Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்:

Wednesday, September 16, 2009

பூவகத்துள் நின்ற பொற்கொடி!

தாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவாரில்லை
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.
- திருமந்திரம் 1717


தானென அறிந்தோ இலையோ எனினும்
தன்னொளிர்ந்திடுமே தானேத் தானேயென்று
யாரறிவார் இதனை? யாருரை செய்வார்?
பாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.

தனக்குள் நின்றாட எண்ணம் இல்லை
தடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை
அலையாய் கரையும் மனது அகத்தில்
நிலையாய் நிலைப்பது எங்கே?

தானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்
தாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ?
தானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த
தாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ?

இன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்
கொண்டபோதெல்லாம் ஒளிர்வதும் அதுதான் !
துன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்
கொண்டபோதெல்லாம் தோன்றாததும் அதுதான் !
என்ன வேண்டும் எனவறிந்த மனமே,
என்ன வேண்டும் இவ்விரண்டில்?
இன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே
ரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.

பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
அவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்
சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே.

துன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்
அன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட
எண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்!
திண்ணமெனக் கொள்வாய் மனமே.

மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து
மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட
எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;
எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.