Sunday, November 18, 2007

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' : நரேந்திரன்

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?'
'எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'


இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, 'இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்' - என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.

ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், 'உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?' என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, 'உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல' என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், 'நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்' என்றார்.

ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.

இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, "கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் - என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்." என்றார். தொடர்ந்து, "நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் - 'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்." என்றாரே பார்க்கலாம்.

உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தா

(இன்னமும் வளரலாம்...)

Saturday, November 10, 2007

எங்கிருக்கிறான் இறைவன்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் - இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை - தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:


எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ - இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் - இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். "இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன".

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் 'என்னிடம் இருந்து' என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் 'நான்' எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். "நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா" என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், "வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்." என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.