகம் 1: சுலோகம் 8
உன்னை வணங்கியவருக்கு
உன் வடிவினைக் காட்டுபவன் நீ.
கேட்காமலே வாழ்வின்
குறிக்கோளினை அடையக் கொடுப்பவன்.
இந்திரலோக சுகங்களை ஏங்கும் வீணர்கள் அறியார்
எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பாரிஜாதம்
எம்தலைவன் ஹரியென்று. கணக்கிலா
பரிசுகளைத் தருபவன் நீயன்றோ.
தசகம் 1: சுலோகம் 9
கருணையை மட்டும் தரும் தெய்வங்கள் இருக்க,
தன்னையே தருபவன் தனித்துவமான குருவாயூரப்பன்!
உன்னருகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
தன்னொளியில் திளைப்பவர் கொடுத்து வைத்தவரே!
நின்னொளியில் திளைப்பது நீயுமல்லவோ!
கணக்கிலா நன்னெறிகளின் இருப்பிடமே,
சுரசேனையின் தலைவனே, உனக்கு வணக்கங்கள்!
தசகம் 1: சுலோகம் 10
உயர்தலைவா, முரனை வதம் செய்தவனே,
சங்கரன் முதல் எல்லா தெய்வங்களையும் ஆள்பவனே,
எல்லா வலிமைகளையும் விட வலிவானவான் நீ.
குறையற்ற நின்புகழை துறந்தோரும் பாடுவர்.
திருமகளை எப்போதும் நின்திருமார்பில் கொண்டவனே,
எல்லாம் அறிந்தவனே, பற்றுகளற்ற குருவாயூரப்பனே,
பகவன் என்ற போற்றுதலுக்கு உரிய முதல்வன் நீ மட்டுமே.