அறிவியலில் வேகமான வளர்சியில் பல மைல்கற்களை கடந்து வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், மனித இனத்தால் கற்பனையில்கூட எட்ட இயலா உயரத்தில் இயற்கை வளர்ந்து இருக்க, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தினம்தினம் வியந்து கொண்டே இருக்கிறான் மனிதன். (நம்மூர்காரர்கள் வெட்டி மேடைப்பேச்சில் காலவிரயம் செய்வது வேறு விஷயம்). வெற்று சூனியமாகத் தெரியும் அண்ட வெளிகளை ஆராய்வது மட்டுமில்லாமல், தன் சொந்த பூமியையும், அதிலுள்ள எண்ணற்ற உயிர் வகைகளையும் மனிதனின் வியப்பு ஆராயச்செய்துள்ளது. உயிர் வகைகளில் முதல் முதலாக தோன்றியிருக்க வேண்டிய நுண் உயிர்களை ஆராய்வதில் மேலும் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் - நுண்பொருள் திரைப்படவியல்.
நுண்பொருள் திரைப்படவியல் - MicroCinematography - என்பது நுண்ணிய பொருட்களை படம்பிடிப்பதாகும். இந்த துறையின் பயன்பாடுகள்:
* ஆராய்சிகளில் நுண்நோக்கியுடன் இணைக்கப்பட்டு நுண்ணுயிர்களை படம்பிடித்தல்
* மருத்துவத்துறை - உடல் உருப்புகள், கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி போன்றவற்றை முப்பரிமாண படம் பிடித்தல்
* திரைப்படத்துறையில் சிறப்புக் காட்சிகளில் வியத்தகு special effects காட்சிகளை உருவாக்குதல்
நுண் உயிர் ஆராய்ச்சி:
அமீபாவையும், செல்களையும் எத்தனை நாள்தான் பாடப்புத்தகங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?
அதற்கு அடுத்த கட்டமாய் நுண்நோக்கிகளில் பார்த்து வந்தோம். எனினும் இதுவும் இரண்டு பரிமாண தோற்றமே. இதற்கு அடுத்த நிலையாக இதே நுண்நோக்கிகளில் மிக நுண்ணிய CCD கேமராக்களைப் பொருத்தி நுண் உயிர்களின் அசைவுகளைப் படம் பிடிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படமாக பிடிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. பல்வேறு நோக்குகளில் படம் பிடித்து அவற்றை முப்பரிமாணப் படமாக உருவகம் செய்யலாம். மென்பொருள் கொண்டு தானியங்கி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இன்னமும் மேலும் பல ஆய்வுகள் டிஜிடல் படமாக மாற்றியபின் சாத்தியமாகின்றன.
நகரா படங்களை மட்டுமே பார்த்து வந்த நிபுணர்களும் இப்போது இந்த நேர இடைவெளையை குறுக்கி, செல்களை நம் பார்வையில் 'நகர' வைத்த படங்களைப் பார்த்து வியக்கிறார்கள். செல்களும், ஏனைய நுண் உயிர்களும் இத்தனை வேலைகளை செய்கின்றனவா என்று, புதியதொரு புரிந்துகொள்ளுதலை உருவாக்கியுள்ளன இந்த படங்கள்.
இருபதாம் நூற்றாண்டில் நுண்பொருள் திரைப்படவியல் வளர்சிகளைச் சித்தரிக்கும் குறும்படம் பார்க்கலாமா? சுட்டுங்கள் இங்கே. (QuickTime Player தேவை)
செல்கள் எவ்வாறு தோன்றுகின்றன, மறைகின்றன, எவ்வாறு ஒன்றுக்கொண்று பேசிக்கொள்கின்றன போன்ற பல விஷயங்களை நிபுணர்களும், ஆர்வலர்களும் விளக்கப்படங்களாக செய்து இந்த இணையதளத்தில் வெளிக்கொணர்ந்துள்ளனர். நீங்களும் பார்த்து, கேட்டு பயனடையாலாமே!
மருத்துவத்துறை:
நுண்பொருள் திரைப்படவியலின் உதவியால், இப்போது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை முப்பரிமாணத்தில் கண்காணிக்க முடியும். இரு பரிணாமத்தில் ஸ்கேனர் கொண்டு ஒருசில நோக்குகளில் மட்டுமே கண்காணிக்க முடியும் என்ற நிலைமாறி, இப்போது எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் கருவில் வளரும் குழந்தையின் முப்பரிமாண தோற்றத்தை அச்சில் வார்க்கமுடியும் என்பது பெரியதொரு முன்னேற்றமாகும்.
மேலும் லேசர் அறுவை சிகிச்சை போன்ற அதி நுண்ணிய சிகிச்சைகளுக்கு நேரடியாக நுண்ணிய பகுதிகளை திரையில் பார்த்தவாறு நிபுணர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபட பேருதவியாய் இருக்கிறது இந்த நுட்பம்.
திரைப்படத்துறை:
அறிவியல் வளர்சிக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்கும் பயன்படுகிறது இந்த துறை. மென்பொருளால் உருவாக்கப்படும் மாயத்தோற்றங்களை நிஜமான உருவங்கள் போல பெரிய திரையில் தோற்றமளிக்கச் செய்யும் சாகசமெல்லாம் நுண்பொருள் திரைப்படவியல் கொண்டு சாத்தியமாகிறது.
நல்ல கட்டுரை ஜீவா.
ReplyDeleteநன்றி முத்து.
ReplyDelete